Google+ Followers

Sunday, January 4, 2015

இடை வேளை ‘மடல்பெரிது தாழை மகிழினிது...’


ஒரு இடை வேளை பதிவு. 

*
முனைவர்.பெருமாள் முருகன் அவர்கள் நாமக்கல் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புறவியல்த் துறையில் புகழ்பெற்ற் இவரது கட்டுரைகளுள் சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? என்னும் கட்டுரை பெரிதும் பேசப்பட்டதாக அமைகிறது.'மாதொரு பாகன்' நினைவுக்கு வருகிறதா?
இன்ன்ம்பூரான்
04 01 2015

*

தமிழ் அறிக-8 (சிம்கார்டுக்குத் தமிழ்)

சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? 

சில மாதங்களுக்கு முன் எனது செல்பேசிக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்திருந்தன. எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்வன. யாரோ ஒருவர் அனுப்பியதை அப்படியே முன்னனுப்பியவை. ஆனால் தமிழரின் மான உணர்ச்சியைத் தூண்டிப் பார்க்கும் செய்தி அது.  ‘நீ செம்மொழித் தமிழனா? அப்படியானால் சிம்கார்டு என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன? உடனே சொல்’ என்பதுதான் செய்தி.
செம்மொழித் தமிழன் என்னும் உணர்விருந்தால் இன்னும் எத்தனையோ சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தெரிந்திருக்க வேண்டும். ’செயல்முறைத் தமிழ்’ என்னும் பாடம் ஒன்றைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். அப்பாடத்தில் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் கண்டறிதல் என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதை நடத்தியபோது இந்தக் குறுஞ்செய்தி பற்றிச் சொன்னேன். உடனே மாணவர்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பல சொற்களுக்குத் தமிழ்ச்சொல் என்னவென்று கேட்கத் தொடங்கிவிட்டனர். நீங்களே கண்டுபிடியுங்கள் என்று சொல்லிச் சமாளித்தேன்.
சார்ஜர் என்பதற்கு என்ன தமிழ்? வின்னர், ரன்னர் என்பவற்றிற்குத் தமிழ் என்ன? மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றுக்குத் தமிழில் சொற்கள் உண்டா? பைக், ஸ்கூட்டர், மொபெட்  என்பவற்றிற்கெல்லாம் தமிழ் யாது? இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சைக்கிளுக்குத் தமிழில் என்ன எனக் கேட்டேன். ‘மிதிவண்டி’ என்று கத்தினார்கள். நல்லது, சைக்கிளில் உள்ள ஹேண்டில் பார், கேரியர், மக்கார்ட், செயின், பிரேக், பால்ரஸ், பெடல் எனக் கணக்கிட்டால் நூற்றுக்கு மேல் வரும் பாகங்களுக்கெல்லாம் தமிழில் சொற்கள் உருவாக்கி இருக்கிறோமா? யாராவது உருவாக்கிக் கொடுத்தால் நாம் பயன்படுத்தத் தயாராக உள்ளோமா? ஏதாவது புதிய சொல் உருவாக்கினால் அதைக் கேட்டு ஏளனமாகச் சிரிக்கத்தான் நம்மால் முடியும். என்றெல்லாம் என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்.  

சிம்கார்டு என்பதற்குத் தமிழ் என்ன என்று கேட்டு எனக்கு வந்த குறுஞ்செய்திகளுக்கு மதிப்புக் கொடுத்துத் தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். ‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை உருவாக்கி என் பிள்ளைகளிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கி எல்லாருக்கும் இச்சொல்லைத் தெரிவித்தேன். பேசி என்பதை இன்று பெயர்ப் பொருளில் பரவலாக வழங்குகிறோம். தொலைபேசி, செல்பேசி ஆகியன வழக்குக்கு வந்து நாட்களாகி விட்டன. இதை மேலும் சுருக்க முடியுமா என யோசித்தேன். வெகு சுருக்கமாக இருக்கும் கலைச்சொல்தான் நிலைபெறும்.

‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை இன்னும் சுருக்கிப் ‘பேசியட்டை’ என்று சொல்லலாம் எனத் தோன்றியது. பேசிப் பயனர் அட்டை என்பதில் மூன்று சொற்கள் இருக்கின்றன. ‘பேசியட்டை’ என்பதில் இரண்டு சொற்கள்தான். அவையும் இடையில் ‘ய்’ என்னும் உடம்படுமெய் ஏற்று ஒரே சொல் போல வடிவம் பெற்றுவிட்டன.  ஒருசொல் நீர்மைத்தாய் உருவாக்கப்படும்  கலைச்சொற்களே சிறந்தவை. அப்படி வடிவம் கொண்ட பேசியட்டை என்பதையே சிம்கார்டுக்கு நிகரான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.

என் சொல் உருவாக்கம் சரியா? தெரியவில்லை. ஆனால் இது ஒரு முயற்சி. பேசியட்டை என்பதையும் எல்லாருக்கும் குறுஞ்செய்தி வழியாகத் தெரிவித்தேன். செம்மொழித் தமிழனா என உணர்ச்சி பொங்க வினா எழுப்பியவர் எவரும் இந்த விடையைப் பற்றிக் கவனம் செலுத்தவில்லை.  சொல் உருவாக்கம் பற்றிக் கருத்தும் தெரிவிக்கவில்லை. செய்தியை யாருக்கும் முன்னனுப்பவும் இல்லை. இதுதான் செம்மொழித் தமிழன் இயல்பு.
                                                                             ---------------
பி.கு. நம் மின் தலிழ் மாதிரி இல்லை. பல கருத்துக்கள் பின்னூட்ட்ங்களில் பயின்று வரும். அதில் ஒன்று இங்கே:


அமர பாரதி சொன்னது…
பெருமாள் முருகன் சார்,

இந்த பின்னூட்டத்துக்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் தோன்றியதை எழுதுகிறேன்.  

சிம் கார்ட் என்பதன் ஆங்கில வடிவம் "Subscriber Indentity Module" இதற்கும் தாங்கள் சொல்லிய பேசியட்டை என்ற சொல்லுக்கும் எந்த சம்பந்தமாவது உள்ளதா? இந்த மாதிரி தமிழ் படுத்துதலே தவறு என்பது என் எண்ணம். சிம் கார்டையும் செல் போன் தொழில் நுட்பத்தையும் நாம் கண்டு பிடிக்க வேண்டும், அதன் பிறகு அதற்கு தமிழில் பெயரிட வேண்டும். அது உலகம் முழுதும் புழங்க வேண்டும். அதற்கு வக்கிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிறர் பெற்ற குழந்தையை பெயர் மாற்றிக் கூப்பிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆப்பிளையும் சப்போட்டாவையும் சொல் மூலம் கண்டு பிடித்து அதற்கும் பெயர் வைப்பீர்களா?  

ஒரு உதாரணத்திற்கு நாம் பேசியட்டை என்றே அழைத்து அதை எல்லோரும் உபயோகிப்பதாகவே வைத்துக் கொள்வோம். நாம் பெங்களூருக்கோ அல்லதது கைதராபாத்துக்கோ சென்றால் அந்த செல் போன் கடையில் பேசியட்டை என்று சொன்னால் அவன் நம்மை பைத்தியக்காரன் என்று எண்ண மாட்டானா? அது அபத்ததின் உச்சமாகவே இருக்கும்.

நாம் பெற்ற குழந்தைக்கு நாம் பெயர் வைப்போம். அடுத்தவன் பெற்ற குழந்தையை அவன் வைத்த பெயரைக் கொண்டு அழைப்போம். அதுவே முறை.

முடிந்தால் எதையாவது கண்டு பிடிப்போம் அல்லது இப்படி தமிழ்ப் "படுத்துதலையாவது" நிறுத்துவோம்.

இப்படி சொல் உருவாக்கம் எந்த மொழியிலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழில் மட்டுமே இருக்கிறது. அதே போல ஸ்பெல்லிங் மாற்றி எழுதுவது. நடத்துவது என்பதை நடாத்துவது என்று எழுதுவது போன்றவை. ஆங்கிலத்தில் இந்த மாதிரி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரு உதாரணத்திற்கு "DAUGHTER" என்பதை "DATTOOOOR" என்று எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்?
14 மார்ச், 2011 ’அன்று’ 6:00 முற்பகல்
உசாத்துணை: http://www.perumalmurugan.com/2011/03/8.html