Google+ Followers

Tuesday, October 18, 2016

வம்பும் தும்பும் ~3

வம்பும் தும்பும் ~3

இன்னம்பூரான்
18 10 16

கொஞ்சம் ரசாபாசம் ஆயிடுமோ என்று கவலைப்பட்டேன். தற்காலம் தமிழ்க்குழுக்களில் எதிர்மறை வழிமுறை கோலோச்சுவதால், அச்சத்தின் மறு உருவாகிய நான் ‘நாலடியாரும், பெரியாரும், தமிழ்த்தென்றலும், குல்லுகப்பட்டரும்’ என்ற ஆய்வுக்கட்டுரையை கேம்பிரட்ஜ் பல்கலையின் அழைப்பிற்கிணங்க அனுப்புவதில் முனைந்து இருந்த பொது, வாசற்கதவை, அந்தக்காலத்து தீவட்டிக்கொள்ளைக்காரன் தட்டுவது போல் (இது நிஜமா நடந்ததின் மலரும் நினைவு.) ஒருவர் தட்டிய பராக்கிரமத்தில் அதுவே திறந்து கொண்டது. பார்த்த ஜாடையாக இருந்தாலும், ஆள் புரியவில்லை. கார்டு கொடுத்தார்: டணால் கிராம்பு. உலருவதற்காக என் அம்மா தூணில் சுற்றிய புடவையை அடித்துப்பிடித்துக்கொண்டு அவிழ்த்து, அப்பாவின் வாக்கிங் ஸ்டிக்கினால், மடிசஞ்சிக்குள் ஒளித்து வைத்தேன்.  இல்லாவிட்டால், அம்மா இது தீட்டு என்று கொளுத்தி விடுவாள்.   அந்தக்காலத்துப் பாப்பாத்தி. அவளுக்கு டணால் கிராம்பாரின் அருமை பெருமைகள் தெரியாது. மிலேச்சன். தள்ளுபடி அவ்ளவு தான்.

டணால் சுபாவம் உலக பிரசித்தம். அதனால் தான். ‘கொஞ்சம் உள்ள வந்துட்டுப்போங்கோ’ என்று கொஞ்சலும், கட்டளையுமாக உக்கிராண அறையிலிருந்து குரல் வரவே, நம்ம கிராம்பு கிட்ட சாக்குப்போக்கு சொல்லிவிட்டு, உள்ளே பிரவேசித்தேன். என்னடா பொம்மானாட்டிக் குரலாக இருக்கே என்று, டணால் கூடவே வந்துட்டான். வேறு வினை வேண்டாம். இவளும், சேலத்துப்பொண்ணா, கையில் கிடைத்த புழுதுணியால், வாயை   காபந்து செய்து கொண்டாள். கராட்டே  கப்ரியேல் சொல்லிக்கொடுத்தபடி துடுப்பை அடுப்பில் காய்ச்சினாள். தாலிக்கயிறுடன் முடிச்சுப்போட்ட வெள்ளித்தாயத்தைத் தொட்டுப்பார்த்துக்கொண்டாள். அதனுள்ளே நல்ல சாத்தூர் மொளகாய் பொடி.  இசைகேடாக, தொலைக்காட்சியில் ஒலித்தப் பாட்டு, ‘மாலையிட்டவன் போல் வாயில்...’ நான் டபக்னு அணைச்சுட்டேன். 

சொல்லி வச்ச மாதிரி, டெலிபோன் அலறியது. படி தாண்டா பத்தினியான அம்புலு, ஒரே தாவலில், டணால் எடுக்கும் முன், அதை எடுத்தவுடன், அவள் முகம் பத்தாயிரம் வோல்ட் எல்.இ.டி. விளக்குப்போல பிரகாசிக்கவே, எதோ அனர்த்தம் வரப்போறது என்று மேலும் கவலைப்பட்டேன்.

ஓவர்ஹேர்ட் சம்பாஷணை:

“ வாங்கோ! வாங்கோ! தாராளமா வாங்கோ ! உங்காத்து (கொஞ்சம் ஷை ஆனாள். என் கண்ணில் படாமல் போகுமான்னேன்!)  இவரையும் கூட்டிண்டு வாங்கோ! “

“ அவரை பிடிக்கமுடியாது. யார் பின்னாலையோ? ஹூம்!” பெருமூச்சு காதில் விழுந்தது. நம்மூர் நிரந்தர மாப்பிள்ளை ஒத்தனை நினைத்துக்கொண்டேன்.

அம்புலு போனை தள்ளிப்பிடித்துக்கொண்டு, என்னிடம்,

“நமக்கு லாட்டிரி கிடச்சமாதிரியாக்கும். ‘வதனமோ சந்திர பிம்பமோ’ போன்ற பிலஹரி  சந்திரலேகா மாமி டென்னஸியிலிருந்து பேசறா.  என்னமோ ட்ரோனாமே! அதோட  நம்ம குயில்சாமியின் இந்தியா ஸ்பேஸ் தயாரிப்பான அதி நவீன பாராசாரி ட்ரோனாத்தில் வந்து இறங்கராளாம் என்று சொல்லி வாயை மூடல்லே, கிராம்பு திறந்த போட்ட கதவு அப்படியே மல்லாக்கத் திறந்து கிடக்க, பிலஹரி மாமி வந்து நிக்கறா. எனக்கு கையும் ஓடலை; காலும் ஓடலை. அம்புலுவா பல்லவி ராவ் மாதிரி தக்கத்தையா என்று குதிக்கிறாள். கிராம்பு எதித்தாப்போல இருந்த சோஃபா மேலெ காலைப்போட்டுண்டான். பிலஹரி ஒக்காரக்கூடாது. அதான்.

உரையாடல்:

பி (பிலஹரி): நவம்பர் எட்டு வரட்டும். உன் குட்டு அவுட்டு.

ட (டணால்): சட்டுப்புட்டுன்னு சொல்றேன். கேளடி பிலஹரி!  செட்டு சேர்ப்பேன் நானே! இந்தியா சூபர் எனக்கு மெட்டு போட்டுத் தாளமும் ஜால்ராவும் அடிப்பாங்க. உனக்கு லொட்டு, லொசுக்கு.

பி: கூவாதே! கூவாதே! என் பகையே! வேட்டு வைக்கிறேன், நானுனக்கு.

ட: கோட்டுப்போட்டு வந்தேனே! அடுத்தாத்துப் பாட்டியே. உன் வேட்டை துட்டாக்கி...!

அ: (அம்புலு): இவாளை வெளிலே போகச்சொல்லுங்கோ. நான் தூங்கணும். 

அவள் தூங்க, நான் தூங்க, கிராம்பு ஓட, பிலஹரி துரத்த, என் கனவும் கலைந்தது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

டிஸ்கி: சித்திரத்துக்கும் பாத்திரங்களுக்கும் ஒத்தடம்கொடுக்கவேண்டாம்.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com