Saturday, December 7, 2013

ஞானோதயம்:அன்றொரு நாள்: டிசம்பர் 8

அப்டேட்: செப்டம்பர் 2013ல் ஒரு பத்து நாட்கள் ஒரு விபஸ்ஸன்னா தியான மையத்தில் தங்கியிருந்தேன். அதை பற்றி சில சொற்களையாவது சொல்ல ஒரு தருணம் கிடைக்க வேண்டி காத்துக்கொண்டிருந்தேன். இன்று சுபதினம். வாசகர்களுக்கு ஆர்வமிருப்பின், ஆராவாரமில்லாமல் அந்த சாந்தி ஸ்தலம் பற்றி பேசலாம்.
இன்னம்பூரான்
8 12 2012
அன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்

Innamburan Innamburan 8 December 2011 18:23

அன்றொரு நாள்: டிசம்பர் 8
ஞானோதயம்

சித்தார்த்த கெளதமர் என்ற இளவரசர், இல்லறம் துறந்து, அங்குமிங்கும் அலைந்து, திரிந்து, கடுந்தவம் புரிந்து, தேடிய விடை காண இயலாமல், மனம் வருந்தினார். கயா க்ஷேத்ரத்தில், ஒரு அரசமரத்தடியில் அமர்ந்து தியானித்தார். அங்கு அவருக்கு ஞானம் கிட்டியது, மனிதனை ஆட்டிப்படைக்கும் பிணியின் மூலத்தை புரிந்து கொண்டார். ஆத்ம தரிசனம் கிட்டியது. இனி அவர் சாக்ய முனி. 
தொன்மை, மரபு, ஞானம், சமய கோட்பாடு, இவையெல்லாம் கூடி வாழ்பவை. ரசவாதமும் உண்டு. கட்டுச்சாதமும் உண்டு. சங்கமமும் உண்டு. விழுதுகளும் உண்டு. நாம் அவற்றையெல்லாம் ஆராயப்போவதில்லை. சில மரபுகள் படி, ‘உதயம் கிட்டாவிடின் சித்தார்த்தனின் அஸ்தமனம்’ என்ற கடுங்சபதம் எடுத்தாராம். ஒரு மரபு தியானத்தை கலைக்க வந்த மாரனை வென்றார் என்கிறது. மற்றும் சில மரபுகள் அவருடைய ஆழ்ந்த தியானத்தை பற்றி சொல்கின்றன.  பாலி மொழியில் ‘ தேரவடா’ மரபில் இருக்கும் முதல் பெளத்த நூலின் படி சாக்யமுனியே கூறியதாக சொல்லப்படுவது:

இரவின் முதல் பொழுதில் எண்ணற்ற தன் முன் பிறவிகளை உணர்ந்து, இரண்டாவது பொழுதில் கர்ம விதியையும், உகந்த இலக்கு கருத்து/ வாக்கு/செயல்/வாழ்வியல்/ முயற்சி/மனோபலம்/முனைதல்/ ஞானமும்,நிர்வாணமும் என்ற எட்டுவகை பாதையும், மூன்றாவது பொழுதில், 1. நீங்கா பிணியில் உழலும் வாழ்க்கை, 2. அதன் மூலம் பந்தமும், ஆசையும், 3. பந்தம் நீங்கினால், பிணி நீங்கும் & 4.உகந்த வாழ்வியலின் எட்டுவகை பாதையே அதற்குதவும் ராஜபாட்டை என்ற நான்கு சத்திய பிரமாணங்கள் தான் தன்னுடைய ஞானோதயம். 

நான் எழுதுவதெல்லாம் சிறிய அறிமுகமே தவிர அத்தாட்சிப்பத்திரங்கள் அல்ல. இயன்றவரை நம்பகத்தன்மை உடைய உசாத்துணைகளை தேடி அளிக்கிறேன். சாக்யமுனியின் கைங்கர்யங்களில் உளவியல் ஆராய்ச்சி முதலிடம் வகிக்கிறது, நுட்பங்களை நோக்கினால். உபநிடதங்கள் ஆத்மாவின் அழிவின்மையை பற்றி கூறுகிறது என்பார்கள். சாக்யமுனியோ மானிடனின் உடல் கூறுகளையும், உளவியல் நோக்குகளையும் பகுத்துக்காட்டினார் என்பார்கள். சாக்யமுனியின் வாக்கு, ‘...கடந்த/நிகழ்/வரும் காலங்களில், உள்ளிருப்பதோ/வெளியிலிருந்து வந்ததோ, நுட்பமோ/வெளிப்படையோ, அந்த உணர்வு, பிரஞ்கை யாதாயினும், அது எனது அல்ல;நான் அல்ல;...‘. ( மஜ்ஜிம நிகாயம் I:130).  அவருடைய முதல் பிரசங்கம்: ‘சுழலும் தர்மசக்ரம்’: (பாலி தம்மசக்கப்பவத்தன சூத்ரம்: SN 56,11). அவ்விடத்தே, பெளத்த மார்க்கத்தின் அஸ்திவாரம் தென்படுகிறது: எதிலும் தீவிர அணுகுமுறை வேண்டாம். கடுந்தவமும் வேண்டாம். லெளகிகத்தில் உழலவும் வேண்டாம். மத்திம பாதையில் நட. இது அன்றாட வாழ்க்கை.  சாஸ்வதம் என்று ஒன்றுமில்லை. சூன்யம் என்றும் சொல்வதிற்கில்லை. இது மனோதர்மம். 

இதுவே எல்லை கடந்த பேச்சு. மேலும் ஏதாவது சொல்லி சிக்கிக்கொள்ளலாகாது. அது ஒரு தற்காப்பு வர்மக்கலை.
மனசு கிடந்து அடிச்சுக்கிறது. சொல்லிட்றேன். சாக்ய முனி, நாகார்ஜுனர், போதி தர்மர், தலை லாமா என்ற பேச்செல்லாம் எடுக்காவிடினும், 
‘புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி’
என்று அந்த மாமுனியின் பாதாரவிந்தங்களில் நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வணங்குவது நலன் பயக்கும் என்று சொல்லி விடை பெறுகிறேன்.
இன்னம்பூரான்
08 12 2011
buddha.jpg
உசாத்துணை
Kornfield.J. The Teachings of the Buddha: Shambala
Eknath Easwaran (Translator) The Dhammapada

Geetha Sambasivam 8 December 2011 19:49


‘புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி’//


அதே அதே! 


No comments:

Post a Comment