Thursday, July 24, 2014

கொலைகார பாவிகளா!

கொலைகார பாவிகளா!
இன்னம்பூரான்
24 07 2014 
அன்பின் ஶ்ரீவித்யா, தும்மா விஷ்ணு, ஸ்ருதி, சரத், வஹீத், ரஜியா, நீருடி வம்ஷி, சிந்தாலா திவ்யா, சிந்தாலா சரண், வித்யா, கோலா மஹேஷ், சிந்தாலா சுமன், மேலும் உங்கள் சகபாடிகள் எட்டு பேர்,
நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். மண்டை வெடித்து, மூளை சிதறி, கைகால் உடைந்து, குடல் பிதுங்கி, குருதி வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போய்விட்டீர்கள். ஆம். கொலை செய்து விட்டார்கள். நாசமா போற கைபேசியில் பேசிக்கொண்டே, உங்கள் பஸ்ஸை ஓடும் ரயிலில் தலை கொடுத்து, உம்மையெல்லாம் கொன்று குவித்து, தன்னையும் பலி கொடுத்தார் வண்டி ஓட்டுனர் பிக்ஷாபதி கவுட். அப்பனும் ஆத்தாளும் வவுத்திலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அமைச்சர்களும் அதிகாரிகள் படையெடுத்து வந்து பிலாக்கணம் பாடுவார்கள், மூக்கொலியால். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, பிலாக்கணம் பாடினாலும், நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். படுகாயம் அடைந்த 20 சகபாடிகளில் எல்லாரும் பிழைக்கவேண்டும் என்று தெய்வத்துடன் கலந்து விட்ட உங்களிடம் வரம் கேட்கிறோம். காலை பிடித்து கெஞ்சுகிறோம். பேச்சுக்கு சொன்னேன். உங்கள் கால்கள் தான் உடைந்து மூலைக்கு ஒன்று கிடக்கின்றனவே. உங்கள் பள்ளிக்கூடமாகிய தூப்ரான் காக்காத்தியா டெக்னோ பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தைகள் அழும். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அரசு ஓடி வந்து அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் காசு கொடுப்பார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். இதழ்களில் உரத்த குரலில் வாதம் புரிவார்கள். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். கனம் கோர்ட்டார் மன்றங்களில் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தடிக்கும் வழக்குக்கள் நடக்கும். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
நான் பச்சாதாபத்தினால் இதெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை. கும்பகோணம் பள்ளியில் தீயில் பிஞ்சுகள் கருகி செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு. உடனே தீ வைத்து உங்களையெல்லாம் கொளுத்தினாங்களே தவிர, கேசு நடக்குது. வாரத்துக்கு ஒரு ஆழ்கிணறு பலி. குழந்தைகளையும், பெண்களையும் கொல்லும் பாரத நாட்டில் ஈவிரக்கம் கிடையாது. கீழ்வெண்மணியில் உயிருடன் தீ மூட்டினார்களே. அசட்டை உண்டு.
நண்டேட்- செகந்திராபத் ரயில் ஏற்கனவே நான்கு மணி தாமதம். உங்கள் பஸ் ஓட்டுனரை கெஞ்சினீர்களே. கேட்டாரா? ரயிலை முந்தணும், காவு கொடுத்தாலும். அது தான் அவருடைய இலக்கோ? முந்திட்டார். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உங்கள் பஸ் இழுத்துச்செல்லப்பட்டதாமே. என்னத்தைச் சொல்ல !
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
இது மசியல்ல. உலர்ந்த உங்கள் குருதி.
சித்திரமும் வேண்டாம். மண்ணங்கட்டியும் வேண்டாம். அடுத்த அசட்டை கொலைக்களமும் நடக்கும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

-#-

No comments:

Post a Comment