Google+ Followers

Wednesday, April 13, 2016

மொழியின் வரலாறுதமிழ் மரபு அறக்கட்டளை சித்திரை வரவேற்பாக பிரசுரித்த சிறப்பு மலரில் வந்துள்ள என் கட்டுரை, இது.


மொழியின் வரலாறு

இன்னம்பூரான்
ஏப்ரல் 9, 2016

தகவல்/கருத்து பரிமாற்றம் மனிதனின் நிகரற்ற திறமை என்பது ஒரு மாயை. எறும்புகள் அணி வகுத்து செல்லும் போது, நின்று பேசி விட்டு செல்கின்றன. பூனையும் நாயும் நமக்கு உற்ற தோழர்கள்; பாப்பி என்ற பூனை என்னை காலையில் 4 மணிக்கு எழுப்பி தின்பண்டம் கேட்பாள். டிஃபன் என்ற நாய் வீட்டுக்கு எஜமானனாக பீடு நடை போட்டாலும், நூறு ஆணைகளில் ஒன்றைச் சொன்னால் உடனடியாக பணிந்து இயங்குவான். ராணுவ நாய்கள் தியாகச்சுடர்கள். கிளியும் மைனாவும் திருப்பிச்சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன. விகடன் ஆசிரியர் அமரர் பாலசுப்ரமணியன் என்னை தனது பறவைப்பண்ணைக்கு அழைத்து சென்ற போது இரு ஈமு பறவைகள் அவருக்கு மெய்காப்பாளராயின. ஒரு கிளி அவர் வந்து கொஞ்சும் வரை, ‘பாலூ’ ‘பாலூ’ என்று கூவித்தீர்த்து விட்டது. சிங்கத்தையும் புலியையும் நன்கு பயிற்சிக்கு உட்படுத்தமுடியும். யானைக்கு வடமொழி புரியும் என்று மணக்குளத்து விநாயகர் கோயில் யானையின் பாகன் செய்து காண்பித்தார். அறுபது வருடங்களுக்கு முன்னால் இலங்கை பிரதமர் லண்டன் மிருக கண்காட்சி மையத்து யானையுடன் நீண்ட நேரம் பேசி, எல்லாரையும் அசத்தினார். பீடிகை முற்றிற்று.

c. 484–425 BC

தொல்காப்பியம் தொன்மை வாய்ந்த தமிழரின் வாழ்வியல் இலக்கணம். ‘என்மனார்’ என்ற தொல்காப்பிய அடக்கம் மிகுந்த சொல், அதற்கும் தொன்மையான தமிழ் மொழி படைப்புகளை கூறுகிறது. காலத்தின் பரிமாணத்தில் அத்துடன் ஒப்புமை உடையது எனலாம், ஹெரொடோட்டஸ் என்ற கிரேக்க அறிஞர் மூலம் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முன்னால்கிடைத்த  ஒரு தகவலும், ஆராய்ச்சியும், முடிபும். முதலில் மூன்று வினாக்கள்:


  1. ‘கல் தோன்றி, மண் தோன்றா’ காலகட்டத்தில், மொழியில் புலமை, பெற்றபோதே கிடைத்ததா? பின்னர் பெறப்பட்டதா?;
  2. மொழி இயற்கையின் வரமென்றால், ஏன் பற்பல மொழிகள்?:
  3. பிறந்தவுடன் குழவியை கண்காணாதத் தேசத்திற்கு அனுப்பி தனிமையில் விட்டு விட்டால், அது பழகப்போகும் மொழி யாது?. 

ஹெரொடோட்டஸ் எகிப்தில் ( தமிழாக்கம் அருமையாக அமைந்திருப்பதை நோக்கவும்.) பயணம் செய்யும் போது, சாம்திக் ("Psamṯik") என்ற அரசன் மொழியின் மூலாதாரத்தை அறிய, இரு குழந்தைகளை ஒரு இடையனிடம் கொடுத்து, அவர்களிடம் யாரும் பேசக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவை போட்டு விட்டாராம். ஆனாலும் அவர்களுக்கு அன்னமிட்டு சிரத்தையுடன் கவனித்து, அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு, முதற்சொல் அமைந்த விதத்தை தெரிவிக்கவேண்டுமெனெ ஆணை. ஒரு மழலை "βεκὸς" என்று கூவினானாம். மற்றொரு மொழியில் அது ரொட்டியை சுட்டும். அந்த மொழி தான் ஆதிமொழி என்று  சாம்திக் அறிவித்து விட்டானாம். ஆதாரம் இல்லாத கதை தான். ஆனால், ஹெரொடோட்டஸ் சொன்ன செய்தியல்லவா!  அப்படியிருந்தாலும் அவர் கூறிய ஆரூடம் பலித்தது எனலாம். என்ன தான் சொன்னாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 

1769 AD

பற்பல நூற்றாண்டுகள் கழிந்த பின் வந்த ஒரு ஆய்வை நோக்குவோம்.
கிட்டத்தட்ட 250 வருடங்கள் முன்னால் பெர்லின் அறிவியல் மையம், சில வினாக்களை எழுப்பி, ஒரு போட்டி வைத்தார்கள்: வினாக்கள்:
  1. மனித இனம் தன்னுடைய இயல்பான போக்கில் இயங்கி ஒரு மொழியை உருவாக்க முடியுமா? 
  2. அது சாத்தியம் என்றால், அவர்கள் கையாளப்போகும் உத்திகள் யாவை? 
  3. மேற்படி வினாக்களுக்கு, ஆய்வின் அடிப்படையில் விடை அளிக்கவேண்டும்.
வாகை சூடிய கொட்ஃப்ரிட் ஹெர்டர் என்பர் ‘மொழியின் மூலம்’ என்ற கட்டுரையில்  மனிதன் விலங்கினத்தை சார்ந்தவர் தான். அதனால் அவனிடம் மொழியறிவு ஏற்கனவே இருந்தது தான் என்றார். 170 வருடங்கள் கழிந்த பின் ‘மொழியை பெற்ற பேறுப் பற்றி அதிசயமான ஒரு நிகழ்வு நடந்தேறும் என்பதை அந்த அறிவியல் மன்றமே எதிர்ப்பார்த்து இருக்கமுடியுமா என்பது வியப்புக்குரிய கேள்விக்குறி தான்.


1937
டாக்டர் ரிச்சர்ட் ஆல்பெர்த் வில்சன் ‘மொழி பிறந்த வரலாறு’ [1937] என்ற நூலை எழுதினார். சிறிய நூல் தான்; ஆனால், இருபது வருட ஆய்வின் பயன். தன்னுடைய நூல்  புறவெளிக்கும் [Space] காலதேவனுக்கும்  [Time]  உள்ள உறவு பற்றி அமைந்தது என்றார். அவர் என்னமோ பெரிய கை அல்ல. காலாவட்டத்தில் அந்த நூலுக்கு சமாதி வைத்திருப்பார்கள். ஒரு எதிர்பாராத விந்தை நிகழ்ந்தது. நாடகத்துறையிலும், இலக்கிய விமர்சனத்திலும், சமத்துவ பிரச்சாரத்திலும் உலகப்புகழ் பெற்ற பெர்னாட் ஷா இந்த நூலை பரிந்துரை செய்ததுமில்லாமல், நீண்டதொரு முகவுரையும் அளித்தார். ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின. மொழியின் பிறப்பும், அது புறவெளிக்கும் காலதேவனுக்கும்  உள்ள உறவின் அரும்தவப்பேறு என்ற கருத்து, கடுகு சிறுத்தது ஆனாலும் காரம் போகாது என்பது போல, ஒரு நவீனத்துவமாக அமைந்து விடுகிறது என்பதை எல்லா மொழிகளிலும் காணலாம்.

தமிழில், தொன்மை வாய்ந்த பரிபாடலில்:
நிலனும், நீடிய இமயமும், நீ. 
அதனால், 
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என, 
அன்னோர் யாம் இவண் காணாமையின், 
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55 

மன்னுயிர் முதல்வனை ஆதலின், 
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே! 
நின் ஒக்கும் புகழ் நிழலவை; 
பொன் ஒக்கும் உடையவை; 
புள்ளின் கொடியவை; புரி வளையினவை; 60 

1979

ஹெரொடோட்டஸ்ஸின் ஆரூடம் நிக்கராகுவேயில் பலித்தது. காது கேளாத சிறார்களின் பள்ளிகளில் அவர்களுக்கு மொழியின் பயன் கிடைக்கவேண்டி செய்த முயற்சிகள் வியர்த்தமாயின. அமெரிக்காவிலிருந்து 1986ல் வரவழைக்கப்பட்ட நிபுணர் ஜூடி கெகல் கண்டு கேட்டு அனுபவித்த வியப்புக்குறிய விஷயம்: அந்த குழந்தைகள், பெரியவர்களின் பாடங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு, தாங்களே உருவாக்கிய மொழியில் பேசிக்கொண்டார்கள், இயல்பாகவே. ஆசிரிய பெருமக்களுக்குத் தான் அது புரியவில்லை. தற்காலத்தில் குழந்தைகள் கற்றுக்கொடுத்தது பல நூல்களாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான சிறார்களுக்கு உதவுகிறது.

இந்த கட்டுரையின் இலக்கு ஆய்வுக்குறிய விதங்களில் எல்லாமொழிகளின் வரலாறு அமைகிறது, அதில் ஏற்படுத்தப்படாமல் ஏற்படும் விந்தைகள் தான் நமக்கு தாரகமந்திரங்களாக அமைகின்றன என்ற கருத்தை மற்றவர்கள் அலச வேண்டும் என்ற ஆர்வமமே.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://biblelight.net/tower-painting-parliament.jpg