Google+ Followers

Friday, August 14, 2015

இந்தியா 2085

இந்தியா 2085
இன்னம்பூரான்
சுதந்திர தினம்
ஆகஸ்ட் 15, 2015

நமது இந்தியா விடுதலை அடைவதற்கு முன், கலோனிய அரசின் நிர்வாகத்தை பற்றி அறிந்தவர்களில் சிலர் தான் தற்காலம் இருக்கிறார்கள்; தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வரிசையிலும் சிறுபான்மையினர் தான் சமுதாய வரத்துப்போக்குகளை அலசுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில: முதுமையின் தள்ளாமை, ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று சிறுவயதிலிருந்து இருந்த மனப்பான்மை, அறியாமை. முதியோர்களின் நோக்கில் வரலாறு புதைந்து கிடக்கிறது. தொல்லியல் ஆராய்ச்சி அருளும் பரவசத்தை இங்கும் பெற இயலலாம். அப்படித்தான் அமைந்து விட்டது, குடியரசர் ப்ரணாப் முகர்ஜி அவர்களின் விடுதலை தினம் பொருட்டு ஆற்றிய உரை.

நேற்று இரவே, என் சுதந்திர தின வாழ்த்துக்களை பதிவு செய்ய முயன்றேன். ‘நான் அழுகிறேன்.’  என்ற தலைப்புடன் முற்றுப்புள்ளி. நல்ல நாளும் அதுவுமாக அழுகை ஏன் என்ற கேள்வி. ஆனால் பாருங்கள், குடியரசரே ஒரு குரல் அழுது விட்டார். பிரதமர் இன்று காலை கவசக்கண்ணாடியறையிலிருந்து நற்செய்திகள் பரப்பினாலும், அவரும் குடியரசரின் உரையை போற்றியுள்ளார். அவர் வேறு என்ன தான் சொல்லியிருக்கலாம் எல்லாம் ‘லாம்’ தான். அதாவது, அவரவர் கற்பனை.

என் அணுகுமுறை, குடியரசரின் தொலைநோக்கு கவலைக்கு ஏற்புடையது என்பதால், அதன் வெளிப்பாடு தான் என் சுதந்திர தின வாழ்த்துக்கள். முதன்மையாக, மக்களுக்கு, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் பெரும்பாலும் சுயநலம் நாடி, தப்பும் தவறுமாக திரவியம் தேடி, அதை மறைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஆணவத்துடன் மக்கள் நலனை புறக்கணிக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி; அந்தோ பரிதாபம். உள்ளங்கை தான் அரிக்கிறது! மக்களே நேரிடையாக தீநிமித்தத்தில் மிதக்கிறார்களே! 

திருமூலரின் மரமும் மாமத யானையும் போலத்தான் அரசியல் கட்சிகள். ஒரே கட்சி தான் 1947லிருந்து அரசாளுகிறது. சுயநலம், அதிகார துஷ்பிரயோகம், துட்டு புரட்டுதல் என்று வந்தால். பெருந்தலைவர் காமராஜர் சொன்னமாதிரி ‘எல்லாம் ஒரே குட்டையில் அழுகிய மட்டை.’ வாக்கு வாங்கி, மக்களுக்குப் போக்குக்காட்டுவது என்றால், அவரவர் கட்சி, கொடி, தடி, மண்ணாங்கட்டி எல்லாம். நூடிலை (மறுபடியும் கிறுபடியும் வரதாமே!) இழுத்தால், நீண்டு வந்து கிழியும். சணற்கயிரானால், திரி பிரியும். கப்பல்களில் கட்டுவதற்கு ஏற்றதாக சிசல் கயிற்றை உபயோகிப்பார்கள். கயிறு அறுந்தால், உயிர் பிரிந்துவிடும். அதனால் வலிமை வாய்ந்த கயிறு. சிசல் கயிறாக 1947ல் நம்மிடம் வந்துள்ள விடுதலை, இன்று சணற்கயிராகி, பாரதமாதா உயிருக்கு அபாயமாகி, விடுதலையையும், நாட்டின் பெருமிதத்தையும் பறித்து விடுமோ என்று அஞ்சுகிறார், குடியரசர். நல்லவேளை நூடிலாகி நொந்து போகவில்லையே, அந்தவரைக்கும் லாவம்! என்பர், சிலர். அவர்களை நம்பாதே என்பது என் கட்சி. ஆதரவு தருவது, குடியரசர்.

ஏற்கனவே காலம் தாழ்ந்து விட்டதே என்று அங்கலாய்க்கும் குடியரசர், “…நாம் உடனே பிரிந்த திரிகளை விட்டுவிட்டோம் ஆனால், எழுபது வருடங்களுக்கு பின் வரும் சந்ததி நம்மை தூற்றுமே, நாம் எழுபது வருடங்களுக்கு முன் (வயசாயிடுத்தோல்லியோ! அதையெல்லாம் மறந்து சில தலைமுறைகள் ஆயின என்பதை மறந்து விட்டார்!) நாம் தேசீயத்தலைவர்களை போற்றியது போல் அல்லாமல்…’  என்று தேம்பினார். அவரது கவலை நியாயமானது. நான் எழுத அஞ்சியதை அவர் கூறி விட்டார்.

இது நிற்க.

எல்லாருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். கொண்டாடுவோம். பந்தாட வேண்டாம். 

சரியா?


_#_