Google+ Followers

Monday, September 2, 2013

இரு துரும்புகள், ‘வல்லமை’, தலை லாமா

Innamburan Innamburan Fri, Jun 22, 2012 at 4:12 PM

‘இரு துரும்புகள்’ என்ற என் கட்டுரையை ‘வல்லமை’ இதழில் பிரசுரித்துள்ளார்கள். நான் அனுப்பிய ஃபோட்டோ,  தொழுகைக்குரிய தலை லாமா அவர்களுடைய தளத்திருந்து. உடனுக்குடன் அதை விட பொருத்தமான ஃபோட்டோவை பதித்த வல்லமை ஆசிரியருக்கு போனஸ் நன்றி.
இன்னம்பூரான்
22 06 2012


இரு துரும்புகள்
Friday, June 22, 2012, 9:13
இன்னம்பூரான்
பொதுமக்களுக்குச் சான்றோர்களின் சந்திப்புப் பற்றி அறிய ஆர்வம் மிகும் என்று சொல்வார்கள். ஆங்க் ஸான் ஸூ க்யி கடார நாட்டின் (மியான்மார் அல்லது பர்மா) பிரபலம். தொழுகைக்குரிய தலை லாமா, நாடு கடந்து வந்த திபெத்திய மத/சமுதாய தலைவர். இருவரும் ஜூன் 19 அன்று லண்டனில் சந்தித்துக்கொண்டதாக, இன்றைய செய்தி. ஜூன் 19-ம்தேதி ஆங்க் ஸான் ஸூ க்யி அவர்களின் பிறந்த தினம். அன்றொரு நாள் தொடரில் அவரைப் பற்றியும், அவருடைய தந்தையைப் பற்றியும், இந்தியாவுக்கும் அவருக்கும் உள்ள அன்யோன்யத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.
1988ல் இங்கிலாந்திலிருந்து உடல்நலம் குன்றியிருந்த தன் அன்னையைப் பார்க்க வந்த ஆங்க் ஸான் ஸூ க்யி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 24 வருடங்களாக அங்கு தவம் கிடந்தார். வெளிநாடு சென்றால், திரும்பி வர விட மாட்டார்கள், மியான்மாரின் ராணுவ ஆட்சி. சைனாவுக்கும் மியான்மாருக்கும் போதாத காலம் இப்போது. ஆங்க் ஸான் ஸூ க்யி பாராளுமன்ற அங்கத்தினராகும் அளவுக்கு, சைனாவுக்கு உகந்த சர்வாதிகாரப்போக்கை இந்த ராணுவ ஆட்சி சற்றே தணித்தது குற்றம் தான், சைனாவின் கணக்கில்.
போதாக்குறைக்குப் போன வருடம் தான் சைனாவின் உதவியுடன் கட்டப்பட்ட மின் உற்பத்திச்சாலை நிறுத்தி வைக்கப்பட்டது. அடடா! மற்ற நாடுகளுடன் மியான்மார் சேர்ந்தால், தன்னுடைய ஆளுமை குறைந்து விடுமே என்று சைனா கருதும் வேளையில், இந்தத் தலை லாமாவை இவர் சந்தித்தது சைனாவுக்குச் சவால் போல ஆகி விட்டது. இவருடைய தேசீய ஜனநாயக கட்சி சைனாவின் அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய காலகட்டத்தில், இது ஒரு நெருடல்.
தலைலாமாவைச் சைனாவுக்கு அறவே பிடிக்காது. யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே. தலைலாமா வருவார் பின்னே. சைனாவின் வசை வரும் முன்னே. அவர் இங்கிலாந்துக்கு வந்ததைக் கடுமையாக விமரிசித்தது, சைனா. ஒலிம்பிக் வீரர்களை வாபஸ் பெறுவோம் என்று கர்ஜித்தது. தலைலாமா இதையெல்லாம் சைனாவின் சம்பிரதாய எதிர்ப்பு என்று உதறி விட்டார். போன மாதம் பிரிட்டீஷ் பிரதமர் டேவிட் கேமரான் தலைலாமாவைப் பார்த்ததற்கு, கண்டபடி சைனாவால் நிந்திக்கப்பட்டார். உலகநாயகனாக விளங்கும் தலைலாமா சைனாவின் பார்வையில் ஒரு பேய்.
சரி. இதையெல்லாம் தவிர்க்க முடியாது. விளம்பரம் இல்லாமல் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஆங்க் ஸான் ஸூ க்யியின் தைரியத்தைத் தான் பாராட்டுவதாகச் சொல்லி. ஆசிகள் பல வழங்கினாராம், தலைலாமா அவர்கள். அவளோ பெளத்தமதத்தினள். இவரோ பெளத்த மதகுரு. இந்த ஆசி நன்மை பயக்கும். சைனா சம்பந்தப்பட்டவரை இருவரும் துரும்புகள். உலகம் இருவரையும் கரும்புகள் எனக் கருதுகிறது.
இந்தக் கட்டுரை எதற்கு என்று தோன்றலாம், சிலருக்கு. நாமும்தான் எத்தனை வருடங்கள் கிணற்றில் தவளை நீச்சல் அடிப்பது என்ற ஆதங்கம். இந்தத் தகவல் பல இதழ்களில் இன்று வந்துள்ளன.