Friday, June 14, 2013

21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்


21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21


இன்னம்பூரான்

  • Friday, September 30, 2011, 11:55

பாலப்பிராயமும், ஆடிட்டும்:
இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம்.
‘ஆடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே ‘செவி சாய்ப்பது, கேட்டறிவது’. தணிக்கைத் துறையின் செயல்முறைகளைக் கூட மக்கள் அறிந்து கொண்டால், அவர்களே உள்ளூர் விஷயங்களை, “குப்பை அள்ளுவதிலிருந்து சிசேரியன் ஆபரேஷன் வரை” தணிக்கை செய்ய இயலும். வாழ்வாதாரம் உயரும். அதாவது, தணிக்கை என்பது நிதி சம்பந்தமானது மட்டுமல்ல. அந்தக் கழுகுப் பார்வைக்கு மனித யத்தனங்கள் யாவற்றையும் உட்படுத்தலாம் என்பதே. உதாரணமாக, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் குறிப்புக்கள் எழுதி வைக்க வேண்டும். அவற்றை அலசுவதை ‘மெடிக்கல் ஆடிட்’ என்பார்கள்.

நமது ஊர்களிலே அநாதை இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. தலித் மாணவ மாணவிகளுக்கு சலுகை தரும் இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. குற்றமிழைத்த சிறார்/சிறுமிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் உண்டு. மாற்றுத்திறனாளி/ கண்ணொளி மங்கியோர்/ கேட்கும் திறனற்றவர்கள்/பேசும் திறனற்றவர்கள்/ மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர் என நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளுக்கு உறைவிடம், பள்ளி ஆகியவை உண்டு. நம்மில் யாராவது அவ்விடங்களுக்கு சென்று, என்னதான் நடக்கிறது என்று கேட்டது உண்டா? உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், பொது ஜனம் போய்க் கேட்டால், அங்கு கோலோச்சுபவர்கள், அதிகாரப்பேய் ஆவேசத்தில் விரட்டுகிறார்களா?, மழுப்புகிறார்களா? பொய்யுரைக்கிறார்களா? நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளை பேச விடுவதில்லையா? அவ்வாறெல்லாம் இருந்தால், மேலும் படிப்பீர்கள் என நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இருபாலாரும் போர்க்களப் பணிகளில் முனைந்து இருந்ததாலும், ஜெர்மானிய குண்டுவீச்சு மும்முரமாக இருந்ததாலும், சிறார்கள், பாதுகாப்புக் கருதி, முன்பின் தெரியாத குடும்பங்களுடன் வாழ, கிராமங்களுக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களில் ஒருவரை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பேசிய போது, செவிலித்தாயின் அன்பைச் சொல்லிச், சொல்லி, உருகினார். அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் மத போதகர்களின் அநாகரீக பாலியல் பலாத்காரங்களும்  பதிவு ஆகியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஒரு வாரம் முன்னால் வந்த ஒரு தணிக்கை அறிக்கை (ஆடிட்டர் ஜெனரல் கொடுத்தது அல்ல. ஆஃப்ஸ்டெட் என்ற அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு). சமுதாய நலன் என்ற அரசு பிரிவினர் இந்த இல்லங்களை சோதித்து வர வேண்டும் அவர்கள் செய்யும் சோதனை பற்றி, குழந்தைகளிடமே கேள்வி கேட்கப் பட்டது. 224 குழந்தைகளிடம் கேள்வி கேட்கப் பட்டது. அவற்றில் 149 பேருக்கு , இந்தச் சோதனை அனுபவம் உண்டு. முக்கால்வாசிப் பேர்களுக்கு சோதனை வரப் போவது தெரியும். கால்வாசிப் பேருக்குத் தெரியாது. மேலும் தோண்டித் துருவினால்: கால்வாசி குழந்தைகள் தாங்கள் சோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முக்கால்வாசி குழந்தைகள் தாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை என்றனர். இருபத்தேழு குழந்தைகள் இருப்பிடங்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினதை சொன்னார்கள். இன்னும் சிலர் (4/27) நல்லதையே சொல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.
இது பெரிய விஷயமல்ல. தணிக்கை அறிக்கையைச் சுருக்கி அளித்தேன்.  நமக்கேற்ற சில படிப்பினைகள் முக்கியம். அவை:
  1. இந்த விசாரிப்பு, அவரவரின் மொழியில் நடந்தது;

  1. பதினான்கு வயதுக்கு மேல்/கீழ், ஆண்/பெண், இருக்குமிடம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, நுட்பங்கள் அறிய;
  2. இந்தச் சோதனைகளை குழந்தைகள் நோக்கிய விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  3. இடம்,பொருள், ஏவல் பொறுத்து, இதமாக, நிதானமாக கேள்விகள் கேட்பதில் பயன் அதிகம் உண்டு.
ஒரு வித்தியாசமான தணிக்கையை பகிர்ந்து கொண்டதின் விளைவாக, உங்கள் ஊரில்/பேட்டையில் எழக் கூடிய வினாக்களில் ஐந்து, மாதிரிக்கு:
  1. அநாதை இல்லங்களில், ராணிப்பேட்டையில் இருக்கும் தீனபந்து இல்லத்தில் என்னால் இயன்றது போல, சிறார்களுடன் பேசமுடியுமா?
  2. உங்கள் அருகில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு நடப்பதை மேற்பார்வை செய்வது யார்? செங்கல்பட்டில் ஒன்று உள்ளது.
  3. தலித் ஹாஸ்டலில் சமபந்தி போஜனம் என்றாவது நடப்பது உண்டா?
  4. பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவை, பெற்றோர் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
  5. புதிய கருத்து/வினா ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
*********
சித்திரத்துக்கு நன்றி:http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/awh/lowres/awhn120l.jpg



No comments:

Post a Comment