Google+ Followers

Sunday, May 26, 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)
அன்றொரு நாள்: அக்டோபர் 30 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)


Innamburan Innamburan Mon, Oct 31, 2011 at 9:13 PMஅன்றொரு நாள்: அக்டோபர் 30
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் (30 10 1908 ~30 10 1963)
மங்கலான நினைவில் மங்களமாக வீற்றிருப்பவரை பிற்கால இனவாத இழுபறிகளுடன் இணைத்துப் பேச மனம் தயங்குகிறது. ஸ்வாமி விவேகானந்தர், திலகர், பிபின் சந்திரபால் ஆகியோர் தன் சொல்லால், ஏதோ மந்திர உச்சாடனம் செய்த மாதிரி, கட்டிப்போட்டு, சபையோரை, தன் வயம் இழுத்துவிடுவார்கள். அந்த வரிசையில் தான் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தெரியும். ‘நாடி நரம்புகளை சூடேற்றும் மேடைப்பேச்சு’ என்று திரு.அ.பிச்சை சொல்வது மிகையல்ல என்று தான் என் நினைவு.. கூட்டம் அபாரமாகக் கூடும். நிசப்தத்துடன் கேட்கும். வீறு கொண்டு எழும். எங்கும் அவருக்கு வணக்கத்துடன் கூடிய மரியாதை நிச்சயம். ஆங்கிலத்தில் enigma  என்ற சொல்லை ‘பூடகம்’ எனலாம். ஆன்மீகம், தேசாபிமானம், பொதுவுடமை, பழைய பண்பு, சீர்திருத்தம், அன்றாட அரசியல் எல்லாம் கலந்த தேவரவர்கள் ஒரு பூடகமான மனிதர் என்று தான் அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.
முதலில், அதிகம் பேசப்படாத திருப்புமுனை ஒன்றை பதிவு செய்யவேண்டும்.1907 ஸூரத் காங்கிரஸில் காலணிகள் பறந்தன.தீவிரவாதம் (‘சுதந்திரம் என் பிறப்புரிமை’ அவ்வளவு தான்.) பிறந்தது.பல்லாண்டுகளுக்கு இந்த புகைமண்டலம் சூழ்ந்த பின், நேதாஜி தலையெடுத்தார். காந்திஜியின் எதிர்ப்பு. அதையும் மீறி, ஏற்கனவே ஹரிபுரா காங்கிரஸ்ஸின் அக்ராசனராக இருந்த நேதாஜி, மறுபடியும், மார்ச் 11, 1937 அன்று திரிபுரா காங்கிரஸ் அக்ராசனராக வாகை சூடுகிறார். ஹரிபுராவில் புரவி மேல் சவாரி. திரிபுராவில் ஸ்ட் ரெச்சர் மேல். என்ன பிரயோஜனம்? காந்திஜியோ விடாக்கொண்டன். டம் டமா டுமீல் நிழல் யுத்தம். நேதாஜி மே 1, 1937ல் ராஜிநாமா நிர்ப்பந்தம். ஜூலை 6, 1937ல், காங்கிரஸுக்குள்ளேயே ஃபார்வேட் ப்ளாக் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஶ்ரீனிவாஸ ஐயங்கார், ப.ஜீவானந்தம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் தான் சூத்ரதாரிகள். ஸெப்டெம்பர் 10, 1939 அன்றைய காங்கிரஸ் கமிட்டி: (ஜெயப்பிரகாஷ், ஜின்னா ஆகியோர் இருந்தனர்). நான்கு நாட்கள் தொடர் விவாதம். பிரிட்டனை இரண்டாவது உலகப்போரில் ஆதரிக்க வேண்டும் என்ற காந்திஜியின் வாதத்தை எதிர்த்து, நேதாஜியும், தேவரும் வெளியேறினர். என்ன தான் காந்தி மஹானின் அஹிம்சை உன்னதமானாலும், நேதாஜி திருப்புமுனை வலுவிழந்தது, ஒரு சோக சரித்திரம். இந்த பின்னணியில்:

முக்குலத்தோர் முன்னிலையில் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்வு. 
நடு நிசி உரை, உசிலம்பட்டியில்: 1943-44 அளவில், தோராயமாக. அங்கு வருகை புரிந்த தேவரவர்கள் வேறு; குருபூஜைக்கு தற்காலம் உட்படுத்தப்படும் தேவர் வேறு என்று தான் என்னுடைய புரிதல். சில விஷயங்கள் புரிய ஒரு ஆயுசு காலம் வேண்டிருக்கிறது. பள்ளிப்பருவத்தில், போலீஸ் என்னிடம் ஏன் இத்தனை காட்டமாக இருந்தார்கள் என்பது புரிய இன்றைய ஆய்வு வேண்டியிருந்திருக்கிறது. ஆம். விடுதலைப்போரின் நேதாஜி திருப்புமுனை பெரியவர்களின் கவனத்தையே ஈர்க்கவில்லை; என் மாதிரி சிறுவர்கள் எந்த மூலை? ‘உன் எதிரி என் நண்பன்’ என்ற நேதாஜியின் வசனம் எங்கள் பாசறை புல்லட்டீன்களில் ஒன்று. காந்திஜியின் ஜன்மதின விழாவில், ‘காந்திஜி பேச்சுக்குத் தான் சரி. வன்முறை மட்டுமே வெள்ளையனுக்குப் புரியும். எடு தடியை. நேதாஜி தான் எங்கள் தலைவர்...’ என்று அரசியல் ஞானமே இல்லாத முந்திரிக்கொட்டை  பேசினால், போலீஸ் ஏன் காட்டமாக இருக்கமாட்டார்கள்? அந்த வால்பையனை தேவர் முன் ஏன் நிறுத்தமாட்டார்கள்? அவரும் ஏன் ஷொட்டு தட்டிக்கொடுக்க மாட்டார்? போலீஸ் ரவணப்பனும் ஏன் முதுகில் அறைந்து வீட்டுக்கு இழுத்துக்கொண்டு போகமாட்டார்? எனக்கு அந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைத்தான் தெரியும். அவருடைய உரையிலிருந்து ஒரு சொல் நினைவில் இல்லை. அந்த மறவனின் வீராவேசம் மட்டும் தனித்து, உரத்து ஒலிக்கிறது.

அ. பிச்சை அவர்கள், விருதுகளை தாங்கி வரும் தலைவர்கள், தேவரரவர்களை ‘எங்கள் சேது வேங்கை’(எஸ்.ஶ்ரீனிவாஸ ஐயங்கார்), ‘நான் பார்த்திபன் என்றால், பசும்பொன் தேவர் தான் சாரதி’ ( மூதறிஞர் ராஜாஜி), ‘காங்கிரஸைக்காத்தான்’ (தீரர் எஸ்.சத்தியமூர்த்தி), ‘தென்னாட்டுத்திலகர்’ (வீர சாவர்க்கர்), ‘தென்னாட்டு போஸ் (நேதாஜி),’...தூய எண்ணமும், துணிச்சலும் கொண்ட மரியாதைக்குரிய தேசியத்தலைவர்’ (கர்ம வீரர் காமராஜ்) என்று புகழ்ந்ததை பதிவு செய்திருந்தாலும், அந்த தலைவர்கள் பல அணிகளை சார்ந்திருந்தாலும், தேவர் அவர்களின் புகழ் மங்கவில்லை என்றாலும், ஃபெப்ரவரி 18,2011 அன்று யாரோ அறிமுகம் ஆகாதவர் எனக்கு அனுப்பிருந்த திடுக்கிடவைக்கும் கட்டுரை ஒன்றை படித்தேன். அதன் தலைப்பு:
“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்”
தேவரவர்களின் வாழ்க்கை வரலாறு,
இஸ்லாமிய செவிலித்தாயிடம் வளர்ந்ததும்,
கிருத்துவ பள்ளிகளில் படித்ததும்,
 செல்வந்தரான நிலச்சுவான்தாரராக இருந்தும், விவசாயிகள் சங்கம் அமைத்ததும், 
‘தொண்டுக்கு ஏற்றது துறவறமே’ என்று வாழ்ந்ததும்,
 தொழிற்சங்கங்கள் அமைத்ததும்,
ஹரிஜன ஆலய பிரவேசத்திற்கு மதுரை வைத்யநாத ஐயர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததும்,
1934ல் அபிராமம் கிராமத்தில் கள்ளர் கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து, முக்குலத்தோரை கூட்டியதும்,  
1936ம் ஆண்டில் சூறாவளிப்பிரசாரம் செய்து காங்கிரஸுக்கு வெற்றி பெற்றதும், 
அக்காலத்தில் பதவியை துறந்ததும்,
காமராஜருக்கும் உதவியதும்,
ஜஸ்டிஸ் கட்சியின் போக்கை கண்டித்து 1937ல், இவர் இராமநாதபுரம் ராஜாவை எதிர்த்தபோது தந்தை உக்கிரபாண்டியத்தேவர்  மகனுக்கு எதிராக பிரசாரம் செய்தும்,தேவர் வெற்றி பெற்றதும், வேட்பு மனுத்தாக்கலுக்கு சர்தார் படேல் பணம் அனுப்பியதும்,
பிரிட்டீஷ் அரசு இவருக்கு வாய்ப்பூட்டு சட்டம் விதித்ததும்,
அது போதாது என்று காங்கிரஸ் அரசாங்கமே, இவரை ஒரு கிரிமினல் வழக்கில் 18 மாதம் உள்ளே தள்ளியதும், 
விடுதலை ஆனவுடன், பாதுகாப்பு சட்டத்தின் கீழே உள்ளே தள்ளியதும்,
 தேவரவர்களின் வரலாற்றுக்கு நேரடி சம்பந்தமில்லாத ஜப்பான் சரணடைந்து,யுத்தம் முடிந்ததால், மே 5 ,1945 அன்று பல வருட சிறைவாசத்திற்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டதும், 
சட்டசபை/நாடாளுமன்ற தேர்தல்களில் வாகை சூடியதும், 
1962 ல் நாடாளுமன்ற தேர்தலில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள டில்லி செல்ல முடியாததும், தான் ஜனித்த அக்டோபர் 30ம் தேதியே, 1963ல் மறைந்ததும் சாமான்ய விஷயங்கள் அல்ல. 

அவற்றை எல்லாம் விலாவாரியாக எழுதாமல், இந்த ‘ஜாதி வெறியன்’ கட்டுரையை முன் வைப்பதின் காரணம் என்ன? தமிழகத்தில் எந்த பிரமுகருடைய வரலாற்றை ஆவணங்களுடன், ஆதாரங்களுடன், மிகையும், தொகையும், கட்டுக்கதையும் இல்லாமல், பெறுவது குதிரைக்கொம்பாகி விட்டது. தயை செய்து உசாத்துணையில் சுட்டப்பட்ட அந்த கட்டுரையை படியுங்கள். எந்த அளவுக்கு நடுவு நிலை பிறழ்ந்து, காழ்ப்புணர்ச்சி ஊட்டி, கொம்பு சீவப்பட்ட வரலாற்று பதிவுகள் உலா வருகின்றன என்று புரியும். சிலர் நம்பவும் செய்வார்கள். அது தான் போகட்டும். அ.பிச்சை அவர்களின் தொகுப்பு நூல் கட்டுரையில் (தேவர், காமராஜருக்கு) ‘வரி செலுத்தி வாக்காளராக்கவும் வழி வகுத்தாராம்’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அது என்ன ‘ம்’ விகுதி? அதே நிகழ்வை நீட்டி, முழக்கி, பழித்துப் பேசுகிறது ‘ஜாதி வெறியன்’ கட்டுரை! யாரை நம்புவது? அது தான் போகட்டும். 1957ல் இம்மானுவேல் சேகரன் தேவந்திரன் என்ற தலித் தலைவர் கொலையுண்ட சில தினங்களில், தேவரவர்கள் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு சிறை செல்கிறார். ஜனவரி 1959ல், குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறைக்கு அவர் கொணரப்பட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டவை. அ.பிச்சை அவர்களின் கட்டுரையில் இதை பற்றி பேச்சு, மூச்சு இல்லை. 
என்ன சொல்லி என்னை ஆற்றிக்கொள்வது? களைத்துப் போனேன். எனக்கு புரிந்தவரை,
ஈற்றடியாக:
~ தேவரவர்கள் தெய்வபக்தி மிகுந்த ஆன்மீக இயல்பு கொண்டவர்;
~அவர் பேச்சில் கனல் பறக்கும். அதில் ஆதாயம் பார்த்தவர்களும், அவரை, அவர் அறியாமல், பணயம் வைத்தவர்களும் உண்டு;
~ சிறையில் சுயம்பாகம். தனக்கு கட்டுப்படுகள் விதித்துக்கொண்டவர்;
~ பிற்காலம் அவருடைய குருபூஜை நிம்மதியில்லா நிகழ்ச்சி. 1997ல் ஒரு நாளிதழ், 1957லிருந்தே, அதாவது, தேவர் அவர்களது காலத்திலிருந்தே, வன்முறை இருந்ததாகவும், வருடா வருடம் அதிகரிப்பதாகவும் எழுதியது;
~ 2005ல் மற்றொரு இதழ் 25 கட்சிகள், கக்ஷி கட்டிக்கொண்டு, போட்டா போட்டியாக, வன்முறை பின் நிற்க, குருபூஜைக்கு, அணி வகுத்ததாக சொல்கிறது.
~ என் மங்கலான நினைவில் மங்களமாக வீற்றிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இது எல்லாம் மனவலியை தந்திருக்கும்;
~ இனி எந்த வரலாற்று பதிவுகளுடனும், ஒரு மூட்டை உப்பு சேர்த்துப் படிக்கவேண்டுமோ என்ற கவலை உதிக்கிறது. 
இன்னம்பூரான்
31 10 2011
thevar_stamp.jpg

உசாத்துணை:
த. ஸ்டாலின் குணசேகரன்: (2000) தொகுப்பாசிரியர்: விடுதலை வேள்வியில் தமிழகம்:
~அ.பிச்சை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்; பக்கம் 541 ~  551;
Seethaalakshmi Subramanian Mon, Oct 31, 2011 at 9:39 PM


அருமையான பதிவு
அர்த்தமுள்ள பதிவு
அரசியல் குட்டையில் குப்பைகள் அதிகம் அண்ணா
நம்போன்ற வயதானவர்கள் சாட்சிகள்
இப்பொழுது மூளைச்சலவை செய்யப்பட்டவர்களால்
நிறைய எழுதப்படுகின்றன. 
இதுவும் போகும்
இதுதான் வாழ்க்கை
நான் மதுரைக்காரி
மனம் வேதனைப்படுகின்றது
அதுதான் முடியும்
சீதாலட்சுமி

Dhivakar Tue, Nov 1, 2011 at 4:56 AM


பசும்பொன் தேவரைப் பற்றி அடியேன் சேகரித்த விவரங்களைப் பொறுத்தவரை

தேவர் தெய்வத் தமிழ்நாட்டில் அவதரித்த ஒரு தெய்வப் பிறவி!!

ஒரு தெய்வப் பிறவியால் என்னன்ன நன்மைகள் ஒரு நாட்டுக்குக் கிடைக்குமோ அத்தனையும் அவரால் கிடைத்தன. முக்கியமானது ஆன்மீகத்தை அதன் உண்மையான நிலையிலிருந்து சாதாரண மக்களுக்குக் காண்பித்து கற்பித்தது.

திவாகர்

2011/11/1 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Thevan Tue, Nov 1, 2011 at 12:22 AM


அருமையான பதிவு.

௧ நவம்பர், ௨௦௧௧ ௩:௦௯ முற்பகல் அன்று, Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com> எழுதியது:


Subashini Tremmel Tue, Nov 1, 2011 at 4:54 PM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan , Subashini Kanagasundaram
முத்துராமலிங்க தேவரை பற்றி பல விஷயங்களை இந்தப் பதிவின் வழி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
இவரது பேச்சுக்களின் பதிவுகள் (ஒலிப்பதிவு அல்லது கட்டுரைகள் ) கிடைக்க வாய்ப்புள்ளதா?

சுபாInnamburan Innamburan Tue, Nov 1, 2011 at 5:33 PM

To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88
நான் இங்கு இணையதளங்களில் புத்தகங்களுக்காகவும் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால், மற்றவர் சரிதைகளிலிருந்து கிடைக்கும் குறிப்புகள் உதவலாம், சுபாஷிணி. நேற்று படித்தது எல்லாம் நிம்மதியை குலைக்கும் வகையில் இருந்தன, பல மணி நேரம் செலவு செய்தும். என் ஆய்வை தொடருவதாக உத்தேசம். எனக்கு அவரை நன்றாக நினைவு இருக்கிறது. மற்றவர்கள் உதவினால், மேலும் நல்லது. ஆய்வு செய்யும் வகை சொல்லியும் தருவேன், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை பொறுத்து.
இன்னம்பூரான்.
01 11 2011Subashini Tremmel Tue, Nov 1, 2011 at 5:49 PM


இமலாதித்தன் என்று ஒரு நண்பர் எழுதிக் கொண்டிருந்தார். அவரைச் சில மாதங்களாகக் காணோம். அவர் இந்த முயற்சியில் உதவலாம். அவரிடமிருந்து பதில் வந்தால் கேட்டுப் பார்ப்போம்.

அன்புடன்
சுபா