Sunday, October 26, 2014

சங்கத்தமிழ் மூன்றும் தா !

நண்பர்களே,
சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில்  சங்கத் தமிழ் மாநாடு ஒன்றை சிட்னியில் நடத்தியது. மாநாட்டின் முக்கிய நோக்கம் சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறுவதாகும். அத்தருணம் பிரசுரம் ஆன மாநாட்டு இதழில் வந்துள்ள என் கட்டுரையை, அந்த மாநாட்டை சிறப்புற நடத்திய மன்றத்துக்கு நன்றி கூறி, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அச்சேற்றப்பட்ட பதிவின் பிடிஎஃப் கோப்பையும் இணைத்துள்ளேன்.

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்





சங்கத்தமிழ் மூன்றும் தா !
இன்னம்பூரான்




பாயிரம்

“...சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் காட்சிகள் பனி மூடிய மலை போல் என் கண்ணுக்கு தோற்றலாயின. பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினது உயரமும், பருமையும் கண்ணுக்குப் புலப்படுவது போல் தெளிவாக விளங்கா விட்டாலும், அந்த சங்க நூற்செய்யுள்கள் பொருளமைதியினால் நிலத்திலும் பெரியவனவாகவும், வானிலும் உயர்ந்தனவாகவும், கடல் நீரிலும் ஆழமுடையனவாகவும் தோன்றின...” 

(உ.வே.சா.:என் சரித்திரம்: பக்கம்.764)

அறிமுகம்

‘எந்நூல் உரைப்பினும்,அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க.‘என்ற சங்கத்தமிழ்ப் பண்புக்கு இணங்க,இந்த அறிமுகக் கட்டுரையின் உரைநடை பாயிரம் தமிழ்த்தாத்தாவின் சொற்களில் அமைகிறது. அவருடைய சுவை அனுபவமும், அவரது உவமையின் சுவையும் நமக்கெல்லாம் சங்கத்தமிழ் பயில ஒரு உறுதுணை. அதை ‘புதிய உலகம்’ என்றல்லவோ குறிப்பிடுகிறார்! அதற்கேற்ப சிறுபொழுதும் எனக்கு அமைந்தது நன்நிமித்தமே. வைகறை பொழுது. ஆதவன் குதித்துதைத்து உதித்து எழுந்து இருளை சிதைக்கிறான். சிவந்து வரும் ரோசா வானம். கடலோரம். காற்றில் மிதந்து வரும் ஈரப்பதம். ‘பெரும் பனி நலிய...’ என்று நெடுநல்வாடை:7 கூறியது போல குளுமையாக இருக்கிறது.  பண்டைய உப்பரிகையிலோரு விசாலமான அறை. அங்கு என் வாசம்; நெய்தலே (கடலோரம்) ஆயினும், முல்லை வாசமும் அங்கு வீசுகிறது. சங்கத்தமிழின் நறுமணம் எங்கும் விரவி மயக்குகிறது. தற்காலம் என்னுடன் இருக்கும் தமிழார்வலர்கள் ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ருமேனியா போன்ற நாட்டினர். அனைவரும் தமிழ் புலவர்களே. ‘யாதும் ஊரே...’. இது தான் என்னுடைய இன்றைய தெவிட்டாத இன்பம். அவ்வின்பம் எங்கும் தங்குக.


இக்கட்டுரையின் நோக்கம் உலகளாவிய தமிழார்வலர்கள் சங்க நூற்செய்யுள்களின் பொருளமைதியையும், சுவையையும் அனுபவித்து அதன் இலக்குகளையும் புரிந்து கொண்டுப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே. எனக்கு தெரிந்ததை எளிய தமிழில் பகிர்ந்து, இந்த பணியை துவக்க வாய்ப்பு கொடுத்தற்கு நன்றி, ஆஸ்ட்ரேலியாவுக்கு.


இந்திய சாம்ராஜ்யத்தை, மறம் நழுவி, அறம் நழுவாமல் சிறப்புற ஆண்டு, உலக வரலாற்றிலேயே அமரத்துவம் பெற்ற அகிம்சாமூர்த்தி மாமன்னர் அசோகரின் கல்வெட்டுகளில் தென்னிந்திய சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் அவருடைய ஆளுமைக்கு உட்படாத சுதந்திர மன்னர்கள் என்ற குறிப்பு இருக்கிறது.மேற்படி இராச்சியங்கள், மன்னர்கள், அரசாங்கம், கலாச்சாரம், வரலாறு பற்றிய செய்திகள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆன சங்கத்தமிழ் இலக்கியங்களின் மூலமும், பிளினி போன்ற மிலேச்சர்களின் பயண இலக்கியங்கள் மூலமும் அறியப்படுகின்றன.  இயற்றப்பட்ட காலத்தில், ‘பாட்டு’, ‘தொகை’ என்று மட்டுமே காரணப்பெயர்கள் பெற்ற இந்த இலக்கியங்களுக்கு ‘சங்கம்’ என்ற அடைமொழி கிடைத்ததே, பிற்காலத்தில் தான்.  


எண்கணித வரிசையில் ‘மூன்று’ என்ற எண்ணுக்கு தனி சிறப்பு இருப்பதாக ஒரு தோற்றம்! எல்லாம் மூன்று. அக்காலத்து முடிமன்னர்களில் சேரன் செங்குட்டுவனும், கரிகால் சோழனும், நெடுஞ்செழியன் என்ற பாண்டியனும் அழியா புகழுரை பெற்றவர்கள். முடிமன்னர்களில் சங்கப்பாட்டு இயற்றிய புலவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக, சோழர்களில் நல்லுத்திரனாரும், பாண்டியர்களில் அறிவுடை நம்பியும், சேரர்களில் சேரமான் கணைக்கால் இறும்பொறையும் மூவராயினர். 

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத்தமிழ் மூன்றும் தா.’ 

என்று ஒளவையார் வரன் கேட்ட இசை, இயல், நாடகம் ஆகிய சங்கத்தமிழ் மூன்றும் தான் இந்த முத்தழிழ் ஆயின. அந்த வழி நடந்து, தலைப்பும் செவ்வனே அமைந்தும் நல்வரவே.


சங்ககாலம்:வாழ்வியல்

சங்க இலக்கியம் அக்காலத்து வாழ்வியலையும், சமுதாயத்தை/பொருளியல்/அரசு நிர்வாகம் பற்றிய எழுத்தோவியங்களையும், மனித பண்பாடுகளையும் உற்றது உரைத்தன என்றும்  அந்த அளவுக்கு பிற்கால இலக்கியங்கள் எடுத்துக் கூறியது அரிது என்று கூறும் பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள்,‘சங்கத்தமிழ் பற்றிய பேச்சுத்தான் அடிக்கடி அடிபடுகிறது; படிப்பதோ, வரலாற்று புரிதலோ மிகக்குறைவு’ (K.A.N: 1972:முன்னுரை) என்று 1972ல் சொன்னது இன்றளவும் உண்மை. அந்த குறையை நீக்குவது நம் கடனே.


மக்களின் வாழ்க்கையும், சமுதாய பண்புகளும், அகசிந்தனைகளும், புற செயல்பாடுகளும் சங்க இலக்கியத்தில் விரவி இருப்பதால், அக்காலத்து வாழ்வியலை நாம் ரசனையுடன் கண்டு களித்து, வரலாற்று நுட்பங்களை அனுபவித்து படிக்க முடியும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகள் ஒவ்வொன்றின் தனித்துவம் இயற்கையின் மாண்பு என்க.  சான்றாக, முல்லைத்திணையின் கடவுள் மாயோன்;மக்கள்  இடையர், இடைச்சியர்; புள் காட்டுக்கோழி; விலங்கு மானும்,முயலும்; ஊர் பாடி, சேரி, பள்ளி (தரங்கம்பாடி, புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி போல); நீர் ஆதாரம் சுனை நீர், காட்டாறு; மலர் குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ; மரம் கொன்றை, காயா, குருந்தம்; உணவு வரகு, சாமை, முதிரை; பறை (முழங்கும் வாத்தியம்) ஏறுகோட்பறை;இசைக்கருவி முல்லை யாழ்; இசைப்பண் முல்லைப்பண்; தொழில் சாமை/வரகு சாகுபடி; இளைப்பாறுதல்: குழல் ஊதல்,மஞ்சு விரட்டு. குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல். சங்கக்காலத்து மக்களின் வாழ்வியல் இயற்கைக்கு முரணாவது இல்லை என்பதை நச்சினார்க்கினியார் தனது உரையில் சுவையுடம், அகச்சான்றுடனும் அளித்துள்ளார். இது ஒவ்வொரு திணையிலும் காணப்படும் இன்பம்.


சங்கம் வாழ் மக்கள்

முல்லை பிராந்தியத்தில் குடிசையும் தொழுவமும் இணைந்து இருந்தன. உலர்ந்த கேழ்வரகு இலைகளே ஆசனம்; ஆட்டுத்தோல் தான் படுக்கை விரிப்பு. சாணியும், வரட்டியும் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன. சிக்கிமுக்கி கற்களால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர், இடைச்சேரியில். ஆடு மேய்ப்பவன் கையில் இன்று போல், அன்றும் ஒரு நீண்ட கழி, இலை பறிக்க ஒரு துரட்டி.முல்லைத்திணை பெண்களின் சுருளோலை காதணியும், கருங்கூந்தலும் குறிப்பிடத்தக்கவை. பாலும் தயிரும் வெண்ணையும், நெய்யும் கொடுத்து நெல்லும், பொன்னும் பண்டமாற்று செய்து கொள்வர். அவர்களின் நாட்டியமான குரவைக்கூத்து திருமாலின் புகழ் பாடுவதாக அமைந்திருக்கிறது. 


இதே மாதிரி,செம்படவர்களின் கூப்பாடும், களிறின் பிளிறலை போன்ற கரும்பாலை சத்தமும், சுனை நீராட்டமும், திருப்பரங்குன்றத்து கோயில் இசை நாதமும், மருதத்திணையில் காணக்கிடைக்கின்றன. கிராமங்களை சுற்றி பச்சை பசேல் என்று விளை நிலங்கள். நாற்று நடுவதும் அறுவடை செய்து கதிரடிப்பதும் ஒரு கலை. நதியோரம் நாணல் வளைந்து காட்சி அளிப்பது; குளமும் குட்டையும் குடிநீர் அளிப்பது. மாடி வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் நெல் குவித்தக் குதிர்கள். அரிசியில் பலவிதம். ஆவினம் நிறைந்த தொழுவங்கள், வீட்டிற்கு பின்புறம். செல்வம் நிறைந்த விவசாயிகளின் (தற்காலம் அவர்களின் செல்வம் எங்கே தொலைந்தது?) விருந்தோம்பல், தான தருமம். அபாரமான தச்சு வேலை. நாள் முழுதும் விளையாடி களைத்துப்போன மழலைகள் அம்மையின் முலை நாடுவது. இப்படியெல்லாம் இயற்கையுடன் ஒன்றிய மனித வாழ்க்கை, உருத்திர கண்ணனார் பாடியது போல, போற்றத்தக்கதே.


சந்தனத்தின் நறுமணமும், இஞ்சி, மஞ்சள், மிளகுக் குவியல்களும், முருகனால் தன்வசம் படுத்தப்பட்ட வள்ளியை போல்,பரண் அமைத்து அதில் நின்றுகொண்டு விளைநிலங்களிலிருந்து கிளிகளை விரட்டுவதும், வேட்டையாடப்பட்டு அடிபடும் காட்டுப்பன்றியின் உரத்த குரல் ஓலமும், புலிவருவது பற்றி அச்சத்துடன் எழும் எதிரொலி கூச்சல்களும், ‘சோ’வென்று பொழியும் நீர்வீழ்ச்சிகளும் குறிஞ்சித்திணையின் இயற்கை எழிலை கூட்டுகின்றன. வேட்டைக்குக் கூட வரும் நாய்கள், தேறல் பருக மூங்கில் குழாய்கள், மான்/முள்ளம்பன்றி இறைச்சியின் ருசி, சிறுவர்களின் கவண் கல் வேட்டை எல்லாம் சங்கப்பாடல்களில் அன்றாட குறிஞ்சி வாழ்க்கையை சித்தரிக்கின்றன.


கடலோர வாழ்க்கை, நெய்தலில். ஆழ்கடலே வாழ்வாதாரம். உழைப்பினால் உடல் வலிமையும் அதன் வளைந்து கொடுக்கும் இயல்பும், செம்படவர்களுக்கு. மீன் பிடிக்க திறன் வேண்டும்; அனுபவம் வேண்டும்.கொடுப்பினையும் வேண்டும். மீன் பிடிப்பதோடு, உப்பளங்களையும் பராமரிப்பார்கள், நெய்தல் வாழ் மக்கள். நெய்தல் மீனுக்கு மருதத்தில் கிராக்கி; பண்டமாற்றம் நடை பெறும். குறிஞ்சியில் நுழையும் நெய்தல் உமணர்களின் உப்பு வண்டிகளை, அவ்விடத்து பெண்கள் உப்பரிகையிலிருந்து பார்த்து வியப்பது பற்றி சங்கப்பாடலொன்று உண்டு. துடியிடையும், தோகைக் கூந்தலும், கயல் விழிகளும் பெண்களுக்கு, மோக லாகிரி கூட்டின. வஞ்சிமரத்தாலான குடிசைகளுக்கு வேய்ந்த கூரை. ‘சிறுகுடி’/‘பாக்கம்’ என்ற பெயர்கள் கொண்ட கிராமங்கள். மீன் பிடிக்க இரவில் செல்வார்கள். படகுகளில் மீன் கொழுப்பினால் எரிய விடப்படும் விளக்குகளுக்குத் தனித்துவம் உண்டு. இக்காலத்து சிறுவர்கள் மோட்டார் வாகனங்களை இனம் காண்பது போல, சிறுகுடி சிறுவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, தத்தம் தந்தையின் படகுகளை, விளக்கொளி மூலமே இனம் கண்டு மகிழ்வர்.


கொற்கை தெய்வம் ஆளும் பாலைத்திணையின் தரிசு நிலத்தில் காய்ந்த மண்ணும்,கூழாங்கல்லும், நெருஞ்சி முள்ளும் தான் நடக்கும் பூமியில். நீரின்று அமைந்த பாலையில் விளைச்சல் இல்லை. கானல் நீர் (உரு இல் பேய்) தென்படுவது உண்டு. அங்கு வாழும் ஐயனார் மக்களின் இருப்பிடத்தின் பெயர் பரந்தலை. தூரத்துப்பார்வையில் அந்த குடிசைகள் முள்ளம்பன்றியின் முதுகு போல் காட்சியளிக்கும். வில்லும் அம்பும் குடிசைகளில் இறைந்து கிடக்கும். சாமர்த்தியமாக, ஒளிந்து வேட்டையாடும் குறும்பர்கள் கொள்ளையும் அடிப்பார்கள். ஆடு மாடு திருடுவது அவர்களுக்குக் கை வந்த கலை. நடுகல் தொழுவதும், முன்னோர்களுக்கு தேறலும், இறைச்சியும் படைப்பது இவர்களின் வழக்கம்.


சங்கம்: கலையும், அறிவியலும்

நாடோடிகளாக இருந்து வந்த பழங்குடிமக்களுக்கு இசை, நடனம், நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் ஆகியவற்றில் தான் வாழ்வியல் அமைந்தது. சங்க இலக்கியங்களில் உண்மை விளம்புதலும், கலையார்வமும், நையாண்டியும் பஞ்சமில்லாமல் தாராளமாகக் காணக்கிடைக்கின்றன. யாழிசை யானையையும் வசப்படுத்தியது; முரசொலி அரசாணையை பிரகடனம் செய்தது. பாணர்கள் பயணித்தபடி இருந்தனர்; பரிசில்களை குவித்தனர்.‘மலரியல்’ என்ற புதுச்சொல்லை நான் புகுத்துவது சங்கத்தமிழில் மலர்களை வருணிக்கும் ஆற்றலை போற்றுவதற்குத்தான். 99 வகை மலர்கள் பாடப்படுகின்றன. வானவியல் சாத்திரத்தின் பயன்பாட்டை, பின்னர் சொல்லப்படும் ‘பரிபாடல்‘ என்ற அருமையான சங்கக்காலத்து நூலில் காண்கிறோம். நன்நிமித்தங்களும், தீநிமித்தங்களும்,நாழிகைக் கணிப்பும்  எண்கணிதமும், எடை, அளவு ஆகியவையும் அன்றாட வாழ்க்கையில் இடம் வகித்தன. விவாதங்களுக்கும், பொருள் காண்பதில் போட்டாபோட்டிகளும் வாழ்வியலின் சுவை கூட்டின. கல்விக்கு அடிக்கல் நாட்டின. சங்க இலக்கியங்களை சுவை பட படித்தோமானால், அக்காலத்து மக்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார்கள், நல்லிணக்கத்துக்கு முன்னிடம் கொடுத்தார்கள், அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டார்கள், ஆரோக்கியமான நடைமுறைகளுக்கு மரபு என்ற இறவாவரம் அளித்தார்கள் என்று புரிந்து கொள்ள இயலும். இது போன்ற நாகரீகங்கள் திடீரென்று வந்து குதிப்பவை அல்ல. அவற்றின் பின்னணியில் பல நூற்றாண்டுகள் இருந்திருக்கலாம். உலகெங்கும் நாகரீகங்கள் அப்படித்தான் முகிழ்ந்தன. இது பற்றி ஆங்கிலத்தில் சில வரிகள்:


“... This cross-fertilization, as it were, of the intellectual and economic geniuses of the coalescing groups had indeed been responsible for their rejuvenation. Tamil culture, particularly as reflected in the Sangam classics, was not a unitary, monolithic entity. It was, by and large, the flowering of a social group, whose earlier processes of germination and budding belong to its prehistory and protohistory and spread over a large part of India...” (K.A.N: 1972:89).


சங்கத்தமிழின் இலக்கு

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’. சங்கத்தமிழில் ‘அகமும் புறமும்’ ஆகிய பாடுபொருள்கள் கலந்தோடித்தான் வருகின்றன. உள்மனதில் உறையும் காதல், அன்பு, பாசம், நேசம், உறவு ஆகியவை அகம்; வெளியில் தெளிவாகத் தென்படும் மேலாண்மை, ஆளுமை, வீரம், போர் போன்ற செயல்கள் புறம்.வாழ்வியலின் பன்முகங்கள் கணக்கில் அடங்கா. கார்மேகம் போல அவை வினாடி தோறும் தன்முகபாவத்தை மாற்றிக்கொள்பவை. சமுதாயத்தின் தனி மனிதர் ஒவ்வொருவரின், அவர்களின் பற்பல கூட்டங்களின் பன்முகங்கள் வானில் மின்னும் விண்மீன்களை விட அதிகமானவை. ஒன்று விடாமல், அவை யாவற்றையும், உள்ளது உள்ளபடியாகவும், கற்பனையும் புனைவுமாகவும், யாப்பிசைத்து, எதுகை மோனையுடன் பற்பல பா வகைகளில் பாடி களித்த சங்கப்பாடல்களை என்னே என்று சொல்வது! அதா அன்று. சங்கபாடல்களின் ஊடே வந்து பளிங்கு நீரின் களங்கமில்லா தன்மையை போல்,அறம்,பொருள், இன்பம், வீடு என்ற தர்மங்களை போதிக்கும் ஆசாரத்தை எளிதில் எடை போட இயலுமோ!


சங்கப்பாடல்களில் வரும் களவியலை பற்றி விகாரமான கருத்துக்கள் உலவுவது உண்டு.  ஆங்கிலத்தில், ‘The forbidden fruit and the stolen kiss is always sweet.’ என்றதொரு விவிலியம் சார்ந்த சொலவடை உண்டு. அது இயல்பே. தொல்காப்பியம் பேரின்பம் என்று போற்றும் பொருளே அது. ஆஸ்ட்ரேலிய நண்பர் திரு.சண்முக சபேசன் கூறியது போல, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் பற்றிக் கூறும் போது ‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். . .’ என்று உரைத்ததை நாம் கவனிக்கவேண்டும். டாக்டர்.வ. சு. ப. மாணிக்கம் அவர்கள், ‘அக் களவுக்காதல் புனிதமானது... ‘களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர், களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்.’ என்று விளக்கியதை திரு.சண்முக சபேசன் மேற்கோளாகக் காட்டியபின் விகாரம் ஏன் உலவவேண்டும்?  சங்கப்பாடல்களில் கூடலும், ஊடலும், பிரிவும், பசலையும், உடன்போக்கும், வரைதலும், கற்பும், என்றும் மாறாத அன்பும் (குறுந்தொகை 49: 3-5, பரிபாடல் 11: 138-139), மழலைப்பேறும் வாழ்வியலின் இன்றியமையாத படிநிலைகளாகத்தான் பேசப்படுகின்றன. நற்றிணை 39: 1-3 ல் அதீத காமத்தின் கேடு எடுத்துரைக்கப்படுகிறது. பெண்ணினத்தின் பெருமையே கற்பு என்பதை, அருந்ததி என்ற பத்தினி விண்மீனை காட்டியல்லவோ உணர்த்தினர் (கலித்தொகை:2:21). கொடை வள்ளல் பேகன் மஞ்ஞைக்கு (மயிலுக்கு) சால்வை போர்த்திய பெருந்தகை. ஆயினும் பிற்காலத்துக் கோவலன் போல், ஒரு கணிகையிடம் மனதை பறி கொடுத்தான். மனைவி கண்ணகி வருந்தி மெலிந்தாள். பரணர் அவனிடம் நற்பண்புகளை எடுத்துக்கூறி, அவர்களின் இல்லறத்தை பலப்படுத்துகிறார்.


நட்பு: பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் நெருங்கிய நண்பர்கள். அத்தகை பெருந்தகையோர் சிறப்புற வாழும் காலத்தில் சந்திக்காவிடினும், இன்னல்கள் வரும் காலத்தில் கூடி இருப்பர். பின்னவர் மன்னன். முன்னவர் புலவர். மன்னன் வடக்கிருந்த போது (சல்லேஹனம்: உணவு மறுத்து, தவமியற்றி, மேலுலகம் நாடுவது), புலவரும் உடனிருக்க வருகிறார். அற்புதமான நட்பின் பொருட்டு, ஒளவைக்கு அதியமான் ஈன்ற நெல்லிக்கனி பற்றி யாவரும் அறிவர்.


முதியவர்களுக்கும், முக்கோல்பவர்களுக்கும் (ஞானிகள்),முன்னோர்களுக்கும் மரியாதை, வணங்குதல், போற்றுதல் போன்ற செயல்பாடுகள் அக்காலத்து நாகரீகத்தின் சின்னங்கள் எனலாம். நன்றி மறவாதே என்ற பாடம் அடிக்கடி வருகிறது. நன்கு ஆராய்ந்த பின் தான் செயலில் இறங்கவேண்டும் என்பதற்கு நெய்தலங்கனல் இளஞ்சென்னி நல்லதொரு எடுத்துக்காட்டு. உழைப்புக்கு வந்தனம் செய்யும் நற்பண்பு மிகவும் போற்றப்படுகிறது. கொடையேழு வள்ளல்களாகிய பேகன், பாரி, காரி,ஆய், அடிகன், நள்ளி, ஓரி ஆகியோர் குறுநில மன்னர்களாயினும் , தன்னுடமையையும் ஈந்து இறவா வரம் பெற்றுள்ளனர். அவர்கள் நமக்கெல்லாம் முன்மாதிரி தானே! இத்துடன் முற்றுப்புள்ளி வைக்காமல், தாமரை இலை நீர் போன்ற பற்றற்ற வாழ்க்கை, தவப்பயன், துறவு ஆகியவையும் போற்றப்படுகின்றன.


குறுந்தொகையாக இருந்திருக்க வேண்டிய முகாந்திரம், நெடுநல் வாடையில் தொடங்கியதாலோ என்னமோ, நீண்டு விட்டது! பொறுத்தாள்க. கட்டுரையின் இலக்கு ஒரே ஒரு பாடலின் அருமை சாற்றுவதே. அந்த பாடல்: பரி பாடலில் வையையை பற்றிய புகழுரையின் சிறிய பகுதி.


பரிபாடல்

‘பரிபாடல்’ என்ற சங்க இலக்கியத்தின் ‘ஓங்கு’ பொலிவே அதன் உள்ளடக்கம். திருமாலையும், முருகனையும், கொற்றவையையும் பக்தியுடன் பாடி தொழும் பரிபாடல் வைகை நதியையும் பற்றி பாடுகிறது. இசைப்பா என்ற தனித்துவம் வாய்ந்த யாப்பில் பாடப்பட்ட பரிபாடலை ஆதரித்த மன்னன் பெயரும்,தொகுத்தவர் பெயரும் காணக்கிடைக்கவில்லை.  ஒவ்வொரு செய்யுளிலும், ஆசிரியர், இசை அமைத்தோன், பண் ஆகியவை, உசாத்துணை போல் இடம் பெறுவது ஆய்வு செய்ய மகத்தான வரவு. சங்கத்தமிழ் இசையாக்கம் யாவும், பரிபாடலைத் தவிர, மறைந்து போயின. தொகுக்கப்பட்ட எழுபது பாடல்களில் எஞ்சியிருப்பவை இருபத்தியிரண்டு மட்டுமே: திருமாலுக்கு ஆறு, முருகனுக்கு எட்டு, வையைக்கு எட்டு. அவற்றில் ஈற்றடியின் சில வரிகள் இங்கே, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதற்கு இணங்க:


வையையின் இயல்பு

நாமமர் ஊடலும் நட்பும் தணப்பும்

காமமும் கள்ளும் கலந்துடன் பாராட்டத்

தாமமர் காதலரொ டாடப் புணர்வித்தல்

பூமலி வையைக் கியல்பு! (பாடல் 20: வரி: 108-111)


நல்லந்துவனார் இயற்றி, காந்தாரத்தில் நல்லச்சுதனார் பண் வகுத்த இந்த வையை  பாடலின் ஈற்றடிகளான இவை சங்கத்தமிழில் அடிக்கடி பேசப்படும் புனலாடலை சிறப்பித்து பேசுகிறது. இன்று காணக்கிடைக்காத புது வெள்ளம், வையையில் பெருக்கெடுத்து ஓடுவது. அது, ஊடலும் கூடலும், அவ்வப்பொழுது சிறு பிரிவும் ஆன நிகழ்வுகளை காமத்தையும் கள்ளையும் ஒன்றாகக் கலந்து அளிப்பது போல் இருக்கிறதாம்! இது பற்றி புலியூர் கேசிகன், ‘புனலாடலினை நயமாக (நைச்சியமாக) கூறியதன் மூலம் தலைவனை அந்நினைவுகளிலே செலுத்தினான் பாணன்...’ என்கிறார் (பு.கே:2010 பக்கம் 241).

தலைவியிடம் தலைவனை வரவழைக்கும் இயல்பு கொண்ட வையையை வாயார வாழ்த்தாத பெண்ணினம் உண்டோ!

-#-

உசாத்துணை:

உ.வே.சாமிநாத ஐயர்: என் சரித்திரம்: சென்னை: விகடன் பிரசுரம்

Francois Gros: 1968: Le Paripatal: Pondichery: Institut Framcais D’Indologie

J Vazek, S.V. Subramanian: 1989: A Tamil Reader I: Chennai: International Institute of Tamil Studies

J Vazek: 1989: A Tamil Reader II: Chennai: International Institute of Tamil Studies

Muthukumar, V. N. (2011). Poetics of place in early Tamil literature.

K.A. Nilakanta Sastri: 1972: Sangam Literature: Its cults and Cultures: Chennai: Swathi Publications

சபேசன், அவுஸ்திரேலியா:Selected Writings by Sanmugam Sabesan: retrieved with thanks on August 14, 2014 from http://tamilnation.co/forum/sabesan/060214valentinesday.htm

No comments:

Post a Comment