Google+ Followers

Monday, July 1, 2013

இன்னம்பூரான் பக்கம் ~ 19
இன்னம்பூரான் பக்கம் ~ 19
Innamburan S.Soundararajan Mon, Jul 1, 2013 at 1:39 PM-=Inline image 1
‘…சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார்…’. (இன்னம்பூரான் பக்கம் ~ 17)

ஏதென்ஸ்ஸின் பொற்காலம் பற்றி எழுத நினைத்தபோது, அருமையான நூல் ஒன்று கிட்டியது. வித்யாதானத்தை பற்றிய சாக்ரட்டீஸ்ஸின் சிந்தனைகள் வரவேற்கப்பட்டதால், அந்த நூலின் வரவு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவபோதனைத்துறையின் நுழைவாயிலிருந்த வில் டூராண்ட் (WILL DURANT, PH.D.) என்ற ட்யூட்டர் (instructor) 1917 ல் எழுதிய ‘தத்துவமும் சமூக சிக்கல்களும்’ என்ற நூல், அது. சமூகத்தின் சிக்கல்களை களைவதில் தத்துவம் ஆர்வம் காட்டவில்லை என்ற அந்த நூல் தான் அவருடைய முனைவர் விருதுக்கான ஆய்வு கட்டுரை/ முதல் நூல். பிற்காலம் கலாச்சாரங்களும் நாகரீகங்களும் பிறந்த வரலாறுகள் எழுதி , இன்றளவும் இறவா புகழ் பெற்ற வில் டூராண்ட் அவர்களே, நமக்கு அருமையான நடைமுறை தத்துவங்களை போதித்தவர். என்றாவது ஒரு நாள் அவரை பற்றி எழுதுவது நலம் பயக்கும். ஏதன்ஸ்ஸின் பொற்காலத்தை பற்றி அவர் எழுதியதின் சில அத்யாயங்களின் சாராம்சத்தை மட்டும் கூறி, உசாத்துணையாக, அந்த மின் நூலை தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். கட்டுரையையும் அந்த ஒற்றையடி பாதையில், சிறிது காலம் பயணிக்கும்.
சாக்கிரட்டீஸ் காலத்து மறுமலர்ச்சி/ புரட்சிகரமான சிந்தனைகள்/எதையும் புரட்டிப்பார்க்கும் மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மூல காரணமே, அதற்கு முந்தியகாலத்து சர்வாதிகார அரசியல் போக்கு. தனிமனிதர்களின் ஆதரவை கட்டாயப்படுத்தி ஆளுமை பெற்றுக்கொள்வதால், நீறு பூத்த தணலாக அதை எதிர்க்கும் சிந்தனைகள், மறைமுகமாயினும், வலுத்து வந்தன. வெளிப்படையாக நிலவும் சம்பிரதாயங்களை புறக்கணிக்கும் தனி நபர் போக்கு வலுத்தது.
“நம்மால் ‘உயர்ந்த பழக்க வழக்கங்கள்’ என்று கருதப்படும் எல்லாவற்றையும் குவித்து வைத்து, தீவிர சிந்தனைக்கு பிறகு, அவற்றில் ‘மட்டமானவையை’ கடாசி விட்டால், மிச்சம் ஒன்றுமிருக்காது.” என்ற சிந்தனை கி.மு. நான்காவது நூற்றாண்டிலேயே முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் தடபுடலாக (மேலாண்மை ஆதரவு/பிரசாரம்/வற்புறுத்தல் மூலமாக) போற்றப்பட்ட நடைமுறைகள் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கப்படும் போது வலுவிழந்து விடுகின்றன.
*
தற்காலம்: இந்திய சூழ்நிலை: குடியரசு, அரசியல் சாஸனம், விடுதலை, சுயாட்சி, தேர்தல் என்ற மந்திரங்களின் மீது ஒரு காலத்தில் இருந்த அசையா நம்பிக்கைத் தளர்ந்து விட்டது. பிரதிநிதிகளின் அணுகுமுறையும், அட்டகாசமும், ஆளுமையும், ஆகாத்தியமும், இற்செறிப்பும் தாங்கமுடியவில்லை. மக்கள் நலம் அம்பேல். அரசியல் சாஸனத்தின் பிம்பம் தணிக்கை. ஆளுமைக்கு அதன் மீது அளவு கடந்த ஒவ்வாமை. ஆரம்பக்கல்வியை மனித உரிமையாக பாராட்டிய அரசியல் சாஸனம், அதை செல்லாக்காசாக ஒதுக்கி வைத்தது. மூன்று தலைமறையாக உறங்கிக்கிடந்த இந்த உரிமையை இழந்து செத்துப்போன இந்தியர்களின் தொகை பல கோடி. இன்றும், இந்த உரிமை அல்லாடுகிறது. சுயாட்சியும், தேர்தலும் எள்ளலுக்கு உரியவையாக ஆயின. நாம் இவற்றையெல்லாம் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கவேண்டும். களையறுக்க வேண்டும்.
*
வில் டூராண்ட் தனது ஆய்வில் பட்டியலிடும் சில கிரேக்க காலத்து சிந்தனைகளையும், நடைமுறைகளையும் காண்போம்.
  1. ‘கடவுள் எல்லாரையும் சுதந்திர மனிதனாகத்தான் படைத்தார். (அக்காலம் அடிமைகள் உண்டு; இக்காலம் கொத்தடிமைகள்.)
  2. இயற்கை யாரையும் அடிமையாக படைக்கவில்லை. (ஏழ்மை அடிமைகளை உருவாக்குவதை கண்முன் காண்கிறோம். உலகின் செல்வத்தின் பேர்பாதியின் சொந்தக்காரர்கள் 8% செல்வந்தர்கள் என்று உலக வங்கி ஆய்வு ஒன்று சொல்கிறது: 2013).
  3. போட்ஸ்ஃபோர்த் என்ற வரலாற்றாசிரியர் கிரேக்க சிந்தனையில் உள்ள புரட்சிகரமான சோஷலிஸ்ட் கருத்துக்களை கூறுகிறார்.
  4. பெண்ணுரிமையை பற்றிய முற்போக்குக் கருத்துக்களை Euripides & Aristophanes துணிவுடன் முன் வைக்கிறார்கள்.
  5. அரசின் போக்கை அவர்கள் கண்டிக்க பயன் படுத்திய உவமானம்: சிலந்தி வலையை போல், அது சின்ன பூச்சியை பிடித்து, பெரிய தலைகளை தப்ப விடுகிறது என்று!
*
தற்காலம்: சொல்லியா தெரியவேண்டும்! பல்லாயிரம் கோடிகளை தொலைத்தவர்கள் அல்லவா, நம் மக்கள்.
*
  1. Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.
இந்த கண்காட்சியை நடத்திய பிறகு தான், வில் டூராண்ட், சாக்கிரட்டீஸ்ஸுக்கு முன் கோலோச்சிய ஸொஃபிஸ்ட்ஸ் (The Sophists) என்ற தத்துவ போதகர்களுக்கு வருகிறார். இந்த கட்டுரையே கனமாகி விட்டது. பிறகு பார்க்கலாம்.
(தொடரும்)

பிரசுரம்: http://www.atheetham.com/?p=5202