Google+ Followers

Sunday, July 23, 2017

தமிழ் சமுதாயம் 2077 [7]:‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

தமிழ் சமுதாயம் 2077 [7]
‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’


இன்னம்பூரான்
ஜூலை 22, 2017
பிரசுரம்: http://www.vallamai.com/?p=78412

இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் நன்றாக அமையவில்லை என்பது எல்லாருடைய ஏகோபித்தக் கருத்து. அதை நல்வழிப்பாதையில் இயக்கமுடியும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 1942 ல் இன்றைய ஜெர்மனியை பற்றி கனவு கூட கண்டிருக்கமுடியாது. எனவே, ‘தமிழ் சமுதாயம் 2077’ பற்றிய என் கனவுகளையும், வரலாற்று அலசல்களையும், எதிர்காலம் பற்றிய கணிப்புகளையும் பதிவு செய்கிறேன். 

இன்றைய சூழ்நிலையில், நான் கூறுவது பலருக்கு பிடிக்காது, உள்ளதைச் சொன்னால், உடம்பு எரியும் என்பதால்.

நம்மை பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முதன்மை இடம் வகிப்பது: ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’.
இன்றைய சட்டசபையில் அங்கம் வகிப்பவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். திருமங்கலம், தஞ்சாவூர், ஆர்.கே.நகர் என்ற ஊர்கள், தமிழ் நாட்டில் பிரதிநிதித்துவம் ஒரு கேலிக்கூத்து என்பதை நிரூபித்து விட்டதாலும், அமரராகி விட்ட ஜெயலலிதாவின் ஆசாபாசங்கள் பொது மேடைக்கு வந்து விட்டதாலும், அவரின் மரணத்தை பற்றிய முடியா வழக்குகளும், திகில் மர்மங்களும், அ.தி.மு.க. தாயாதி சண்டைகளும், வழக்குகளும், உச்சநீதிமன்ற தீர்வுகளும், தடாலடி வருமானவரி ஆய்வுகளும், அதருமமிகு சென்னையை பற்றி வெளி வரும் தகவல்களும் நம்மை தலை குனிய வைக்கின்றன. ஜல்லிக்கட்டு, விவசாயிகளின் துன்பம், மருத்துவர்களின் தகுதிக்கு உரிய இடம் கொடுப்பது, மீனவர்கள் படும் இன்னல்கள் என்ற பொது நல சேவைகளை பற்றி தமிழ் சமுதாயமும், அரசும் ‘ஏனோ தானோ சமாதானமாக’த்தான் நடந்திருக்கின்றன. சென்னைக்கு வடக்கே எங்கு சென்றாலும் கேலிக்கு இடம் கொடுக்கிறோம். 

இன்று தமிழ் சமுதாயத்தைப் போற்றி பாதுகாப்பது, தற்கால முதல்வரா? வந்து போய்வரும் மாஜி முதல்வரா? நிழல் மனிதரா? அல்லது நிழல் மனிதர்களா? என்ற வினா ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டால், எல்லா விடைகளும் பொருந்தும்/பொருந்தாது. எதிர்கட்சிகள் கலங்கிய நீரில் மீன் பிடிக்கின்றன. 
மக்கள் நலனில் யாருக்காவது அக்கறை இருக்கிறதா என்று கேட்டால், மாண்புமிகு. (அந்த விருதுக்கு உரிய ஒரே மனிதர்) இரா.செழியன் அவர்கள் அமரராகிவிட்டாரே என்கிறார்கள். இது நிற்க.

ஒரு விஷயத்தில் பல்லாண்டு பல்லாண்டுகளாக சட்டசபை மரபு ஒன்று இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அது போற்றத்தக்க மரபு அல்ல. அரசை நடத்துபவர்கள் மனித குலம்.   சுயநலம், சொத்து சேர்ப்பது, கையூட்டு, மக்களுக்கு விரோதமான செயல்கள் ( உயிர் வாழ்பவர்களுக்கு மரண சான்று அளிப்பது, குட்கா கொடை, கலப்பட கொலைகள் போன்றவை) தழைத்து வருகின்றன. காசை தூசாக்குவதில், சட்டத்தை மட்டம் தட்டுவதில் பல்கலைக்கழகம் முதல் பல அரசியல் துறைகள் தலைமை தாங்குகின்றன. அப்படிப்பட்ட அரசை கண்காணிக்கும் தணிக்கை ஆவணங்களை சட்டசபை கதவுகளை மூடுவதற்கு அரை வினாடி முன்னால் தாக்கல் செய்யும் இந்த மரபு மக்களால் நிந்திக்கப்படவேண்டும். ஆடிட் ரிப்போர்ட் சான்றுகளுடன் பேசும். அவலங்களை கோடிட்டுக் காட்டும்.  ஜூலை 19, 2017 அன்று தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்க நேரம் இல்லாததால், அனாதையான ஆறு ஆடிட் ரிப்போர்ட்கள் என்ன சொல்கின்றன? யாரும் படிக்கமாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்னால், ‘தணிக்கைத்துறை ஒரு முட்டுக்கட்டை’ என்ற தொடரை பதிவு செய்து வந்தேன். நான் ஒருவனே அதை படிப்பது தெரியும்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: