Google+ Followers

Friday, June 5, 2015

3.பேராசிரியர் தனிநாயகம் அடிகளார்

நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் 3.பேராசிரியர் தெய்வசுந்தரம்
 அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.

அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் மூன்றாவது இழை, இது. 'அன்றொரு நாள்' தொடரில் அடிகளாரை பற்றி நான் என்றோ எழுதியதின் மீள்பதிவு 3 A என்ற இலக்கம் படி அடுத்து வரும் அதற்கு அடுத்து கலாநிதி கைலாசபதி அவ்ர்கள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 6, 2015


3.பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) 

பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு) ( 1913- 1980) … தமிழ் பயிற்றல் , தமிழாய்வு, தமிழ் நிறுவனங்கள், தமிழிதழ்கள் , தமிழ் மற்றும் தமிழர் உரிமை காப்பு … என்று பல தளங்களில் தமிழ்ப்பணி ஆற்றிய பேராசிரியர். ஈழம் பெற்றெடுத்த பேராசிரியர். இலங்கையிலே பள்ளிக்கல்வியை மேற்கொண்டு, 1934-39 – இல் ரோமில் கிறித்தவப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்று, கிறித்தவக் குருமாராக ஆனார். 1940-45 –இல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளத்தில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப்பணியைத் தொடங்கினார். 1945-47 – இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும், தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆய்வு மேற்கொண்டு எம்.லிட்., பட்டமும் ( ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ – “ Nature in Ancient Tamil poetry” ) பெற்றார். 1950-51 – இல் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பின்னர் 1952-55 –இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1955-57 – இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டுக் கல்வியியலில் முனைவர் பட்டம் ( “Ancient European and Indian Systems of Education compared with Special Reference to Ancient Tamil Education”) பெற்றார். அதே காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு வதம் ( Wadham) கல்லூரியில் ஆங்கில இலக்கிய விமர்சனம்பற்றிய பயிற்சியைப் பெற்றார். 1957-61- இல் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் 61-69 – இல் மலேயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறையின் தலைவராகவும் பணியாற்றினார். 69 –இல் அங்குப் பணி ஓய்வுபெற்று, சில ஆண்டுகள் பாரிஸ் மற்றும் வேறு சில அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றினார். பேராசிரியர் தனது தாய்மொழியாகிய தமிழ்தவிர, ஆங்கிலம், மலாய், சிங்களம் உட்பட 13 மொழிகளில் திறன் படைத்தவர் என்பது மிகவும் வியப்புக்குரியது. தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரிய ஆய்வடங்கல் தேவை என்பது அவரது கருத்து. அவரே முன்நின்று அச்சில் ஏறிய தமிழ் நூல்களைப்பற்றிய விவரங்களை உள்ளடக்கிய “ A Reference Guide to Tamil Studies - Printed Books” என்பதை வெளியிட்டார். Tamil Studies Abroad” என்ற ஒரு தொகுதிக்குப் பதிப்பாளராக இருந்தார். “ Tamil Culture” என்ற ஒரு இதழை 1954-இல் தொடங்கி, 1967 வரை அதைப் பொறுப்பேற்று நடத்தினார். 1554 – இல் வெளிவந்த தமிழ் – போர்த்துகீசிஸ் அகராதியைத் தேடிக் கண்டுபிடித்து, அச்சிலேற்றினார். கிறித்தவத் தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதற்கான தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கினார். “ Journal of Tamil Studies “ என்ற ஒரு புதிய ஆய்விதழை 1969-இல் தொடங்கினார். அந்த இதழ் இன்றும் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகிறது. உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் (“ International Association of Tamil Research – IATR) என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பைப் பல பேராசிரியர்கள் துணையுடன் 1964 – இல் தொடங்கினார். 1966 – இல் அதன் சார்பாக முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலாம்பூரில் வெற்றிகரமாக நடத்தினார். பேராசிரியரது தமிழ் ஆராய்ச்சியின் சிறப்புபற்றிப் பேரா. செ. வை. சண்முகம் பின்வருமாறு கூறுகிறார் : ‘அவரது ஆய்வில் என்னைக் கவர்ந்தது அவருடைய சங்க இலக்கிய ஆய்வுகளே. அந்த ஆய்வுகளும் அதைப் பற்றிய வெளிநாடுகளில் செய்த சொற்பொழிவுகளுமே சங்க இலக்கியத்துக்கு உலக இலக்கியத் தகுதி கிடைக்க ஒரு காரணம்’ … ‘ தனிநாயக அடிகள் தமிழ் ஆய்வு இந்திய நிலையிலும் உலக நிலையிலும் பரவ முக்கிய காரணகர்த்தராகவும் இருந்தார். ஐரோப்பிய நூலகங்களில் இருந்த தமிழ் தொடர்பான நூல்களைக் கண்டு தெரிவித்ததன் மூலம் தமிழ் ஆய்வுக்குப் புதிய தரவுகளைத் தேடி தந்த பெருமைக்கு உரியவராகவும் அமைகிறார். அந்த ஆய்வு இன்றும் தொடர்ந்து தமிழுக்குப் புதிய தரவுகளைத் தந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியது’. ஆய்வுகளோடு தன்னைக் குறுக்கிக்கொள்ளாத பேராசிரியர் இலங்கையில் தமிழ்மொழிக் காப்புக்காகப் போராடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அங்குள்ள அரசின் கொள்கையை எதிர்த்துப் பல தளங்களில் பேராசிரியர் போராடியுள்ளார். தமிழ் வரலாற்றில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளாருக்குச் சிறப்பான இடம் உண்டு. பேராசிரியர்பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் மலர்களும் வெளிவந்துள்ளன. மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளங்களைப் பார்க்கவும். http://www.ulakaththamizh.org/JOTSpdf/018103113.pdfhttp://ta.wikipedia.org/s/70zhttp://keetru.com/index.php…
உசாத்துணை: https://www.facebook.com/deivasundaram.nainar/posts/495297773961038