Google+ Followers

Wednesday, December 9, 2015

மொழிகளில் இலக்கியம் மிளிர்வது


இன்றைய அமர்வில் ‘தமிழ் இலக்கியம் -1:மையோ! மரகதமோ!மறிகடலோ! மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகுடையான்!’ என்ற இன்னம்பூரானின் பதிவும் அதன் தொடர்பாக அவர் அளித்தக் கீழ்க்கண்ட உரையும் எடுத்துக்கொள்ளப்பட்டன. 


மேற்படி உரை:
தமிழ் இலக்கியம்: ஒரு அறிமுகம்.
இன்னம்பூரான்
8 12  2015

“மொழிகளில் இலக்கியம் மிளிர்வது ஐம்புலனுக்கும் இனிமை தரும் தன்மை உடையது. இயல், இசை, நாடகம் மூன்றுமே தமிழ் மொழியின் இலக்கியத்தில் அங்கம் வகிப்பதால், செவி இன்பம், கண்கொள்ளாக்காட்சி,வாய்ப்பாடு, தமிழ் மணம், மனநிறைவு  ஆகியவை இலக்கியத்தின் உள்ளுறைந்து, ஐம்புலன்களின் வீணை மீட்டும். எல்லா மொழிகளிலும் வீணை, கோட்டு வாத்தியம், தம்புரா, குழல், நாதஸ்வரம், மாண்டலின், சிதார் எல்லாம் உண்டு.
கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெறும் நமது அமர்வுகளில், சிறுகதைகளில் தொடங்கி, கட்டுரைகளையும் கண்டு, இன்றிலிருந்து தொன்மை காலத்து தமிழ் இலக்கியங்களின் சில பக்கங்களை புரட்டுவோமாக. இங்கு இருக்கும் தமிழ் புலவர்கள் மேலும் மெருகு ஏற்றலாம். ஆர்வலர்கள் ஊக்கமளிக்கலாம். ஆறு வருடங்களுக்கு முன் எனக்குத் தமிழ்ஞானம் சொற்பமே. இன்று புலவர்களுடன் சரளமாக பழக முடிகிறது. ஆர்வமிருந்தால், நீங்களும் இத்தகைய அனுபவம் பெறுவீர்கள். இனி வரும் அமர்வுகளில் நீங்கள் விரும்புவை யாவை என்பதை அறியவே, இந்த திசை மாற்றம். நமக்குக் கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியங்களை சுவைத்து மகிழ, ஒரு ஆயுட்காலம் போதாது. எனவை பெரும்பாலோரின் விருப்பத்தை அறிந்து, இயங்குவது நல்லது. இந்த உரையை ஒலிப்பதிவு செய்வதே, அதன் பொருட்டும், இணையத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து என் வலைப்பூவை படிக்கும் நண்பர்களின் விருப்பம் பொருட்டுமே. குறிப்பிட்ட நேரத்தில் உரையை முடித்து விட இதுவும் உதவும்.
‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்ற நம்மாழ்வார் பாசுரமே இதற்கு ஆதாரமாக அமைந்து விட்டது. சுவை என்பது உள்ளத்தில் தோன்றும் சுவையாகிய உணர்ச்சி என்க. அச்சுவையை நாம் யாவரும் அள்ளி, அள்ளி பருக வேண்டி, சுவையில் தென்படும் எண்வகை மெய்ப்பாடுகள் (நகை, அழுகை, இளிவரல்,மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை) நமது பழைய மூல இலக்கணமும், வாழ்வியலுமான தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் ஒன்றாகிய மெய்ப்பாட்டியலில் விவரமாகவும், தெளிவுடனும் கூறப்பட்டுள்ளன. 
இசை கேட்கும் போதும், நாட்டியம் பார்க்கும்போதும், சித்திரக்கலையை போற்றும் போதும் நாம் அனுபவிக்கும் சுவை, இலக்கியத்திலும் புதையல் போல கிடைக்கிறது என்பதற்குத்தான், ‘மையோ! மரகதமோ!, மறிகடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவு’ என்ற சொல்லாக்கம், இராமகாதையிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது. வழியிடையே காட்சிகள் கண்டு இராமனும் , இலக்குவனனும், சீதா பிராட்டியும்  உளமகிழ்ந்து செல்லுதல் பற்றிய முழுச் செய்யுள் இங்கே:
மெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் 
     அழியா அழகு உடையான்.
[1926: இராம காதை]

நீலமேக ஸ்யாமளனின்  செறிவான கருமைக்கு மழை
உவமையாயிற்று, மரகதம் பசுமை நிறம்; குளிர்ச்சி
தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல் நீலநிறம்
படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது; ஆதலின்,  இயங்குகின்ற
இவனது சோபைக்கு உவமையாயிற்று.  நாம் தற்காலம் பார்த்துப் பார்த்து இளைத்து, களைத்து போக செய்த மழை முகில்  கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடையது; உயிர்களுக்கு நலம் செய்வது என்பதால் உவமையாயிற்று. ‘கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும்,
தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை
நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை
காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனி உவமை சொல்ல
மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார்’ என்கிறார்கள், கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
“அச்சோ ஐயோ என்னே எற்று எவன்எனுஞ்சொல் அதிசயம் உற
இரங்கல்” என்பது  சூடாமணி நிகண்டு. 

இலக்கிய சுவை எல்லை கடந்த அனுபூதி. தங்கு தடையின்றி, பொங்கு தமிழாக பரிமளிக்கும் இலக்கிய படைப்புகளை ஒருவிதத்தில் பார்க்கப்போனால் சுயம்பு/ தான்தோன்றி எனலாம். திருக்குறள் அற நூல்; புற நானூறு வெளி உலகம் சார்ந்தது; அகநானூறு உள்ளொலி என்க; சிலப்பதிகாரம் வரலாறு; மணிமேகலை போதனை.
இராமகாதை ஶ்ரீரங்கத்தில் நாதமுனிகள் முன்னிலையில் அரங்கேற்றப்படது. பாயிரம் முதலில். அதில் பிரதம ஸ்தானம் கடவுளுக்கு: இராமகாதைக்கு ‘தமிழ்க்கடல்’ திரு.தி.வே. கோபாலய்யர் தந்தருளிய படலக்கதைச் சுருக்கமே ஒரு இலக்கியம் என்று கூறினால், அது மிகையாகாது. இனி பொருளலங்காரம் விளக்க ஒரு இராமகாதையின் பகுதி:

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

[சாராம்சம்] எல்லா உலகங்களையும் தம்  சங்கற்பத்தால்  படைத்தலையும், அதை நிலைத்திருக்குமாறு  காப்பதையும்,  முடிவுறாததும் அளவற்றதுமாகிய  விளையாட்டாக உடையவராகிய அவரே  தலைவர்.அன்னவர்க்கே  நாங்கள்  சரண். அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம். ‘உலகம்’ என்ற  மங்கலச் சொல்  கவிச்சக்கரவர்த்தியின்
வாக்கில்  முதலாக  எழுகிறது.   படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை  அருந்தொழில் பரமனுக்கு   மிக   மிக   எளிது   என்பதை  ‘விளையாட்டு’   என்ற சொல்லாட்சி குறிக்கிறது. திருவெம்பாவை 12ல் ‘ காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி’  என 
முத்தொழிலை இறைவன்  விளையாட்டாக   மாணிக்கவாசகர்  பாவிப்பது, இவ்விடம் குறிப்பிடத்தக்கது. 

“எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் செயல்களைத் தொடர்ந்து விளையாட்டாக செய்து வரும் பெருமானாரையே நாம் சரணாக பற்றியுள்ளோம்...” (‘தமிழ்க்கடல்’ திரு.தி.வே. கோபாலய்யர்). இன்றைய அமர்வு தமிழிலக்கியத்தின்  விஸ்தீர்ணத்தை சுட்டிக்காட்ட அமைந்ததால், எல்லாமே சிறுதுளிகள் தான். ஆயினும், எல்லாமே இலக்கியம் தான்!

சிலப்பதிகாரம் தேனொழுகும் இனிமை தங்கி நிற்கும் இயல்புகளை போற்றும். மாதவி ஒரு கணிகை. ஒப்பற்ற அழகு. ஆயகலைகளில் தேர்ந்த 12 வயது சிறுமி, அவள். மன்னன் முன் தன் நாட்டியத்திறனை காட்ட அரங்கேற்றம் செய்ய துணிந்தாள். இளங்கோவடிகள் மிகவும் விவரமாக, படிப்படியாக அந்த நடனத்தின் புகழ் பாடுகிறார். அதில் ஒரு பகுதிக்கு பொருள் காண முயன்றபோது ‘அன்றொரு நாள்: ஏப்ரல் 29’ என்ற தலைப்பில் 29 04 2012 அன்று நான் எழுதிய  ‘கிழக்கில் ஒரு மேற்கு!’ என்ற கட்டுரை கிட்டியது.
சுருங்கச்சொல்லின்,
அசையும், ஓசையும், இசையும் அபூர்வ சஹோதரிகள். யார் எங்கே எதை அருமையாக இசைத்தாலும், எம் கண் முன்னே தோன்றுவது தொன்மை வாய்ந்த நாடக மேடை, திரைகள், கச்சிதமாக அளவெடுத்து அழகுறை அமைத்த அந்த அரங்கத்தில் அகவை பனிரெண்டே ஆகிய மாதவியின் நடனம், பாட்டு, ஆசான்கள், இலக்கணம், மரபு. சபையே மகுடிக்கு மயங்கிய நாகமாக சுருண்டு கிடந்தது. இளங்கோ அடிகளார் இசையை ரசித்த விதத்தை இங்கே காணலாம்.

யாழும், குழலும், சீரும், மிடறும்
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து,
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித
தேசிகத்திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி,
கவியது குறிப்பும், ஆடல் தொகுதியும்,
பகுதிப்பாடலும் கொளுத்தும் காலை-
வசை அறுகேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்.
~ (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை 26 - 36 வரிகள்)
“அந்த ‘அசையா மரபின் இசையோன்’ ஒருவரையும், அவருடைய குழுவையும் சைண்ட் லூயிஸ் இசை அரங்கில் கண்டு, அவர்கள் அளித்த இசை விருந்தை பருகியபோது, நினைவலைகள் ஒரு நிமிடம் இரண்டாம் ஆயிரம் ஆண்டுகள் பின் சென்று, ‘நான்கடி, எட்டடி, பதினாறடி, முப்பத்திரண்டடியாக வரும் சுண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம், சந்தம் என்றெல்லாம் மனமுழுதிலும் அலை பாய்ந்தன, பீத்தோவன் என்ற இசை ஆசானின் கவின் நிறைந்த அரிதான படைப்புகளும், உள் புகுந்து, அலைகளை சற்றே சலசலத்தன. அதா அன்று. மற்றொரு நினைவலையும் தனிப்பாட்டை ஒன்றில். கடலலை ஓய்ந்தாலும் நினைவலை ஓய்வதில்லை அல்லவா! இந்த தரணி தனில் நிரந்தரமானவை, இந்த நினைவலைகள் தான். என்றென்றும் சுழற்சியில் இருப்பவை அவை தான்... “ ஆம். இலக்கியம் பிரபஞ்சமெங்கும் நிறைந்து இருக்கும்.
ஆனந்த விகடனில் முத்திரைக்கதைகள் வெளி வரும். அதற்கு முன்னோடி மணிமேகலை எனப்படும் காப்பியத்தின் முத்திரை, மையக்கருத்து, அசையாப்பொருள்:

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள் மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும் அல்லது 
கண்ட தில்லை.”
இது [ரோட்டி, கப்டா ஒளர் மக்கான்!] பற்றி, சாஹித்ய அகாடமியின் தரப்பில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ படைத்தப் பேராசிரியர் மு.வரதராசன் அவர்கள் கூறியது: 
“...அத்தகைய அறனெறியைப் போற்றி, உணவு வற்றாத பாத்திரமாகிய அமுதசுரபிலிருந்து உணவை எடுத்து எல்லோர்க்கும் உதவினாள். கூன், குருடு ஊமை செவிடு நோயாளிகள், திக்கற்றவர்கள் எல்லோரிடத்தும் அன்பு கொண்டு உதவி புரிந்தாள்...சிறைச்சாலை எல்லாம் அறச்சாலை ஆக்குமாறு அரசனை கேட்டுக்கொண்டாள்...”

மணிமேகலை ஒரு அருமையான காப்பியம். அது அளிக்கும் தரும நீதிகளை எடுத்துரைக்க பல காலம் பிடிக்கும்.
இது மூன்று இலக்கியங்களின் அறிமுகதுளிகள். நமது தொன்மை இலக்கியங்களின் தமிழ் இன்றளவும் புழக்கத்தில் உளது. அடுத்த அமர்வில் மேற்படி இலக்கியங்களிலிருந்து:
  • இராமன் கெளசலையிடமிருந்து விடை பெறுவது, குகனுடன் படகில், வாலி வதம், விபீஷண சரணாகதி போன்ற பல பகுதிகளும்;
  • சிலப்பதிகாரத்தில் திருமண அழைப்பு வைபவம், மணமக்கள் இன்புறுவது, மாதவி அரங்கேற்ற நடனங்கள், மதுரையில் நீதி, கண்ணகி விண்ணுலகம் எய்தது போன்ற பல பகுதிகளும்;
  • மணிமேகலையில் மலர்வனத்தில் மணிமேகலை, அமுத சுரபி பெறல், உதயகுமரன் வருகை, மணிபல்லவத்தில் மணிமேகலை, சிறையும் அறமும் போன்ற பல பகுதிகளும்
எடுத்து, சுவையுடன் படிக்கலாம். 
எல்லையில்லா இலக்கியவரவுகள் வைட்டிங் லிஸ்டில்.
இனி உங்கள் விருப்பமறிந்து அடுத்த அமர்வை கூட்டலாம், அது இன்றைய அமர்வின் அடுத்த கட்டமாகக் கூட இருக்ககூடும்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்.
சித்திரத்துக்கு நன்றி: http://www.siruppiddy.net/wp-content/uploads/2012/09/Tamil-500x273.jpg