Google+ Followers

Monday, September 12, 2016

பாமர கீர்த்தி ~2: இன்னம்பூரான் பக்கம்:8

பாமர கீர்த்தி ~2: இன்னம்பூரான் பக்கம்:8

Innamburan S.Soundararajan Mon, Sep 12, 2016 at 7:51 PM
பாமர கீர்த்தி ~2: இன்னம்பூரான் பக்கம்: 8


இன்னம்பூரான்
12 09 2016

மஹாகவி பாரதியாருக்கு இன்று அஞ்சலி செலுத்தும் வகையில் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்துள்ளன. அவற்றில், ஹிந்து நாளிதழில் திரு.கோலப்பனால் எழுதப்பட்ட கட்டுரையும் அதில் இணைக்கப்பட்ட மடலும், படமும் தான், வருடக்கணக்காக மறைந்து இருக்கும் பாமர கீர்த்தி தொடருக்கு வித்திடுகிறது. நன்றியுடன், அவர் கட்டுரையை இணைத்துள்ளேன்.

தமிழ் இலக்கியத்தில், பாணர்களுக்கும், மெய்கீர்த்திகளுக்கும், ஒரு முக்கியமான இடம் உளது. மிகைபடுத்தப்பட்டதாக தோன்றும் புகழ்ச்சிகளும் இருந்த போதிலும், அவை பொய் கீர்த்தியோ என்று ஐயம் எழும் அளவுக்கு யானை தானம், பொன் தானம், மண் தானம் ஆகியவற்றை பாடுபொருள் ஆக்கிவிட்டன. சில வருடங்களாக, நானறிந்த கல்வெட்டுகளையும், செப்பேடுகள், நாணயங்கள் பற்றிய ஆய்வுகள் நான் கூறுவதை உறுதி செய்கின்றன. 

மேலும், சராசரி மனிதர்கள், அவர்கள் வாழ்வியல், நடைமுறை, நாகரீகம், கலாச்சாரம், நெறி, சிக்கல்கள், தீர்வுகள் ஆகியவை பற்றி வரலாறு பேசுவதில்லை. சிலப்பதிகாரம் கூட வணிக செல்வந்தர் குடித்தனங்கள் பற்றி. அண்மையில் சூளாமணி பாடம் கேட்கும் போதும், இந்த சிந்தனை ஊடோடிய வண்ணம் இருந்தது. அன்றும், இன்றும், என்றும், பாமரன் அநாமதேயம் தான்.

ஒரு கால் கடுதாசியில் மகாகவியின் இல்லத்தரசி செல்லம்மா இவ்வுலகை நீத்த பெரியார் மஹாராஜ ராஜஶ்ரீ. காமு ரெட்டியார் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோள் கல்லையும் கரைக்கும்.  சிறுவன் காமு கல்வி கற்கவேண்டி எட்டையபுரம் வந்த போது, இடம் கொடுத்தது
, ஏழை பாரதியாரின் இல்லம். ஆம். சிறு பஞ்சாலை நடத்திய பாரதியாரின் தந்தைக்கு என்றுமே பற்றாக்குறை தான். செய்நன்றி மறவாத காமு பத்தாவது வகுப்பு முடித்து, வளர்ந்து ஆளான பிறகு, தன்னுடைய கிராமத்திற்கு திரும்பி வேளாண்மையில் இறங்குகிறார். சற்றே செல்வம் ஈட்டுகிறார்.

1921ல் மஹாகவியின் மறைவுக்கு பிறகு எட்டையபுரம் வந்த செல்லம்மாவை சந்தித்து, அவரது வறுமையை கண்டு மனம் கலங்கி அந்த குடும்பத்துக்கு பூதானம் செய்ய விரும்புகிறார். செல்லம்மா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. யதார்த்தமாக உதவவேண்டி, 33 வருடங்கள் மாதாந்திர மளிகை வகையறா அனுப்புகிறார். நின்றது, அவர் மறைந்ததினால் என்பது தெரியாமல், எழுதப்பட்டது, இந்த கடிதம்.
பிற்கால விவரங்கள் கட்டுரையில் உளன.

திரு. காமு ரெட்டியார் போல் கொடை வள்ளல்கள், பிரமலை கள்ளர்கள்.  ஒரு உயர் அதிகாரி பகுஜனஉபகாரி. அதனால் மக்கள் அவருக்கு விசிறி. ஒரு அசந்தர்ப்பம் பொருட்டு அவர் தலை மறைவு ஆனார். குடும்பம் நடுத்தெருவில் என்று நினைத்தார்கள், அண்டை மக்கள். ஆனால், நாட்தோறும் கருக்கல்லில் வீட்டு வாசலில் அரிசி மூட்டை, பருப்பு வகைகள், காய்கறிகள், நெய், பால் எல்லாம் வைத்திருக்கப்படுமாம், அவர் திரும்பும் வரை. இதை, நீர் மல்க, எனக்கு சொன்னது, அந்த உயர் அதிகாரியின் மனைவி. ஏழைக்கு பங்காளன், பரம ஏழை.

காலகட்டம்: 1920-25 எனலாம். துல்லியமாகத் தெரியாது.

மஹாகவியே இந்த தொடருக்கு ஆசி கூறுகிறார் என்று என் உள்மனது கூறுகிறது.
-#-

சித்திரத்துக்கு நன்றி:

© The Hindu


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com