Google+ Followers

Saturday, July 18, 2015

அந்தோ பரிதாபம்!!! தொடர் [3] & [4]அந்தோ பரிதாபம்!!! தொடர் [3]
இன்னம்பூரான்
ஜூலை 18, 2015

‘ஆவின்’ பாலில் கண்ட கண்ட இடங்களிலிருந்து எடுத்த தண்ணீர் கலந்த வைபோகமும், ஒரு அமைச்சர் வேலையிழந்த அலங்கோலமும் பழங்கதை. இன்றைய செய்தி: 

நங்கநல்லூர் லோகேஷ்வர் ராவ்  வாங்கிய ஆவின் பாலை காய்ச்சி அருந்திய சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டதாம்; ஆவின் பால் வாங்கிய கடையிலும், ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்த அவருக்கு சரியான பதில் கிடைக்காததால், நேரடியாக ஆவின் நிறுவனத்தில் புகார் கூறியுள்ளார்.
அந்த பால் பாக்கெட்டுகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்த கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பியுள்ளார். இதேபோன்று, நங்கநல்லூர் பகுதியில் வாங்கிய பால் பாக்கெட்டில் மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக, மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர். ஆமாம்! மண்ணெண்னெய் காசு கொடுத்து வாங்கணுமே. இந்தக்கலப்படம் தாக்குப்பிடிக்குமோ!
-#-

அந்தோ பரிதாபம்!!! தொடர் [4]

டாஸ்மாக் வசனம்: குடி குடியை கெடுக்கும். அது குடியை கொளுத்தும் என்று இனி எழுதப்பட வேண்டும். ராமதுரை நடுத்தெரு வாசி-  நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலான்குளம் நடுத்தெரு. மனைவி முத்துலெட்சுமிக்கும் ஆறு வருடமாக, மதுமிதா, ஜெகதீஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்த பின்னும், நாட்தோறும் லடாய்.  தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த ராமதுரை மிடாக்குடியன்.  இதனால் அவர் வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது குடித்து வந்தார். இதனால் ராமதுரையின் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ராமதுரை கடன் வாங்கியும் குடிக்க ஆரம்பித்தார். இதில் அவருக்கு ரூ.70 ஆயிரம் கடன் ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் முத்துலெட்சுமியிடம் வந்து பணத்தை திருப்பி கேட்டனர். இதுகுறித்து அவர் தனது கணவர் ராமதுரையிடம் கூறினார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. மாறாக, குடித்து விட்டு வந்து மனைவி-குழந்தைகளை அடித்து உதைத்தார். இந்நிலையில் நேற்று சின்னகோவிலான் குளத்தில் உச்சிமா காளியம்மன் கோயில் விழா நடந்தது. ராமதுரை வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்தார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்த அவரிடம் முத்துலெட்சுமி ஏன் குடித்து அழிக்கிறீர்கள் என சத்தம் போட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதுரை சாப்பிடாமல் வெளியே சென்று படுத்து விட்டார். வீட்டினுள் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகளும் படுத்து தூங்கினர். இரவு 11 மணிக்கு எழுந்த ராமதுரை சமையல் அறைக்கு சென்று மண்ணெணைய் கேனை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு சென்று விட்டார். உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துலெட்சுமி மற்றும் 2 குழந்தைகள் உயிருக்கு போராடி அலறினர். ஆனால் கோயில் திருவிழா நடந்ததால் அவரின் அலறல் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டிக்குள்ளேயே உடல் கருகி இறந்தனர். போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ராமதுரை சின்னகோவிலான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். குடிப்பழக்கம் குடும்பத்தையே அழித்துவிட்டது என அப்பகுதி மக்கள் வேதனைப்பட்டனர்.

-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com