Tuesday, June 25, 2013

அன்றொரு நாள்: ஜூன் 27


அன்றொரு நாள்: ஜூன் 27

Innamburan Innamburan Sun, Jun 26, 2011 at 9:03 PM



அன்றொரு நாள்: ஜூன் 27
எனக்குள் பல வருடங்களாகவே ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம். வங்காளிகளும், தமிழர்களும், அடிமை தகர்ப்பு, தேசாபிமானம், ஒற்றுமை, பாரதமாதாவின் மேன்மை, மத நல்லிணக்கம், கலாச்சார பகிர்வு என்றெல்லாம் கலந்து இயங்கியிருந்தால்,நாமும், நமது நாடும், நமது புகழும், இந்த புவிதனில், உன்னதமாக இருந்திருக்கும் என்பதே, அது. ஸ்வாமி விவேகானந்தாவும், சென்னையும், பிபின் சந்திர பால் அவர்களும் சென்னையும், பங்கிம் சந்திர சட்டோபாத்யாவும், மஹாகவி பாரதியாரும், அஷுடோஷ் முக்கர்ஜியும், டாக்டர் சி.வி.ராமனும் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று (1859) ‘வந்தே மாதரம்’ புகழ் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்களின் ஜென்மதினம். பெங்காலி உரை நடை, புதின இலக்கியம், இதழியல் (பங்க தர்ஷன்), தேசாபிமானம், தீர்க்கதரிசனம் போன்ற துறைகளில், அவர் ஒரு முன்னோடி. பகவத் கீதையை ஆங்கிலத்தில் வடித்த ஸர் எட்வின் அர்னால்ட், இவரது ‘விஷவிருக்ஷம்’  என்ற புதினத்தின் ஆங்கில மொழியாக்கத்துக்கு வழங்கிய முன்னுரையில் (1884), இவரது புத்தி கூர்மை, கற்பனாசக்தி, நாடக வருணனை ஆகியவற்றை போற்றி, தற்கால இந்திய இலக்கிய மேன்மை உதயமாகி விட்டது என்கிறார்.

1857ம் வருட புரட்சி நிகழ்ந்த போது, இவர் கல்லூரி மாணவர். அதன் தாக்கம் இவர் மேல் இருந்ததாக தோன்றவில்லை. 32 வருடங்களாக 1891 வரை, டிபுடி மேஜிஸ்ட்ரேட்ட்டாக பணி புரிந்த பங்கிம் பாபுவின் ஆர்வங்களையும், தாகங்களையும், அவற்றின் ஆக்கங்களையும் கவனித்தால், நமக்கு வியப்பு மேலிடுகிறது. ஆங்கிலத்தில் முதலில் எழுதினார். பெங்காலியில் கவிதையில் தொடக்கம், இவரது இலக்கிய பயணம். உண்மை ஊழியம் அவற்றில் குறுக்கிடவில்லை.

சிறுவயதில் அவருடைய புகழ் பெற்ற புதினங்களில் ஒன்றான ‘ஆனந்தமடம்’ (1882-பெங்காலி) தமிழில் படித்திருக்கிறேன். அது ஒரு துறவிகளின் கூட்டம், அரசை எதிர்ப்பதாக சொல்லும் கதை. அது ஹிந்துத்துவமானது, இஸ்லாமியருக்கு ஆதரவாக இல்லை, இறுதியில் ஆங்கில அரசை போற்றுகிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது பற்றி யானறியேன். எனக்கு தெரிந்தது எல்லாம், இளவயதில், ‘ஆனந்தமடம்’ என் நாட்டுப்பற்றுத்தீயை, கொழுந்து விட்டு எரிய வைத்தது, ஸ்வாமி விவேகானந்தரை, ஒரு ஆனந்தமட சன்யாசியாக கற்பனை செய்து கொண்டது, பிற்காலம் பிபின் சந்திர பால் என்ற எளிய பெங்காலி பள்ளி ஆசிரியர், சென்னை கடற்கரையில் மூன்று நாட்கள் சொற்மாரி பெய்து, திரு.வி.க., வ.உ.சி, வீ.எஸ்.ஶ்ரீனிவாச சாஸ்திரியார், என் மாமனார் பேராசிரியர் தொடூர் மாடபூசி கிருஷ்ணமாச்சிரியார் போன்றவர்களை, மகுடிக்கு மயங்கிய அரவத்தைப் போல் தேசபக்தியில் ஆழ்த்தியது, அதன் பலனாகவோ, வேறு வகையிலோ, பங்கிம் பாபூவின் ‘வந்தே மாதரத்தை’ மஹாகவி பாரதியார், ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குவோம்’ என்று தமிழ் மொழியில் முழங்கியது, ஆகிய நிகழ்வுகள் தான். இந்த ‘வந்தே மாதரத்தை’ பாடித்தானே, எங்கள் உசிலம்பட்டி- வாழ் வருஷநாட்டு மாணவர்களாகிய நாங்கள் 1943/44ல் இற்செறிக்கப்பட்டோம். எனவே, ‘வந்தே மாதரம்’ இன்று வரை, கிட்டத்தட்ட 70 வருடங்களாக,’ எனக்குள்  ஒரு கருத்தை மனம் அசை போட்டவண்ணம்’ இருப்பது வியப்புக்குரியது அல்ல. நள்ளிரவில் திடீரன்று எழுப்பினாலும் அந்த ஆத்மசங்கீதத்தை உரக்கப்பாடுவேன். பங்கிம் பாபூவுக்கு ஜே போடுவேன். இது நிற்க.

ஆனந்தமடத்தின் தாரகமந்திரம் ‘வந்தே மாதரம்’. பிற்காலம் நமது தேசியகீதம் ஆனது. இசை அமைத்தது, ரவீந்தரநாத் தாகூர். நாம் இந்தியர்கள் அல்லவோ! (Argumentative Indians: Amarthya Sen). தேசீயகீதமும் சர்ச்சைக்கு உள்ளானது. அரசு இயந்திரமும் மழுப்பவும், குழப்பவும் தொடங்கியது. இஸ்லாமிய எதிர்ப்பும், ஆதரவும் உள்ளன. அதை எல்லாம் விடுங்கள். தமிழ்நாட்டில் ஞானி என்ற புகழ் வாய்ந்த, ‘உள்ளது உள்ளபடி பேசும்’ சர்ச்சை மன்னர் இருக்கிறார். அவர் 24 09 2006 அன்றைய விகடனில் ‘வந்தே மாதரத்தை’ ஒரு சாத்து சாத்திருக்கிறார் பாருங்கள். அது கண்டு வேதனையால் கொதித்தெழுந்த அரவிந்த் நீலகண்டன் ‘திண்ணை’ இதழில் எழுதிய மறுப்புக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

‘... வந்தேமாதரம்' ஏதோ ஹிந்துக்களின் பாடல் என்கிற ரீதியாக அந்த எழுத்தாளர் எழுதியுள்ளார்... 1881 இல் எழுதப்பட்ட 'ஆனந்தமடம்' நாவல் முஸ்லீம் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஹிந்துத் துறவிகளை கதாநாயகர்களாகக் கொண்ட நாவல் என்பது சரியானதல்ல. வங்காளத்தை அன்று ஆண்ட நவாப் பிரிட்டிஷ் கைப்பொம்மை ஆகிவிட்ட நிலையில் பிரிட்டிஷ¤க்கு எதிராக துறவிகள் போராடும் நாவல் இது. இரண்டு முக்கிய போர்க்கள காட்சிகள் ஆனந்தமடத்தில் காட்டப்படுகின்றன. ஒன்று காப்டன் தாமஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான பிரிட்டிஷ் இராணுவத்தை சந்தான்கள் (அன்னையின் புதல்வர்கள்) எனும் துறவிகள் தாக்கி அழிக்கின்றனர். இறுதிக்கட்டத்தில் மேஜர் எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளையன் தலைமையிலான இராணுவத்தை தாக்கி அழிக்கின்றனர். மேலும் ஹிந்து விடுதலை வீரர்கள் மட்டுமே வந்தே மாதரத்தை தமது முழக்கமாகக் கொண்டிருந்தனர் எனக் கூறுவதும் தவறாகும்... மகாத்மா காந்தி தேசவிடுதலைப் போராட்ட களத்தில் உதயமாவதற்கு முன்பே வங்க சுதேசி இயக்கம் வந்தேமாதரத்தை தன் ஜீவகோஷமாக்கி வீறுகொண்டெழுந்தது. தூத்துக்குடியிலும் அது மக்கள் இயக்கமாக உருவெடுத்தது... பகத்சிங்கின் குருவென கருதப்படும் தியாகி அஷ்பகுல்லா கான் வந்தேமாதரம் கானத்தை பாடியுள்ளார்... பின்னணியில் தேசபக்தியை தட்டி எழுப்பும் ஸ்ரீ அரவிந்தரின் வந்தேமாதர மொழிபெயர்ப்பு உச்சாடனத்துடன் உஸ்தாத் சாதிக் கான் ஊனும் உயிரும் கரைய பாடிய வந்தேமாதரம் 1998 இல் வெளியானது (பாரத்பாலா வெளியீடு)... நம் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் கூறுகிறார்: "...ஏ.ர்.ரஹ்மான் இஸ்லாமியராக இருக்கலாம். ஆனால் அவர் வந்தே மாதரம் பாடும் போது அவரது குரல் அனைத்து பாரத மக்களின் இதயத்திலும், அவர்கள் எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், அனைத்து பாரத மக்களின் இதயத்திலும் ஒலிக்கிறது...’.
மேலும் படிக்க:
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20609295&format=print&edition_id=20060929

 ஐயன்மீர்! தாய்க்குலமே! வருங்காலத்தலைவர்களே! இந்திய குதர்க்கசாஸ்திரிகளைக்கண்டால் காததூரம் ஓடுங்கள். போதுமடா சாமி!
இன்னம்பூரான்
27 06 2011


2 attachments
Bankim_chandra_chatterjee.jpg
20K
vanthEmatharam.pages
132K

Geetha Sambasivam Mon, Jun 27, 2011 at 9:03 AM

மனதை நெகிழச் செய்த இடுகை. ஒரு காலத்தில் ஜீவ மந்திரமாக இருந்த ஒரு வார்த்தை இன்று மதச் சார்புடையதாக மாறியது காலத்தின் கோலம் என்று சொல்ல முடியாது.  எல்லாம் இந்த மதச் சார்பின்மைக்காரர்கள் செய்த கோலம்னு  தான் சொல்லணும்.  உண்மையான மதச் சார்பின்மை என்பதுஅவரவர் அவரவருக்குப் பிடித்த மதத்தை அவரவர் வழியில் பின்பற்றுவதும், அதை எந்த அரசாங்கமும் தடுக்காமல் இருப்பதும், விமரிசனம் செய்யாமல் இருப்பதுமே ஆகும்.  ஆனால் இங்கோ? மதசார்பின்மை என்பதே கேலிக்கூத்தாக மாறிவிட்டது.


வந்தே மாதரம்!

coral shree Mon, Jun 27, 2011 at 11:16 AM


அன்பின் ஐயா,

மிகத் தெளிவான விளக்கமான இடுகை ஐயா. பங்கிம் சந்தர் அவர்கள் பற்றிய அரிய தகவல்கள் பகிர்ந்துள்ளமைக்கு நன்றிகள் பல.

                                                              

Innamburan Innamburan Mon, Jun 27, 2011 at 4:23 PM


நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

No comments:

Post a Comment