Wednesday, October 8, 2014

அறிவு, பார்த்துக்கொள்வது, சுடர்விட்டொளிவரும் நிலை

அறிவு, பார்த்துக்கொள்வது, சுடர்விட்டொளிவரும் நிலை


அதாவது
Knowledge, Care and Fervour

இன்னம்பூரான்
08 10 2014
வருங்காலத்தில் இந்திய சுயராஜ்யம் வல்லரசுகளுக்கும் மேலாக, பாருக்குள்ளே நல்ல நாடாக விளங்குவது சாத்தியமே. பழங்கதைகளை அறவே ஒதுக்காமல், பாரதநாட்டின் தொன்மை சாதனைகளை படிப்பினைகளாக எடுத்துக்கொள்வது நலம். முதற்கண்ணாக, நமது மக்கள் எல்லாரும் கல்விமான்களாக திகழ வேண்டும். விவேகம் பயில, அது உதவும்.  விதண்டாவாதப் பிரியர்கள் என்று அமார்த்தியா சென் அவர்களால் விருது அளிக்கப்பட்ட நமக்கு, அதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக இயங்க, இவ்வாறு பயின்ற விவேகம் உதவும். பாசம் இல்லாவிடினும், மற்ற மனிதர்களுக்கு மதிப்பு அளித்து, சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது ஒரு பாரமில்லை. இந்த செயலுக்கு பல பரிமாணங்கள் உண்டு - ஒரு ஏழைக்குழந்தைக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதிலிருந்து அநாதைப்பிணத்தை நல்லடக்கம் செய்வது வரை. ‘தனக்கு மட்டும்’ என்ற சுயநலம் எவருக்கும் கவசமாக பயன்பட்டதில்லை. ஆனால், அதை அறவே துறந்த மாந்தர்கள் மிகக்குறைவு.  எனினும், இந்திய சுயராஜ்யம் வருவதற்கு முன் தியாகச்சுடர்களாக விளங்கிய தேசபக்தர்கள் சுடர்விட்டொளிவரும் நிலை என்பதற்கு முன்னுதாரணமாக இருந்ததால், தற்கால/வருங்கால இந்தியர்கள் சுடரேற்றி ஒளி பரப்பி இயங்குவதை கற்றுக்கொள்வது எளிதே. நடுநிலை வரலாறு படிக்க வேண்டும். அவ்வளவு தான்.
இந்திய அரசியல் சாசனம் ஒரு மாபெரும் தவறு இழைத்து விட்டது. அடிப்படை கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு பிறப்புரிமை. அதை சாபக்கேடாக, உரிமைகளில் சேர்க்காமல், விருப்பங்களில் பட்டியலில் இணைத்து விட்டதால், அரசும் நழுவியது; மக்களும் கை கழுவி விட்டார்கள்; கல்வித்தந்தைகளும் கொழுத்தார்கள். 60 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கல்வி சீர்திருத்தங்களும், நத்தை வேகத்தில் தான் இயங்குகின்றன. எரிய வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்று கும்பகோணத்தில் நடந்தது போல, கல்வித்துறையில் முறைகேடுகள் மலிந்து கிடக்கின்றன. கேட்பார் இல்லை. எல்லா வேலிகளும் பயிரை கபளீகரம் செய்கின்றன. இவற்றிலிருந்து நிவாரணம் பெற, அரசு இயந்திரத்திடம் போய் தொங்கவேண்டியதே இல்லை. ஓய்வு பெற்றவர்கள் கெளரவ ஆசிரியர்களாக பணி செய்தால் என்ன? ... பெற்றெடுத்த செல்வங்கள் கல்லூரிக்கு போனபின், திருமணம் புரிந்து கொண்டு புகுந்த வீட்டீல் அரசாட்சி செய்யும்போது, தாய்க்குலம் ஏன்  ஏழை பாழைகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது? இத்தகைய தொண்டுகள் கட்டணமின்றி இயங்கவேண்டும். தன்னடக்கமும், கனிவும் இருப்பவர்கள் தான் அச்சத்துடன் விலகி நிற்கும் ஏழை பாழைகளை கவரமுடியும். சிறு துளி பெருவெள்ளம். 
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது இயல்பு. அதில் மனநிறைவு கிடைக்கும். பேச்சளவில் நில்லாமல், ஆஸ்பத்திரிகள், சிறை ஆகியவற்றுக்கு சென்று ஆறுதல் கூறுவது நற்செயல். ஏழையே, செல்வந்தரோ, தனித்து விடப்பட்டு உபாதைகளுடன் வாழ்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். 
கல்கியின் தியாக பூமி படித்தவர்களுக்கு, சுடர்விட்டொளிவரும் நிலை புரியும். தற்கால இந்தியர்களுக்கு, மஹாத்மா பூலே முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் (இன்று அவரது நினைவஞ்சலி தினம். ‘அன்றொரு நாள்’ நினைவுக்கு வருகிறது. என் செய்ய இயலும்?) வரை வரலாறு கற்பிக்கப்படவேண்டும். தாய்க்குலமும், ஓய்வாளர்களும் என்ன செய்கிறார்கள் ~ ஓயாத பேச்சு, அரட்டை, வெட்டிப்பேச்சு, அலர்.
பாருக்குள்ளே நல்ல நாடாகிய இந்தியா, தான் இழந்த சுவர்க்கத்தைத் திரும்ப பெறவேண்டுமானால், படித்த மேதைகளும், ஞானஸ்தர்களும் கல்வி அளிப்பதிலும், மற்றவர்களை பார்த்துக்கொள்வதிலும், சுடர்விட்டொளிவரும் நிலையை பரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

-#-
பின் குறிப்பு: தலைப்பில் உள்ள சொற்களுக்கு மொழிபெயர்ப்பு: அகராதிகள்.
ஆங்கில சொற்கள், பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னலிடமிருந்து இரவல்.
சித்திரத்துக்கு நன்றி:




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, October 4, 2014

சிரிச்சு மாளலெ ~ 12

சிரிச்சு மாளலெ ~ 12

இன்னம்பூரான்
05 10 2014
ஆனை தாண்டாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதை பூனை தாண்டிடுத்து, ஒரே தாவலில்! பரைய்லி நேரு குடும்பசம்பந்தத்தினால் பிரபலமான ஊர். தச்சு வேலை நன்றாக செய்வார்கள். அங்கு ஒரு விந்தை நடந்தது. அகாடா எனப்படும் குஸ்தி மையத்தில் குஸ்தி, மல்லுக்கட்டு (wrestling) பயிற்சி எல்லாம் கனஜோரா நடக்கும். பஹல்வான் என்ற தூய ஹிந்தி பெயர் பயில்வான் என்ற தொன்மை தமிழ் பெயரிலிருந்து தான் வந்தது என்று நீங்கள் மல்லுக்கு நின்றால், நான் தள்ளி நிற்பேன். அத்தனை தகரியம், ஆம்பளையோல்லியோ ! ஸோனு பஹல்வான், ஸோனு பஹல்வான் அப்டின்னு ஒரு தடியாம்பளை. அனுபவம் ஜாஸ்தி, சீனியர் வேறே. அந்த குட்டியை விட 16 கேஜி வைட் அதிகம். அவங்கிட்ட போய் இவ மோதறா. ஹரியானா, ராஜஸ்தான், உத்தராக்காண்ட், மற்ற பல மாநிலங்களிலிருந்து ஜோகி நவாடா கோதாவிலே பல பயில்வான்கள் இறங்கறா. கும் கும்மாங்குத்து ! மக்களாரவாரம் விண்ணை எட்டியது என்று நினைத்தார்கள், அறியா பசங்க. 17 வயதான ருத்ராப்பூரிணி நேஹா தோமார் என்ற பெண் தடியாம்பளைங்களை கூவி அழைக்கிறாள், மல்லுக்கட்டுப் போட்டிக்கு. ஆம்பளைங்களாச்சே. பெண்புத்தி பின்புத்தி என்று அவளை இக்னோர் பண்றாங்க. தொல்லை தாங்காமல், அசட்டு சோனு பஹல்வான் ஒத்துக்கிறாரு. பத்து நிமிடங்களுக்குள், அந்த சாகசக்காரி, சோனு பஹல்வானை மண்ணை கவ்வ வைக்கிறாள். ‘ஆணுக்குப் பெண் சோடையில்லை’ என்பதை நிரூபிக்க வந்தேன் என்றாள் அந்த யெளவன மாது. மேலும் படிக்க:http://timesofindia.indiatimes.com/india/17-yr-old-girl-beats-male-wrestler-wins-hearts/articleshow/44370382.cms
-#-





இன்று தேசாபிமானி சுப்ரமணிய சிவா அவர்களின் 130வது ஜன்ம தினம். இந்த இழையை மீள்பதிவு செய்யவேண்டும் என சில நண்பர்கள் கேட்டதின் பேரில்:
இன்னம்பூரான்
அக்டோபர் 4,2014

அன்றொரு நாள்: அக்டோபர் 4
‘லொட்!லொட்! ‘லொட்!லொட்!  ‘லொட்!லொட்!
இது என்ன ஊன்றுகோலா? அடிக்கற பெருந்தடியா? அதை விட்றா! அவர் கண்களிலிருந்து தீப்பொறி பறக்கிறதே. பயமா இருக்கு. தொள, தொளன்னு சொக்காய். பஞ்சகச்சம். கோணலா தலைப்பா. உள்ள நுழையறபோதே அதட்டறாரே! அதுவும் சின்ன முதலியாரை விளக்கெண்ணைய் என்கிறார். ‘வழ வழ வெண்டைக்காய் என்கிறார். அதுவா? சுப்ரமண்ய சிவா வந்திருக்கார். வேப்பமரத்தடிக்கு கூட்டிண்டு போ. அவரோட பேச்சுக்கொடுக்காதே. அவா பேசிக்கட்டும். இடம்: சாது அச்சுக்கூடம்.நவசக்தி ஆபீஸ். திரு.வி.க. தான் சின்ன முதலியார். அவ்வப்பொழுது நவசக்தியில் எழுதும் சிவா அவர்கள் சண்டை போட வந்திருக்கிறார். பரதநாட்டிய நர்த்தகி ருக்மணி தேவியை ஜார்ஜ் சிட்னி அருண்டேல் திருமணம் செய்வதை ஆதரித்த திரு.வி.க. அவர்களை நாவினால் சுட வந்திருக்கிறார், இந்த தீப்பொறி.
(தனிச்செய்தி: ஹிந்து, சுதேசமித்திரன் எல்லாம் இந்த விஷயத்தில் திரு.சிவா கட்சி.)

[‘Saunters in Subramania Sivam (Sivam) (1884-1925), the spit-fire patriot clad in a loose shirt, furled dhoti and tilted turban tut-tuting his inseparable staff. The staff and his flowing beard remind one of a domineering Moses. Having shattered the calm in Navasakthi [4] office, he aggravates the situation by loudly hailing for the ‘castor-oil Mudaliyar’, his epithet for ThiruViKa. His other epithets for him are, ‘vendaikkai’ and ‘vazha vazha’, all insinuating that there is no ‘cut and thrust’ to his writings. A contributor to the weekly himself, he had come to tongue lash him for supporting an Indian marrying a foreigner. Rukmini Devi (1904-1986), the classical dancer, was marrying George Sidney Arundale (1878-1945), the Theosophist. Leading lights like the Hindu and Swadesamithran had deplored it.] 

ஒழுங்கா இருக்கு! போங்கோ! திரு.வெ.சாமிநாத சர்மா அவர்கள் எழுதியதை ஆங்கிலாக்கம் செய்து, அதை தமிழாக்கம் செய்தது மேலே. எல்லாம் அடியேன் உழவாரப்பணி தான்.


அக்டோபர் 4, 1884 சிறைப்பறவையும், விடுதலை வீரரும், ஆன்மிக எழுத்தாளரும் ஆன சுப்ரமண்ய சிவா அவர்களின் அவதார தினம். அவர் நீதி மன்றத்தில் அளித்த வாக்குமூலங்களில் ஒன்று:

''நான் ஒரு சந்யாசி. முக்தியடையும் வழியைப் பிரச்சாரம் செய்வதே என் வேலை. அதன் தத்துவங்களை எடுத்து விளக்கி அதை அடையும் மார்க்கத்தை போதிப்பதே என் வேலை. சகலவிதமான வெளி பந்தங்களினின்றும் விடுவித்துக் கொள்வதே ஆத்மாவிற்கு முக்தியாகும். இதே போன்று ஒரு தேசத்தில் முக்கியாவது - அந்நிய நாடுகளின் பிடிப்பினின்றும் விடுவித்துக் கொள்வது; பரிபூர்ண சுதந்திரம் அடைவது. அதையே இந்நாட்டு மக்களுக்கு நான் போதிக்கிறேன். அதாவது, சுதந்திர லட்சியம் அதை அடையும் மார்க்கம். புறக்கணிப்பது - சுதந்திரப் பாதையில் குறுக்கே நிற்கும் எதையும் - சாத்வீக முறையில் எதிர்ப்பது, சுதேச கல்வி இவையேயாகும்.''

நான் சம்பந்தப்பட்டவரை இவரை போன்ற சான்றோர்கள் அவதார புருஷர்களே. அப்படித்தான் எழுதுவேன். நாற்பதே வருடங்கள் வாழ்ந்து, ஜூலை 23, 1925ல் மறைந்தார். அதில் 14 வருடங்கள் [1908 -22] ஜெயிலுக்குப் போக வேண்டியது;வரவேண்டியது. குஷ்டரோகம் வேறு சிறைச்சாலை தந்த பரிசு. அது பெருவியாதியாம். ரயிலில் ஏற அனுமதி இல்லை. சிவா அவர்கள் கால்நடையாகவும், கட்டை வண்டியிலும், தமிழ் நாடு முழுதும் சுற்றினார். 2011 ஜூலை மாதம் பேப்பர்க்காரங்க ந்யூஸ்: இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவு; 48 அடி உயர கோபுரம். 40 லக்ஷம் ரூபாயாம். பெண்ணாகரத்தில் சிவா அவர்களுக்கு மணிமண்டபமாம்! அவருக்கு தெரிஞ்சா என்ன சொல்வாரோ? ஏன்னா நீங்க ம.பொ.சிவஞான கிராமணி என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? பெரிய மீசையும், பெரிய ஆசையும் ( நாட்டின் மேல் தான், ஸ்வாமி!) வச்சவருக்கு கின்னஸ் பரிசு என்றால், இவருக்குத் தான் போகும்! அவர் ஒரு புத்தகம் போட்டார், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' என்று. சிலப்பதிகாரம் பற்றி இந்த ‘சிலம்புச்செல்வர்’் எழுதிய சில நூல்களை, ஒரு மின் தமிழருக்கு பரிசளிக்க வாங்கியபோது, "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை' இல் படித்தது

"...சிதம்பரம் பிள்ளையவர்களுடைய அந்திம நாட்கள் வறுமையால் வாடிப்போனதாக நேர்ந்தது தமிழ்நாட்டின் தப்பிதமேயாகும். அடிமைத்தனம் மிகுந்து விலங்கினங்கள் வசிக்கும் காடாந்தகாரமாக இருந்த தமிழ் நாட்டில் கல்லையும் முள்ளையும் களைந்து படாத துன்பங்களைப் பட்டுப் பண்படுத்தி தேசாபிமானம் என்ற விதையை நட்டுப் பயிர்செய்து பாதுகாத்த ஆதி வேளாளனாகிய சிதம்பரம் பிள்ளை துன்பம் நிறைந்த சிறைவாசத்தையும் கழித்து வெளியே வந்தபோது தமிழ்நாடு அவரைத் தக்கபடி வரவேற்று ஆதரிக்கத் தவறிவிட்டது...
சுப்ரமண்ய பாரதியார் சோறின்றி வாடிக்கொண்டே பாடிக்கொண்டு மறைந்தார். சுப்ரமண்ய சிவா ஊரூராகச் சென்று பிச்சைக்காரனைப்போல் பிழைத்து மாண்டார். தமிழ்நாட்டுத் தியாகிகளுள் தலைவரான சிதம்பரம் பிள்ளை வறுமையில் வாடியும் ஓசையில்லாமல் தமது கடைசி நாட்களைக் கஷ்டங்களிலேயே கழித்து ஒழித்தார்''.

அணிந்துரையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை: (1946 ம் வருட இரண்டாம் பதிப்பு)
"அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவின் அனுமதியுடன் டாக்டர் பட்டாபி சீதாராமய்யா வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செüரிசெüரா சத்தியாக்கிரகம், நாகபுரிக் கொடிப்போர், பர்தோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறுசிறு இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளனவே தவிர, சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரிகூட, ஏன் ஒரு வார்த்தைகூட இல்லை'' என்பதை "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. பதிவு செய்யும்போது அன்றும் எனக்கு விழியில் நீர்கோத்தது; இன்றும் கோத்தது...’
ஆறாம் திணையில் படித்ததில் ஒரு பகுதி:
வ.உ.சி.யையும் பாரதியையும் பற்றித் தமிழகம் அறிந்தளவிற்கு சிவம் கண்டறியப்படவில்லை. சுப்பிரமணிய சிவம் (1884-1925) தமிழக சமூக அரசியல் ஆன்மிகக் கருத்தியல் தளங்களில் இயங்கிய முனைப்பு தீவிர பரிசீலனைக்கும் கவனிப்புக்கும் உரியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதியின் முன் சிவம் கொடுத்த வாக்குமூலம், அவரது நோக்கு? அவர் யார்? என்பதை நன்கு தெளிவாக்குகிறது.

தமிழ் நேஷன் என்ற கழட்டிவிடப்பட்ட இணைய தளத்தில்:

‘...சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும்.
இதில் விடுபட்டுப்போன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம். எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை...

...சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884 ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார்...இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் (அவற்றில் ஒன்று கூட இப்பொது நமக்கு கிடைக்கவில்லை )... 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை...

...1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த தாவுர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார். இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூவுர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியெற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக்கெதிராக பிரச்சாரம் செய்து வந்தார்...

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர்... சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்ச சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கெலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்ழய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மொசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வை கூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர்...தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்...1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார்.
சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார்...அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, பொராட்டங்களோ இல்லை என்றெ சொல்லலாம். அவற்றில் எல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துணிச்சல் மிக்கவர்.
காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை. சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம்... தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாசைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் சிலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்...சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர்.இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வார்ழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முழத்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார். அவரும் நாடகத்தில் பங்கெற்று நடித்துள்ளார். ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார். 
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.
இன்னம்பூரான்
04 10 2011


உசாத்துணை:

.http://www.dinamani.com/edition/story.aspx?Title=இந்த%20வாரம்%20%20கலாரசிகன்&artid=379074&SectionID=179&MainSectionID=17

சிலருடைய கருத்துக்கள்:
‘சத்தியம்.  பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் படிக்கப் படிக்கச் சுவை.  நன்றி பகிர்வுக்கு.’ (கீதா)
*
எல்லா கனவுகளையும் நீங்கள் நனவாக்காவிடினும், தேசாபிமானத்தையாவது உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளவும். அதை நிரூபிக்கும் வகையில், ஒரு வரி விடாமல், இந்த இழையை படித்து விட்டேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள். நாலு பேருக்காவது சுப்ரமண்ய சிவா அவர்களின் பாமர கீர்த்தி பாடிக்காண்பித்தேன் என்று சத்திய பிரமாணம் செய்யுங்கள்.

இன்னம்பூரான்
04 10 2011
*
சத்தியம்! ஏகப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு! நன்றி! (ராஜம்)

-#-

Friday, October 3, 2014

என்னத்தைச் சொல்ல! – 5

என்னத்தைச் சொல்ல! – 5


இன்னம்பூரான்
அக்டோபர் 3, 2014

சட்டமீறலுடன் உடன்படும் பொதுமக்களின் பேராசையும், குறுக்குவழி அணுகுமுறையும், சுயநலமும் தான், பெரும்பாலும், லஞ்சலாவண்யங்களின் ஊற்று என்று நான் சொல்லிவருவதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை. இன்றைய ஹிந்து அப்டேட் செய்தியை (http://www.thehindu.com/news/cities/bangalore/size-of-fake-experience-certificate-scam-growing/article6466529.ece?homepage=true)பாருங்கள். குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக ஏழு கம்பெனிகள் மீது படையெடுத்திருக்கிறார்கள், பெங்களூரில். அதை கண்டு வியந்த ஒரு உலகளாவிய ஆய்வுக்களம் அம்மாதிரி 9500 கம்பெனிகள் இந்தியாவில் இருப்பதாகவும், அந்த பிரச்னை பூதாகாரமாக வளர்வதாகவும் கூறியதுடன் நிற்காமல், போலீஸ் கமிஷனருக்கு வரைந்த மடலில் கூறும் தகவல்கள்:
  1. கல்வி, வேலைவாய்ப்பு,முகவரி விஷயங்களில் அவை புகுந்து விளையாடுகின்றன.
  2. படித்த ‘மேதைகள்’ தாம் அவற்றை நடத்துகிறார்கள்.
  3. இம்மாதிரியான ‘டுபாக்கூர்’ கம்பெனிகளில் சில அரசு துறையில் பதிவு செய்து கொண்டவை; சில வருமான வரி கட்டுகின்றன. சில வலைத்தளம் வைத்து கொழிக்கின்றன. ஆனால் அவை யாவும் நிழல் குட்டிச்சாத்தான்கள்.
  4. இவற்றுக்கு பின்னால் ஒரு மாபெரும் மாஃபியா உளது.
  5. போலீஸிடம் புகார் செய்தோம். மேலதிக விவரம் தருவதாக சொன்னோம். எல்லாம் கிணற்றில் போட்ட கல்.
  6. எனவே, இந்த கழிசாடை விவரங்கள் எல்லாவற்றையும் எங்கள் தளத்தில் (http://rezorce.com) போட்டுவிட்டோம். அவை எல்லாம் இப்போது பொது மன்றத்தில்.
  7. போலீஸ் வருமுன்காப்போனாக செயல்பட வேண்டும். அது தான் முக்கியம்

அப்டேட்டுக்கு அப்டேட்: இத்தருணம், குற்றவியல் துறை பொய் சான்றுரைகளை அளித்ததற்காக 50 கம்பெனிகள் மீது கண் வைத்துள்ளார்கள், பெங்களூரில்.

மனிதன் விழைகிறான். இராக்கதன் தருகிறான். தேவன் மெள்ள மெள்ள வருகிறான்.

என்னத்தைச்சொல்ல !
-#-


சித்திரத்துக்கு நன்றி: http://www.freemanart.ca/images/Dali_Certificate_authenticity_web_001.gif

Wednesday, October 1, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்.... அல்லது லபோ திபோ; II

ஆலப்பாக்கத்து அக்கம்பக்கத்து நண்பர்களே,
இது என்றோ ஒரு நாள் எழுதியதின் மீள்பதிவு. இங்கு செல்லுபடியாகுமா என்றறியேன். விருப்பமுள்ளவர்கள் பகருக.
ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒரு இந்தியர் அங்கு நடத்திய புரட்சி இன்று இங்கு ஏன் நடக்காது?
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

அன்றொரு நாள்: நவம்பர் 6
கல்லும் கரைந்த கதை
கல்லையும் போட்டார். அதை கரைத்தும் கொடுத்தார்.
Was he the Pied Piper of Hamelin? அல்லது மகுடியூதி மயக்கிய பிடாரனா, இந்த பிச்சுக்குப்பன்? காலை 6:30 மணிக்கு 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, ஊர் எல்லை கடந்தார். சுட்டுப்புடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள், வியப்புடன், இந்த இரண்டுங்கெட்டான் படையை முறைத்து பார்த்தனர். வாளாவிருந்தனர். வழி நெடுக விருந்தோம்பல். சாயும் வேளை. கிட்டத்தட்ட 5000 பேர். ராத்தங்க முகாம் தயாரிக்கும்போது, கைது செய்தார்கள். உடனே ஜாமீனில் விடுதலை. இது ஆரம்ப கட்டம். ஒரு உரையாடல், அதற்கும் முன்னால்.
*
‘என்னிடம் யாது குறை? எனக்கு சிறை செல்ல தகுதி இல்லையா?’
‘சரி, உன் இஷ்டம்,’
*
சட்டத்தை மீறி, எல்லை கடந்து, சில பெண்கள் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து நேட்டாலுக்கு விஜயம். அவர்களை அரசு கைது செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து, மேற்படி உரையாடலுக்குப் பிறகு, சில ஃபீனிக்ஸ் குடியிருப்பு பெண்கள் ட்ரான்ஸ்வாலுக்கு பயணம். கைதாயினர், அவளும் உள்பட.நேட்டாலில் புகுந்த பெண்கள் ந்யூகேஸ்சில் நிலக்கரி சுரங்கபூமிக்கு சென்று, அடிமையாகாத தொழிலாளிகள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, சுரங்கத்தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்ய சொன்னார்கள். அந்த பெண்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொதி நிலை. அருமையாக போற்றி வளர்த்தத் தங்கள் பெண்ணினம் பட்ட அவதியை கண்டு இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். அடிமைகள் தொழிலாளிகளுடன் இணைந்தனர். சூத்ரதாரியும் பிரசன்னம். அவர்களை, சுரங்கத்தை விட்டு விட்டு தன்னுடன் பிராந்தியம் கடந்து, சிறை செல்ல ஆயத்தமாக வரச்சொன்னார். அவர்களும் சம்மதித்தனர். இந்த காலகட்டத்தில் தான் கைது/ஜாமீன்.
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
அந்த கைது/ஜாமீன் எல்லாம் பாசாங்கு. அவரை என்ன செய்வது என்று தான் அரசுக்கு புரியவில்லை. எட்டாம் தேதி, மறுபடியும் சிறையடைக்கும் படலம். மாஜிஸ்ட் ரேட் ஆணை. ‘ஓஹோ! எனக்கு பிரமோஷன்!’ என்று ‘நறுக்’ ஜோக் அடித்தார். மறுபடியும் ஜாமீன். மறுபடியும் யாத்திரை. ஐயாவை கைது செய்தால், பின் தொடருபவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஊஹூம்! வன்முறை வந்தால் தாக்கலாம் என்று பார்த்தார்கள். ஊஹூம்! அண்ணல் சொன்னதால், அமைதி; பூரண அமைதி. ‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் காரியதரிசியிடம், ‘ஜெனரல் இந்த அபாண்ட வரியை தள்ளுபடி செய்தால், நான் சட்டத்தை மீறும் இந்த யாத்திரையை நிறுத்தி விடுவேன்’ என்றார். அவர்கள் ‘உன்னால் ஆனதை பார்’ என்று சொல்லி, அந்த பேச்சை கடாசி விட்டார்கள். 9ம்தேதி மூன்றாம்முறை கைது. 11ம் தேதி 9 மாத கடுங்காவல் தண்டனை. மூன்றே நாட்களில் மற்றொரு குற்றச்சாட்டு. + 3 மாதம். கூட்டாளிகளும் கைது. தொழிலாளிகள் கட்டி இழுத்து ரயிலில் போடப்பட்டு திருப்பப்பட்டனர். அவர்கள் சிறைப்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆள்? அதனால், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊஹூம்!  அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு தோன்றியது. நன்கொடையும், உதவியும் வந்து குவிந்தது. ஏன்? இந்தியாவின் வைஸ்ராயே தென்னாஃப்பிரிக்க அரசின் போக்கைக் கண்டித்தார். எல்லா தென்னாஃப்பிரிக்க சுரங்கங்களிலும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம். ஆயிரக்கணக்காக சிறையில். ராணுவம் மக்களை சுட்டுத் தள்ளியது. அண்ணல் காந்தி சொல்கிறார், ‘தென்னாஃப்பிரிக்க அரசு விழுங்கிய எலியை முழுங்கவும் முடியாமல், உதறவும் முடியாமல் இருக்கும் பாம்பு போல் தவிக்கிறது’. அப்படி தவித்த ஜெனெரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார். என்ன பிரயோஜனம்? இந்தியர்கள் சத்யாக்ரஹிகளை விடுதலை செய்யவேண்டும் என்றனர். இந்த விசாரணை கமிஷனில் ஒரு இந்திய தரப்பு (வெள்ளையனாக இருந்தாலும்) அங்கத்தினர் வேண்டும் என்றனர். ‘எலி விழுங்கிய’ ஸ்மட்ஸ் முடியாது என்றார். 1914 வருட புத்தாண்டு தினத்தில் மாபெரும் வேலை நிறுத்தம் என்று பிரகடனம் செய்தார், காந்திஜி.
இங்கு தான் முதல்முறையாக, காந்தீயம் தலையெடுத்து, ஜெனெரல் ஸ்மட்ஸ்ஸின் கல்மனதை கரைத்தது. அதே சமயத்தில், தென்னாஃப்பிரிக்காவே ஒரு ரயில் வேலை நிறுத்தத்தால் தவிக்க நேரிட்டது. காந்திஜி தன்னுடைய சத்யாக்கிரஹத்தை ஒத்தி வைத்தார், உன் இன்னல் என் ஜன்னல் அல்ல என்றார். ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி காந்திஜியிடம்: ‘ நீங்கள் எங்கள் கஷ்டகாலத்தில் கை கொடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது எப்படி கை வைக்க முடியும்? நீங்கள் வன்முறை பாதையில் சென்றால், உங்களை கையாளும் விதம் எங்களுக்கு தெரியும். நீங்களோ தன்னையே ஆஹூதி செய்து வெற்றி காண்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?’
ஜெனெரல் ஸ்மட்ஸும் காந்திஜியும் பேசிக்கொள்கிறார்கள். கடிதப்போக்குவரத்து வேறே. பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்தன. அபாண்ட வரி தள்ளுபடி. கிருத்துவ முறை அல்லாத விவாகங்களை சட்டம் அனுமதித்தது. ( இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்.) ‘என் கடன் முடிந்தது’ என்று 20 வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார், காந்திஜி. ஒரு மாபெரும் சத்திய சோதனைக்கு பிறகு. பிற்காலம், இந்தியாவின் விடுதலை வாங்கிக்கொடுத்தது அதுவல்லவா. 
இந்தியாவுக்கு திரும்பும் முன், காந்திஜி ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு, தான் சிறையில் தைத்த ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தார். பல வருடங்களுக்கு பின்னால், ஸ்மட்ஸ் கூறியது, “ பல வருடங்களில் வேனில் காலத்தில் நான் அந்த காலணிகளை அணிந்துள்ளேன். ஒரு மாமனிதரின் காலணிகளில் நிற்க எனக்கு தகுதி உண்டா என்று தான் நினைத்துப்பார்ப்பேன்.’
இது தான் கல்லும் கரைந்த கதை.
இன்னம்பூரான்
06 11 2011
1913 Mohandas Gandhi was arrested while leading a march of Indian miners in ...
Indian women join Gandhi's passive resistance campaign
உசாத்துணை:
This biography was written by Roberta Strauss Feuerlicht and is reprinted here with the permission of the copyright holderஇன்னம்பூரான்
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....
அல்லது
லபோ திபோ; II




இது ‘லபோ திபோ’ விசிறியான பாசக்கவி இசக்கி பரமசிவன் ஸ்பெஷல்.

டிசம்பர் 2013 மாதக்கடைசியில் இங்கிலாந்துக் குளிரிலிருந்து தப்ப சென்னைக்கு டிக்கெட் எடுக்க களத்தில் இறங்கின மறுநாள் ஒரு ஆணை பறந்தோடி வந்தது. மின் தமிழ்/வல்லமை சுமை தாங்கிகளில் புகுந்து விளையாடும் சில இழுபறி இழைகளைப்போல, அது என்னை திசை மாற்றியது. சாராம்சம்: ‘இங்கேயும் போலார் வோர்டெக்ஸ் பொழியும் பனிமாரி பல அடிகள் கனம். வண்டி எடுக்கமுடியாது; ஆனா வேலைக்கு போகவேண்டும். நடுநிசியானாலும் அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இங்கே வந்து விடு. குளிர் ஜாஸ்தி; கம்பிளி ஆடையெல்லாம் எடுத்து வா. இரண்டு மாசம் ஆனப்பறம், நானே உன்னை அழைத்துச் செல்கிறேன். டிக்கெட் அனுப்றேன்.’ டொக். பேச்சுக்கு இடம் இல்லை. பெண்ணாணையாச்சே. ஃபெப்ரவரி முதல் தேதி வாக்கில், அமெரிக்கா வந்து பனிமழை இற்செறிப்பு. அமெரிக்கா அரைவலின் அதிகப்படி ஆதாயம், பெண்ணியத்தின் நுட்பங்கள் பலவற்றை தனது விசேஷ படிப்பினாலும், தொழில் அனுபவத்தால் ஆராய்ந்த பல வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க ஒரு தருணம்  கிட்டியது. ‘சொன்னால் விரோதம்’ சரி தான். பல நாட்கள் உலாவ முடிந்தது. சிலநாட்கள் நூலகமே கதி. சனி, ஞாயிறு பார்ட்டீயிங். 

அதற்கு முன்னாலேயே இந்தியாவுக்கு ஏப்ரல் 2 கிளம்ப டிக்கெட் எடுத்தாச்சு; அதற்கு முதல் நாளுக்கு டிக்கெட் எடுந்திருந்தால், பரமசிவனார் 

‘தேதியே! ஏப்ரல் முதல் தேதியே! 
மதி கலங்கவைக்கும் தேதியே!
பேதி மாத்திரை கொடுக்காதே!
நீதி நெறி பாடம் எடுக்கும் எசக்கி நானே!

என்று பாடியிருப்பார். ஆனால் விதியை வெல்ல என் செய்யலாம்? போனதென்னெமோ சைனாவுக்கு! ஐயமிருந்தால், விமான கம்பெனியை கேளுங்கள். திட்டப்படி அமெரிக்காவிலிருந்து யுனைட்டட் ஏர்வேஸ், ஃப்ராங்க்ஃபெர்ட் வரை. அங்கிருந்து லுஃப்தான்ஸா சென்னைக்கு. எம்டன் குண்டு: ஏப்ரல் இரண்டு முதல் மூன்று நாட்கள் லுஃப்தான்ஸா விமான ஓட்டிகள் ஹர்த்தால். ஸ்டட்கர்ட் வரை கொண்டுபோய் விட்றுங்கோ. ஸுபாஷிணியை பாத்ததா ஆச்சு என்று கேட்கச்சொன்னேன். விந்தையாக என்னை முறைத்துப்பார்த்த பெண் சொன்னாள்,’ How impractical. You are always like this. மூன்று மணி நேரம் கப்சிப் ஆக இரு’ என்றாள். டெலிஃபோன்/ கம்ப்யூடர்/டெலிஃபோன்/ கம்ப்யூடர் சுழன்றன, விஷ்ணுச்சக்கரம் மாதிரி. பின்னர் ஃபைனல் ஆர்டர். நாம் ஏப்ரல் முதல் தேதி கிளம்பறோம். கிட்டத்தட்ட அதே பிளான். என்றாள், அப்பீல் இல்லை என்று குறிப்பால் உணர்த்தினாள். கிளம்பினோம்.

கிளம்பினோமா? சிகாகோவில் யுனைட்டெட் ஏர்வேஸ் விமானம் ஸ்மார்ட்டாக நின்று கொண்டிருந்தது. ஸ்டார்பக்ஸ்லெ போய் ஒரு கப் காஃபி அருந்தி விட்டு வந்தால், ஒரு பேரிடி.
‘இந்த விமானம் ரிப்பேரு. பதில் விமானம் வர ஒரு மணியாகும். அந்த டிலே ஈடு கட்டமுடியாதது என்பதால், நாங்கள் இறங்குவதற்கு முன்னாலே லுஃப்தான்ஸா சென்னை விமானம் பறந்தோடியிருக்குமே. தீவிர விசாரணையில் இறங்கினோம். வந்த பதில்கள்:

‘ Oh! how sad!/ we do not know when the replacement plane can come to the bay/
Some solution will be found/you must be carrying spare clothing/ the worst is you would be stranded in a Teutonic hotel for 3 days/ enjoy!/ we will try to reroute you through Paris. OK?/ இத்யாதி.

இசைகேடா நான் சொன்னேன். எஃப்பீல் டவர் பாத்துட்டு வரலாம். பொண்ணு முறைத்தாள். அதற்குள் பதில் விமானம் வர, 90 நிமிடம் தாமதம், அது கிளம்ப. ‘ஈஶ்வரோ ரக்ஷது’ என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு ஏறிவிட்டாலும், கவலை பிடுங்கித் தின்றது. God helps only those who help themselves. என்று மீனா டீச்சர் சொல்லிக்கொடுத்து இருக்காங்களே. எப்படி தோசையை திருப்பிப்போட்டு இங்கிதமாக பேசி விவரம் கேட்டாலும், ஸ்டாக் ரிப்ளை: We have no way of telling you. Wait for landing. இவள் என்ன அதை சொல்றது என்று கருவிக்கொண்டே, விமான பயணம் பற்றிய வீடீயோவை, பகவத் கீதை படிக்கிறமாதிரி போட்டுக்கொண்டே இருந்தேன். அதில் இறங்கப்போகும் வாசல், கனெக்டிங்க் விமானம் பற்றிய தகவல்கள் கொட்டும். அந்த அசரீரி திருப்பித்திருப்பி கூறியது:

‘ இந்த விமானம் பீஜீங்க விமான தளத்தின் முதல் டெர்மினலில், இன்னு 23 நிமிடங்களில் இறங்கும். சைனா விஸாவை கையில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இல்லையென்றால், அனுமதி மறுக்கப்படலாம். ஜெயிலில் போட்டாலும் போடுவார்கள். சாக்கிரதை. ‘லொட்! லொடட்! தட தடா! பிளேன் இறங்கிடுத்து. எனக்கு பெரிய சந்தேஹம்: ஈஷ்வரன் லீவுல்லே போயிட்டாரோ?
எப்படி சென்னை வந்தோம்னு கேட்கிறீர்களா?
(தொடரும்)
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி


Sunday, September 28, 2014

இந்தியா 2014 -2

இந்தியா 2014 -2

உடனுக்குடனே இதை எழுதுவதாக இல்லை. ஆனால் பிரதமர் மோடி இப்படி செய்து விட்டாரே! சற்று முன் அவர் மேடிசன் சதுக்கத்தில் ஆற்றிய உரை முழுவதையும் கவனத்துடன் கேட்ட பிறகு, ஹிந்து இதழில் நான் தெரிவித்த கருத்து.
‘கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஒரு மாபெரும் புரட்சி வரும். தலைகள் உருளும். உதிரம் சிந்தும். வன்முறை தலை தூக்கும்.இந்த தாங்கொண்ணா துன்பத்திற்கு பிறகு, விவேகம் திரும்பும்.’
என் நண்பர்களுக்கு இது பிடிக்கவில்லை. உள்ளதை சொல்கிறோம் அல்லவா. தேசீய தேர்தல் 2014 நடந்த பின்னும், புரட்சி நிகழும் என்றும் அதன் தீவிரம் தணிந்து இருக்கும் என்று நினைத்தேன். வரலாறு காணாத வகையில் நமது பிரதமர் மோடி, இயல்பாக, கடுதாசி வைத்துக்கொள்ளாமல் பல நற்செய்திகளையும், சீரிய கருத்துக்களையும், வருங்கால நடவடிக்கைகளை பற்றியும் மேற்படி உரையில் கூறியதையும், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பையும் கண்ட பின், வரப்போகும் புரட்சி அமைதியாகவும், சத்தம் போடாமலும் நிகழும் என்ற கனவு எனக்கு மேலோங்கி நிற்கிறது. உள்மனது உடனுக்குடனேயே பகிர்ந்து கொள்ள சொன்னது. அவர் கூறிய பெரிய உரையிலிருந்து சில அரிய கருத்துக்களும் செய்திகளும்:
  • இந்தியா தான் 21ம் நூற்றாண்டில் உலகை வழி நடத்தும்.
  • கவலைக்கும் ஏமாற்றத்துக்கும் இடமில்லை. இந்தியாவின் இளைய சமுதாயம் சாதனை படைக்கும்.
  • அமெரிக்காவில் பலநாடுகளிலிருந்து வந்தவர்கள் உளர். இந்தியர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
  • நடைமுறையில், இந்தியா வீசா எளிதில் கிடைக்கும். என்.ஆர்.ஐ.களுக்கு நியாயமான சலுகைகள் கிடைக்கும்.
  • எல்லோரும் வந்து வடம் பிடிப்பீர்களாக.
மற்றதை ஊடகங்களில் படித்துக்கொள்ளவும். 

சித்திரத்துக்கு நன்றி: http://i.ytimg.com/vi/APva4nVmXFA/0.jpg

Saturday, September 27, 2014

இந்தியா 2014 ~1




இந்தியா 2014 ~1
இந்தியாவின் தற்கால வரலாற்றில் இவ்வருடம்/ இம்மாதம்/ இவ்வாரம் ஒரு நிரந்தரமான, புகழ் மங்காத, என்றும் மகிழ்வுடன் பேசப்படுவதாக அமையும். சில முக்கியமான நிகழ்வுகள்: விண்வெளி சாதனை, மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம், 1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை, உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை ஆகியவை. ஒவ்வொன்றை பற்றியும் பலரும் எழுதியிருப்பார்கள். அவற்றை பற்றி சற்றே நீண்ட கட்டுரைகள் இன்றியமையாதவை. எனவே, இந்த பதிவை ஒரு முன்னுரையாக பாவிக்கவும்.
மங்கல்யான் விண்கலம்



இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நவம்பர் 5, 2013 அன்று  அனுப்பிய ஆளில்லா மங்கல்யான் விண்கலம், திட்டமிட்ட படி, இம்மி பிசகாமல், இம்மாதம் 24ம்தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இந்திய விஞ்ஞானிகளின் சாதனை மெச்சத்தக்கதே. இதனால் யாருக்கு ஆதாயம்? அந்த பணத்தில் ஏழைகளுக்கு மான்யம் கொடுக்கலாமே என்று ஒரு சமூக ஆர்வலர் ஆதங்கப்பட்டார். ஆனால், இந்தியாவில் ஏழைகளின் மான்யத்தை கபளீகரம் செய்தது ஏழைகள் அல்ல. செல்வமும், அதிகாரமும் படைத்தவர்கள். ஆவின் நீர்பால் துரோகம் 1990 திலிருந்து நடப்பதாக, இன்றைய செய்தி. ஏதாவது சிந்திய துளிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.பிள்ளையார் கோயிலாண்டி என்றுமே ஊருக்கு இளைத்தவன் தான். இது வரலாறு. இஸ்ரோவுக்கு திரும்புவோம். பல துறைகளில் சாதனை படைப்பதின் மூலம் இந்தியாவுக்கு உலகளவில் மதிப்பு கூடுகிறது என்பதும் உண்மை. எதற்கும் ஒரு நெருடலை ஜீரணித்துக்கொள்வோம். ஊழல் மலிந்த பாரத தேசத்தில் விஞ்ஞானிகள் நிறைந்த இந்திய விண்வெளி மையமும் சிக்கிக்கொண்டது, சிலகாலம் முன்பு. தவறு இழைத்தவர்கள் நீக்கப்பட்டாலும், விவகாரம் தீர்ந்தபாடில்லை.
மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம்



கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மின் வெளிச்சம் போட, ரயில் வண்டி ஓட்ட, மற்றும் பல ஆலைகள் இயங்க தீனி போடும் நிலக்கரியை தோண்டி எடுப்பதில் மணலை கயிறாக திரிப்பதை விட மாயாஜாலங்கள் செய்து ஊரையும் உலகையும் ஏமாற்றி, ஏழைபாழை கூலிகள் வயிற்றில் அடித்து நடந்த ஊழல்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து, 214 நிலக்கரி சுரங்க ‘முரண்’ உடன்படிக்கைகளை ரத்து செய்து விட்டது. உள்ளதை சொன்னால் உடம்பு எரிச்சல் என்பது சொல்வழக்கு. ஆடிட்டர் ஜெனரல் சொன்னால் கபில் சைபால் போன்ற பிரகஸ்பதிகளுக்கு மூக்கு நுனியில் எள்ளும் கொள்ளுமாக எள்ளல் வெடிக்கும். திரு. சாக்கோ போன்றவர்கள் சாக்கு போக்கு சொல்லி வெள்ளைக்கடுதாசியில் மசி பூசுவார்கள். உச்ச நீதி மன்றம் ஆடிட்டர் ஜெனெரல் போட்ட கணக்கு சரி என்று சொல்லி விட்டது. சட்டவிரோதமாக அனுமதி பெற்ற முதலாளிகள் ஒரு டன்னுக்கு ரூபாய். 295 வசூலிக்கவேண்டும் என்று தீர்வு. உலகளவில் எல்லா நாளிதழ்களும் நம்மீது நமது உற்பத்தியான சகதியை வீசிவிட்டார்கள். மனோஹர் லால் சர்மா என்ற மனுதாரர் அரசுக்கும், அந்த வழியில் மக்கள் இழந்த நஷ்டத்தை விளைவித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். மாட்டிக்கொள்பவர்களில் பிஜேபி கூட்டணியும் உளது. அக்டோபர் 8, 2014 அன்று இது விசாரணைக்கு வரும். அதுவரை அநேகர்கள் வயிற்றில் புளி கரைகிறது. நான் அந்த தீர்வையும் ஊடக செய்திகளையும் முழுதும் படித்தேன். அயோக்கியர்களுக்கு பஞ்சமில்லை, நம் நாட்டில். முழுதும் எழுத மஹாபாரதம் போல் நீண்டு விடும். ஒரு பிள்ளையார் கிடைத்தால், சொல்லிப்போடலாம்.

1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை



இன்று எல்லார் வீட்டிலும் இந்த பெங்களூரு வழக்கில் செல்வி. ஜெயலலிதாவுக்கும், அவரது பாங்கிகளுக்கும் கிடைத்த சிறை தண்டனை, அபராதம், ஆங்காங்கே கலவரங்கள், மத்திய அரசின் அறிவுரை வகையறா தான் பேச்சு. Justice delayed is better than Justice denied என்ற தோற்றம். இது கூட முதல் கட்டம் தான். 18 வருடங்களாக இழுத்த ஜவ்வுமிட்டாய் கரைந்து பாகற்காய் சாற்றுடன் கலந்து விட்டது. நான் அந்த வரலாறு படைத்தத் தீர்வை இன்னும் படிக்க இயலாததால், இதற்கு மேல் எழுத வில்லை, திரு. ராஜ்நாத் சிங் சொல்வது போல. இது நிற்க. இங்கிலாந்தில் காரை அதிக வேகத்தில் ஓட்டி, மாட்டிக்கொள்ளாமல் இருக்க மனைவியை பினாமியாக்கிய அமைச்சருக்குப் பொய் சொன்னததற்காக சிறை, அபராதம் எல்லாம். கூட்டுப்பொய்யர் மனைவிக்கும் அவ்வாறே. போதாக்குறையாக, அரசுக்கு ஆன செலவை அவர்களிடமிருந்து வாங்குவதாக ஆர்டர். 

உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை




சற்று முன் தான் அவருடைய உரை நிகழ்ந்தது, ஹிந்தியில் பேசினார். ஏற்புடைய வகையில் ஆங்கில சொற்களை கலந்தார். சில மேற்கோள்கள்:
  • இதோ எழுபது வயது ஆகப்போகிறது, நமக்கு. எண்பது வரை காத்திருக்க வேண்டுமா? சீரமைப்புகள் உடனடி தேவை.
  • பாகிஸ்தானுடன் அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார். பயங்கரவாதத்தில் நிழல் கூட படக்கூடாது.
  • உலகை ஒரு குடும்பமாக இந்தியா பாவிக்கிறது. வஸுதேவ குடும்பகம்.
  • இந்தியாவில் பொருளியல், சமுதாய முன்னேற்றங்கள் பெருகி வருகின்றன.
  • சராசரி இந்தியனின் எதிர்ப்பார்ப்புகளை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பயங்கர வாதத்தில் நல்லது/தீயது என்று பாகுபாடு கிடையாது.
  • சர்வதேச யோக தினம் அனுஷ்டிக்கலாம்.

மேலும் பல நற்கருத்துக்களை உரைத்தார். எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அதனால், இது போதுமே.
சித்திரங்களுக்கு நன்றி: 




Tuesday, September 16, 2014

சிரிச்சு மாளலெ ~ 11

சிரிச்சு மாளலெ ~ 11

இன்னம்பூரான்
16 09 2014
கொத்தமங்கலம் சுப்பு காந்தி மகான் கதையை எழுதி வில்லுப்பாட்டு பாடியதால், அண்ணல் காந்தியின் ‘சத்தியசோதனையுடன்’கூட்டணி வைத்தது சுப்பு என்பது தப்பு இல்லையோ? அல்லது தியாகபிரம்மத்தின் கீர்த்தனையை பாடியதால், அதை இயற்றயதில் நித்யஶ்ரீக்கு பங்கு உண்டு என்பது என்ன நியாயம்? பிளேட்டோவின் தத்துவங்களை தெளிய தமிழில் அளித்த திரு.வெ.சாமிநாதசர்மாவின் பணி மகத்தானது. அதற்காக, அவரை பிளேட்டோவின் பத்து நாள் தாயாதியாக்கலாமோ?
இது மாதிரியான பயித்தராத்தனம் ஒன்று அண்மையில் நடந்ததாக நேற்றைய செய்தி. சிரிச்சு மாளலெ என்றாலும் அழுகையும் வரது! பின்னெ என்ன? பல வருஷங்களுக்கு முன்னால் பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் சாதி ஒழிப்புப் பற்றி ஆய்வுகள் பல செய்த பின், விவரமான, ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்று எழுதினார். தலித் சமூகம் அதை வேதபாடமாக கருதுகிறது. தற்காலம் அதை மையத்தில் பொருத்தி, உரையும் கறையுமாக (annotated Critical edition) அருந்ததி ராய் கொணர, அதை பதிப்பித்த VersoBooks.com என்ற ஆங்கில பிரசுரகர்த்தா, இந்த மாமியும் சேர்ந்து அம்பேத்காரும் எழுதிய நூல் என்று விளம்பரப்படுத்தியது. அம்பேத்கார் பெளத்தமதத்தில் தன்னை இணைத்துக்கொண்டதால், மறு பிறவி எடுத்து, அருந்ததி ராய் அம்மையாரை நாடி வந்து தன்னை புதுப்பித்துக்கொண்டார் என்று கணக்குப்போடுதோ அந்த நிறுவனம் என்று தோன்றினாலும், Home Shop 18 என்ற இணையதள விற்பனையாளரும், ஆனானப்பட்ட அமேஜான் நிறுவனமும், இதே பயித்தராத்தனத்தை மட்டும் செய்யவில்லை. தலையில் சகதியை வாரி இறைத்துக்கொண்டன. Home Shop 18 அருந்தியார் மட்டுமே எழுதினமாதிரி, அவருடைய மற்றொரு நூலை முன் வைத்து, சங்கூதுகிறது. அகமதாபாத் நிறுவனமான Infibeam அம்பேத்காரின் பெயரை, கோழிக்குஞ்சை அமுக்றமாதிரி, அமுக்கி தள்ளி விட்டு, இது விளக்க உரை என்பதையும் சொல்லாமல், மாமியே புத்தகாசிரியர் மாதிரி விளம்பரம் செய்துள்ளது. அமேஜான் தலையில் கை வைத்தது: ‘The Annihilation of Caste (Hardcover – October 7, 2014) by Arundhati Roy (author), B.R. Ambedkar (author).’ ரிஷிமூலம், நதி மூலம் பார்க்கப்போனால், ஒரிஜினல் பிரசுரகர்த்தாவின் பெயர் நவாயனா. அவர்கள் தான் VersoBooks.comக்கு ‘இல்லாத’ காப்புரிமையை விற்று விட்டார்கள். இணையதள பெருமக்கள், ‘ஐயகோ! காப்புரிமை மீது வன்முறை; திருட்டுச்சொத்து’ என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவர். வெர்ஸோ தப்புத்தான், கணினி குழப்பம்  என்கிறது. டெக்னிகல் எர்ரராம், இந்த டெர்ரர்! வெர்ஸோ, அமேஜான், இன்ஃபிபீம் தவறை நிவர்த்தி செய்தாலும், செய்த தவறின் தழும்பை அழிக்க முடியவில்லையே. அது விளம்பர உத்தி என்கிறார், ஒரு தலித் பிரமுகர். யார் கண்டா? நாளைக்கு 
தடித்தாண்டவராயன், கம்பன் (2014) ‘இராமகாதை’ ‘annotated Critical edition’: சென்னை: தடாலடி பதிப்பகம்.
என்ற நூல் வெளிவரலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.combinedbook.com/blog/wp-content/uploads/2014/02/selfpubbed6.png

Saturday, September 13, 2014

என்னத்தைச் சொல்ல ! ~4


என்னத்தைச் சொல்ல! – 4
  1. Friday, September 12, 2014, 5:38

–இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=50443



ைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.
ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:
  1. உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
  2. அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
  3. நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
  4. மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
  5. அப்படியானால் என்ன முடிவு?
  6. இல்லையென்றால், ஏன்?
  7. நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
  8. ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
  9. இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?
என்னத்தைச் சொல்ல?

-#-


இன்னம்பூரான்
10 09  2014
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

www.olitamizh.com

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg