Sunday, May 1, 2016

கூட்டுக்களவாணிகள், இன்னம்பூரான் பக்கம்: III:5 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[5]

இன்னம்பூரான் பக்கம்: III:5 இந்திய தணிக்கைத்துறையும், நானும்[5]

பிரசுரம்: http://www.vallamai.com/?p=68510
Monday, May 2, 2016, 4:54


கூட்டுக்களவாணிகள்

இன்னம்பூரான்

“…தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்… உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும் தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே !.”.


பாரததேசமென்று தோள் கொட்டியது கார்கில் போரில். பாரதத்துக்கு மோசம் செய்திடுவோம் என்று தேள் கொட்டியது மும்பை கொலாபாவில். உலகிலேயே விலை அதிகமான பூமி என்று அதற்கு புகழோ/இகழோ உண்டு. எனக்கு தெரிந்த கிராமமொன்றில், சுடுகாட்டில் போய் தகனமான பிணங்களின் தங்கப்பல்லை பிடுங்கும் மாபாவிகள் நிறைந்த இந்த சுதந்திர நாட்டில் ‘ஆதார்’ என்ற நற்பெயருக்குக் களங்கம் விளைத்து 2003ல் கட்டிய வானாளாவிய 31 தளங்கள் கொண்ட மாடமாளிகை ஒன்றை இடிக்கச்சொல்லி, இன்று மும்பாய் உச்சி மன்றம் ஆணையிட்டு இருக்கிறது. 

முழுக்கதையை சொல்ல ஒரு நூலே எழுதவேண்டும். இதையே விரல் விட்டு எண்ணக்கூடிய கனவான்கள் மட்டும் தான் படிப்பார்களோ? என்னமோ? இந்த அழகில் புத்தகம் போட்டால், கட்டை விரலை சப்பிக்க்கொள்ள வேண்டியது தான்! அதனால் ஆடிட்காரன் என்ன சொன்னான் என்பதை மட்டும் கேட்போம். 150 வருட பாரம்பரியம் கொண்டதும், அம்பேத்கார் அவர்களால் மிகவும் மதிக்கும் படி பேசப்பட்டு, இந்திய அரசியல் சாஸனத்துக்கு அடி பணிந்து ஊழியம் செய்யும் ஆடிட்டர் ஜெனெரலை கட்டிப்போட ஏன் விரும்பமாட்டார்கள், இந்த அரசியலர்?

இந்த ஆதார் உப்பரிகை பற்றி ஆடிட் ரிப்போர்ட் நாக்கை பிடுங்கிறாப்பல கேட்ட எட்டு கேள்விகள்:
வேலி பயிர் மேய்ந்த கதை, இது; இல்லை என்று நிரூபியுங்கள், பார்க்கலாம்;
  1. கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் விதவைகளுக்கும், தீவிர காயமடைந்த வீரர்களுக்கும், எத்தனையோ விதிமுறைகளை தளர்த்தி, இந்த இருப்பிடம் அவர்களுக்குத் தருவோம் என்று வாக்களிக்கும் முன்பே, உங்கள் திருட்டுக்கைவரிசையை தொடங்கிவிட்டது, இது தேசத்துரோகமா? இல்லையா?
  2. பொறுப்புடன் நிர்வகிக்க சம்பளம் வாங்கும் பலர் மோசடிகள் ஏன் செய்தார்கள்?
  3. மத்திய அரசு, மாநில அரசு, கட்டிட கலை வல்லுனர்கள், மந்திரிமார், உயர் அதிகாரிகள் எல்லாரும் செய்த இந்த அட்டூழியங்களை கூட்டுக்களவாணித்தனம் என்கிறோம். இல்லை என்று சொல்ல தகரியம் இருக்கிறதா?
  4. விதி தளர்த்துவது, கட்டிட அளவுகளை கூட்டி அளிப்பது போன்ற சலுகைகள் கேட்டபொது, ‘ இது கார்கில் வீரர்களுக்கு’ என்று பதிவுகள் செய்யும்போதே, அவை பொய் என்று தெரிந்தும் துரோகம் ஏன் செய்தீர்கள்?
  5. ஆகமொத்தம், ஆதாரத்தில் ஆதாய மீன் பிடித்தவர்களில், பெரும்பாலோர், கார்கில் சம்பந்தமற்ற அதிகாரிகள், பார்லிமண்ட் அங்கத்தினர்கள், பதவியில் இருப்பவர்களின் சொந்தபந்தம். இந்த அநீதி அடுக்குமா?
  6. முனிசிபல் கமிஷனர் திரு.ஜெயராஜ் பதக் பதுங்கி பதுங்கி செய்ய வேண்டிய விதி விலக்குகளை செய்து கொடுத்தார். அதற்கு கைக்கூலி தானா, கார்கில் அருகே மனதால் கூட செல்லாத அவருடைய திருமகனாருக்கு ஒரு மாளிகை? இது அடுக்குமா?
  7. எட்டு அகார்கிலார்களுக்கு (கார்கில் பக்கம் தலை வைக்காதவர்களுக்கு ) அலாட்மெண்ட் கொடுத்தால், அதிகப்படி கட்டிக்கலாம் என்றார்களே. இது எந்த ஊர் நியாயம்?
  8. கதை மேலும் பயங்கரமா போகிறது. முதல் அமைச்சரே முதலை அமைச்சரானார்.
விவகாரம் மிகவும் பெரியது. வடூவூர் துரைசாமி அய்யங்கார் துப்பறியும் நாவல் போன்றது.
யாராவது கேட்டால் பார்க்கலாம். இல்லாவிடில் வாளாவிருக்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment