Google+ Followers

Friday, June 26, 2015

மின்வேலி

கணினி பிரச்னையினால் கீழ்க்கண்ட பீடிகை விட்டுப்போனது. அப்டேடட்.
*
இன்றைய காலகட்டத்தில், இந்த மீள்பதிவு இன்றியமையாதது என்று என் மனது கூறியது.
இன்னம்பூரான்
Saturday, June, 20i5
********


மின்வேலிஅண்ணல் காந்தியும், தேசாபிமானி மோதிலாலும் கொஞ்சிய குழவி; தந்தை ஜவஹரின் தொடர்மடல்களில் சித்தரிக்கப்பட்ட பாரதத்தை கண்டு வியந்த சிறுமி; அவருடைய இல்லத்தை திறம்பட நிர்வஹித்தும், அருமையாக விருந்தோம்பியும் நற்பெயர் பெற்ற திருமகள்; அமைதி காத்த தகவல் துறை அமைச்சர்; நாட்டை ஆட்டிப்படைத்த பிரதமர்; பதவி இழந்தாலும், பவிசு இழக்காத தலைவி. அது தான் இந்திரா காந்தி. அவருக்கு நிர்வாகத்திறன், ஆளுமை, கட்டி மேய்ப்பது, கறார் தீர்மானங்கள், மின்னலடி தாக்குதல் ஆகியவை கை வந்தக் கலை; அழுச்சாட்டியமும். இவருடைய அரசியல் விரோதி சரண் சிங் பிரதமராக இருந்த காலத்தில், போலீஸ் இவரை கைது செய்ய வருகிறார்கள். இவரோ காரின் பான்னெட் மீது ஏறி அமர்ந்து கொண்டு, ‘முடிந்தால் கைது செய்’ என்கிறார்! இருதலை கொள்ளியாக தவிக்கிறது போலீஸ். மனித வாழ்க்கையில் சில வாய்ப்புகளும், கொடுப்பினைகளும் மலரிதழ்களை கசக்கி, முட்புதரில் வீசி எறிந்து விடுகின்றன. ஏழு தலைமுறைக்கு அப்பன் விட்டு வைத்த சொத்தை ஒரே நாளில் சூது விளையாடி, மகன் இழந்து விடுகிறான். தந்தை கல்விக்கடல்; தனயனோ தற்குறி. ரோஷக்காரியின் மகள் வேசி! நீதியரசனின் மகன் சிறையில். இதையெல்லாம் பார்க்காமலா இருக்கிறோம்?

இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து.

ஒரு அனுபவம். இந்திய அரசின் அதிகாரமையம் டில்லியில் இருக்கும் தெற்கு அலங்கம் (சவுத் ப்ளாக்). நேருஜி காலத்திலேயே என் பணியின் காரணமாக, அதனுடைய சுரங்கப்பாதைகள்/ரேழிகள்/தாழ்வாரங்கள்/முற்றங்கள் எனக்கு தெரியும். அவரை அடிக்கடி பார்க்கமுடியும். ஒரு நாள், தப்புத்தவறி, இந்திரா காந்தியின் அறைக்கு அருகில் போய்விட்டேன். எங்கு பார்த்தாலும் துப்பாக்கி, ஈட்டி, வேல், கத்தி! என்னுடைய அனுமதிச்சீட்டு உயர் ரகம்; எனினும் அடித்துப்போட்டால், கேள்வி முறை இருந்திருக்காது. அதான் மின் வேலி. தலைப்பும் அதுவே!

என்ன நடந்தது:
  1. அவசர நிலை பிரகடனம், மட்டுறுத்தல், கைதுகள் ~ ஜூன் 25, 1975;
  2. அபகீர்த்தி மீஸா சட்டம் (The Maintenance of Internal Securitiy Act)~ ஆகஸ்ட் 5, 1975;
  3. பிரதமர் நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற அரசியல் சாஸனத்திற்கு 39வது திருத்தச்சட்டம் ~ செப்டம்பர் 26, 1975;
  4. போச்சு! எல்லாம் போச்சு!அரசியல் சாஸனம் அருளிய ஏழு அடிப்படை உரிமைகளும் பறி போயின ~ ஜனவரி 9, 1976;
  5. பொதுத்தேர்தல் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது ~ ஃபெப்ரவரி 4, 1976;
  6. குடிமக்களின் அடிப்படை கடமை பட்டியல்:அரசியல் சாஸனத்திற்கு 42வது திருத்தச்சட்டம் ~ நவம்பர் 2, 1976;
  7. நாடாளும் மன்றம் கலைக்க்ப்பட்டது: ஜனவரி 18, 1977;
  8. எமெர்ஜென்சி வாபஸ்: மார்ச் 21, 1977;
  9. ஜனதா கட்சி வெற்றி: மார்ச் 22, 1977

ஜூன் 1977ல் நான் ஒரிசாவில் தணிக்கைத்துறையில் பணியிலிருந்தேன். அங்கு குறுநில ராணி (முதல்வர்) நந்தினி சத்பதி மினி-இந்திரா! கேட்கவேண்டாம், அடக்குமுறை! ஐ.ஏ.எஸ் நண்பர்கள் எங்களுடன் பேச பயந்தார்கள். அக்காலம், காலை ஏழு மணி ஆஃபீஸ். எனவே, உடனுக்கடி தெரிந்ததும் அல்ல; அதிகாரிகள், ஊழியர்கள், வணிகர், மக்கள், பிச்சைக்காரர்கள் எல்லாரும் சுதாரித்துக் கொண்டோம். உயிர் வெல்லமில்லையா? ஜார்ஜ் ஆர்வெல் சொன்னமாதிரி, அக்கா தான் செங்கோல், சிம்மாசனம்,சடாரி! தணிக்கைத்துறையாயினும், அரசு கட்டளைகளுக்கு கட்டுப்பட்டோம், சிறகொடிந்த அரசியல் சாஸனத்தின் ஷரத்துக்கள் படி. சத்தியமாகச்சொன்னால், வேலை நடந்தது;  தணிக்கைத்துறைக்கு மூல ஆவணங்கள் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிட்டதாக சொல்லிக்கொள்வார்கள், ஆடிட் செய்யப்போனால். அவர்கள் பாய்க்கு அடியில் புகுந்தால், நாங்கள் கோலத்துக்கு அடியில் புகுவோம். அதனால் எங்கள் வேலை தடைபட வில்லை. ஆனாலும், அரசியல் சாஸனம் அருளிய ஏழு அடிப்படை உரிமைகளும் ஜூன் 25, 1975 அன்றே பறி போயின என்பது வெள்ளிடை மலை.

நீதித்துறையும் தப்பவில்லை. அதிகாரம் அதீத காரம் தான்! ‘ஒரு நிரபராதியை போலீஸ் தீய எண்ணத்துடன் சுட்டுக்கொன்றாலும், கனம் கோர்ட்டாரால் ஒன்றும் செய்ய இயலாது என்ற பித்துப்பிடித்த அசுரவாதம் (அரசு வாதம்) வென்றது; ஹெ.ஆர்.கன்னா என்பவரை தவிர, நான்கு நீதிபதிகள் இந்த ‘பிணம் தின்னும் சாத்திரத்தை ஆதரித்தனர். அதர்மமான கட்டுப்பாடுகளை உதறிய உயர் நீதி மன்ற நீதிபதிகள், அங்குமிங்கும் தூக்கி யடிக்கப்பட்டனர். பழிக்குப் பழி! இதற்கு ஆசியளித்தது, உச்ச நீதிமன்றத்தின் தலைவர். சொல்வது திரு வீ.ஆர். கிருஷ்ணையர்.
சில வருடங்களுக்கு பிறகு ஓம் மேஹ்தாவை சந்திக்க நேர்ந்தது. எமெர்ஜென்சி பல் பிடுங்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றக்குழுத்தலைவர். அவரிடம் சில சந்தேக நிவாரணங்கள் செய்து கொள்ள நினைத்தேன். அக்காலம் சாலார்ஜங்க் ம்யூசியத்தின் அறக்கட்டளையின் உறுப்பினர் என்பதால், அதைக்காண விரும்பிய அவருடைய ஆசையை நிறைவு செய்ததால், கொஞ்சம் மனம் விட்டுப் பேச முடிந்தது. கொஞ்சம் இழுத்துப் பறித்த பின் ‘அச்சம்! அச்சம்! அச்சம்! என்பதே பேச்சு!’ என்ற பொருள்பட பேசினார். 
இந்த எமெர்ஜென்சி சமாச்சாரம் பெரிய விஷயம். ஒரே முச்சில் பல பக்கங்கள் எழுதி விடலாம். எனவே, இது ஒரு அறிமுகம் என்க. இன்று நடக்கும் விழிப்புணர்ச்சி போராட்டம் வேறு வகை. பின்னணியும் வேறு, முன்னணியும் வேறு. நல்லதே நடக்கவேண்டும் என்று என் மனக்கிடக்கை.
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://www.fencing-systems.co.uk/files/large/security-electric-fence.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com