Thursday, June 6, 2013

தமிழ் இலக்கியம் 5

தமிழ் இலக்கியம் 5



தமிழமுதசுரபி

Innamburan Innamburan Sat, Oct 8, 2011 at 6:45 PM
 தமிழமுதசுரபி

‘கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே 
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ 
என்றாலும்,

‘தமிழிசை, தமிழ் எழிலி, தமிழ் மணம், தமிழ்க்கொடி, தமிழ்ச்செல்வி, தமிழ்க்குரல், தமிழ்ச்சோலை, தமிழ்மலர், தமிழினி, தமிழ்த்தென்றல், தமிழருவி, தமிழின்பம்,  தமிழ்ப்பாவை,, தமிழ்ப்பொழில், தமிழ்ச்சிட்டு, தமிழ்மங்கை, தமிழ்மதி, தமிழ்நெஞ்சி, தமிழரசி, தமிழ்நிலம், தமிழ் இலக்கியா, தமிழமுது’ 
என்று அடுக்கி நாமங்கள் ஆயிரம் நவின்று தமிழன்னையை தொழுது வணங்கினாலும்,

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
என்று மும்முறை வாழ்த்தி மனோன்மணிய சுந்தரனாருடன் உறவு கொண்டாடினாலும்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

என்று மஹாகவி பாரதியாரோடு கூட்டமைத்து, ‘இது நன்றோ’ என்று வினவி, யான் பிறந்த விதம் யாது என்று வியந்து, நாடும், கடலும் கடந்து முழங்கி, தாய்மொழியை வணங்கினாலும்,

“சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார் ; தமிழிலே வளர்ந்தார் ; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புத் தமிழ் ; வளர்ப்புத் தமிழ் ; வாழ்வுந் தமிழ் ; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர் ; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ் ; தமிழ் அவர்” எனத் தொடரும் மொழியிலும் (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - பக்.100). “மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்ற தென்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலேயே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும். இன்னொருவருக்கு வேறுவித நடை இயற்கையாகும்” 
எனத் தொடரும் திரு.வி.க. அவர்களின் துள்ளல் நடையில், ஓடோடி வந்து, கட்டித்தழுவி,
‘செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!’
என்று பாவேந்தருடன் கீதம் இசைத்தாலும்,
‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு’ என்று என் போல் பாமரனாய் கொஞ்சினாலும், தமிழமுதசுரபியின் புகழ் பாடுவோமே.
இன்னம்பூரான்
08 10 2011
பி.கு. இது உடனடி உணர்ச்சி பதிவு; குறை களைந்து நிறை காணவும். மேலும் சிறப்புற தொடரவும். 
கருத்து: ராஜம்: தலைப்பு மாற்றப்பட்டுள்ளது, அவரின் ‘அணங்கு’ பற்றிய ஆய்வுக்கட்டுரையை படித்தபின். சுந்தரானர் பாடியதை மாற்றவில்லை.
நாமகரணம்: Jean-Luc Chevillard
நாமாவளி உபயம்: பொள்ளாச்சி நசன்
Maimonides வருகைக்கு முன் எழுதப்பட்டது, இது.

No comments:

Post a Comment