Google+ Followers

Monday, March 10, 2014

இனிதே அமைய: 1 , 2 , 3 , ...

இனிதே அமைய: 1 , 2 , 3 , ...


நற்றாய் வணக்கம்

http://www.naamat.org/wp-content/uploads/2011/04/6A_1_Raphael-Lemkin-and-the-Genocide-Convention-788x1024.jpg
இன்னம்பூரான்
10 03 2014

இன்றைய சூழலில் அகிலாண்டேஸ்வரி அயர்ந்து போய்விட்டாள். உக்ரேனில் உலக்கை மோதலொலி. மலேசிய விமானம் மறைந்து போய்விட்டது. எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, கொலை, குத்து. புவனமெங்கும் பாவையருக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றம்.

பாரதமாதா செய்வதறியாமல் தத்தளிக்கிறாள். அரசியல் டபராக்கள் எழுப்பும் ஒலி கர்ணகடூரமாக இருக்கிறது. தேனை வழித்தவன் தேன் கூட்டுக்குத் தீ மூட்டுகிறான். நாட்தோறும் ஒரு ஊழல் கசிகிறது. கோடிக்கணக்கில் அசகாய சுருட்டல். பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி தத்துவமே தேசிய தேர்தல் வரும் காலகட்டத்தில் கேள்விக்குறியாகி விட்டது. பாரதமாதா பார்வையிழந்த பச்சிளங்குழந்தை போல் பரட்டைத்தலையுடன் விசும்புகிறாள்.

தமிழ் பேசும் பகுதிகளில்  கல்வியில் ஊழல், மருத்துவத்தில் ஊழல். ஊழலில்லாத்துறையில்லையாம்: கல்லும், மண்ணும் காசு கொட்டும் கசானா. நிலம், நீச்சு, அறுவடைக்கு உத்தரவாதமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இனவாதம் தலை விரித்தாடுகிறது. வெட்டிப்பேச்சுக்கு பஞ்சமில்லை. கந்து வட்டி எக்காளமிடுகிறது. கொள்கை, கோட்பாடு எல்லாம் குப்பையிலே. தமிழன்னையோ தலை குனிந்து அழுகிறாள்.

வரலாற்றுப்போக்கில் அலசினால், இவையெல்லாம் புதிய தீவினைகள் அல்ல. ஆனாலும், மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும் தீர்வுகள் கண்டுள்ளன. காலசக்ரம் அவற்றையும் கபளீகரம் செய்துள்ளது என்றாலும், மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும் கடாசப்படவேண்டிய அலை வரிசையில் இல்லை.  1947-இல் இந்தியா விடுதலை பெற்றதே, இதற்கு சான்று. மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும், தீர்வுகளும் காண, விசை தனிமனிதர்களிடன் தான் உளது. அண்ணல் காந்தியும், அப்ரஹாம் லிங்கனும் உதாரணங்கள். அவர்கள் அவதார புருஷர்கள். பாமரனும் பட்டொளி வீசும் சாமரத்தை, அகிலாண்டேஸ்வரிக்கும், பாரதமாதாவுக்கும்,தமிழன்னைக்கும் வீசி, முப்பெரும் தேவிகளின் ஆயாசத்தைக் களைய முடியும், திரு. ராஃபேன் லெம்கின்னைப் போல.

‘இனவெறிக்கொலை’ (genocide) என்ற சொல்லை 1944-இல் அகராதியில் பதித்த இவர், 1933-இல் ‘இனவெறிக்கொலை’ க்கு எதிராக போராடத் தொடங்கினார். நாஜிகளை குற்ற விசாரணை செய்த நூரம்பெர்க் நீதி மன்றத்தில் அவர்களுக்கு எதிராக திறனுடன் வாதாடினார். தன்னுடைய சுற்றத்தில் 40 பேர் இனவெறிக்கு பலியானதை அப்போது தான் அவரால் அறிய முடிந்தது. ஐ.நா. இவரது கோட்பாடுகளை 1948-இல் ஏற்றுக்கொண்டது. அதற்கு பின்னும் எல்லா நாடுகளிலும் பிரசாரம் செய்த இவர், வறுமையில் உழன்று 1959-இல் மறைந்தார். ஒரு குக்கிராமத்தில் பிறந்த திரு. லெம்கின் ஒரு தனி நபர் சாதனையாளர். நமக்கு அவர் மாடல்.


இன்றிலிருந்து இனிதே அமைய: 1 , 2 , 3 , ...” பிரசாரம் தொடங்குகிறது. எந்த சமுதாய அமைப்பும் -அரசியல், தனியார் நிருவாஹம், சாதி, இனம் வகையறா, இந்த இழையின் இலக்கு அன்று. அவர்களை எல்லாம் நல்வழியில் திருப்பும் ஆற்றல் உள்ள தனி நபர் (ஆணும், பெண்ணும்) தான் எமது இலக்கு. நல்லதே நடக்கட்டுமே. இந்த ‘இனியவை 1, 2,3 ... பதிவுகளின் நோக்கு பலிக்கட்டுமே.
சித்திரத்துக்கு நன்றி: http://www.naamat.org/wp-content/uploads/2011/04/6A_1_Raphael-Lemkin-and-the-Genocide-Convention-788x1024.jpg

***

தனி நபர்களால் கடைப்பிடிக்கக் கூடியவை, இவை. நடைமுறையில் செய்து தான் பாருங்களேன்.

அன்பே அமுதசுரபியாம். அதுவே ஆணிவேராம். அதுவே இன்பசாகரமாம். அதுவே ஈர்க்கும் சக்தியாம். அதுவே உவகை பொங்கும் ஊற்றாம். ஊருக்குக் காவல் தெய்வம், அவளே. எழுத்தாலே ஏட்டை அலங்கரிப்பவள், அவளே. ஐயம் யாதுமில்லை, ஐயா. ஒற்றுமைக்கு அவள் தான் கலங்கரை விளக்கு. ‘ஓம்’ என்ற மந்திரமும் அவளே.
[1]