Google+ Followers

Tuesday, July 12, 2016

இன்னம்பூரான் பக்கம் நான் ஆண்டவனின் திருவோடு

இன்னம்பூரான் பக்கம்
நான் ஆண்டவனின் திருவோடு
இன்னம்பூரான்
ஜூலை 12 , 2016


இந்த படத்தை கண்டவுடன், எனக்கு என்னமோ மஹாத்மா காந்தி தான் பொக்கைவாய் சிரிப்புடன் வந்து நிற்கிறார். தென்னாப்பரிக்காவில் அவர் ஒரு அமைதியான கிளர்ச்சியை துவக்கி வைக்கிறார், அரசு இந்திய திருமணங்கள் செல்லாது என்ற விதியை நிர்ணயித்த போது. அது தான் உலக வரலாற்றில் முதல் அமைதி புரட்சி எனலாம். ஒருவர், இருவர் என புறப்பட்ட ஊர்வலம், குஞ்சும் குளவானும், படி தாண்டா பத்தினிகளும், ஆயிரக்கணக்கில் புடை சூழ, களை கட்டி விட்டது. தாட்பூட் தஞ்சாவூர் என்று பயமுறுத்திய அரசு கையை பிசைந்து கொண்டு அப்பாவியாக நிற்கிறது. அந்த காலகட்டத்தில் ரயில்வே ஹர்த்தால் அறிவிக்கப்படுகிறது. ‘உங்களுக்கு அதனால் வேலை அதிகம். உங்களுக்கு உதவியாக என் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன்’ என்று அரசுக்கு அவர் எழுத, அதிபர் ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி, ‘உங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.’ என்று நன்றி கூறுகிறார். முழு விவரமும் ‘அன்றொரு நாள்’ தொடரில் எழுதியிருக்கிறேன். ரோஸா பார்க் அவர்களும், மார்டின் லூதர் கிங்கும் அவ்வாறே பவனி வந்தார்கள்.  யாராவது கேட்டால் மீள்பதிவு செய்யலாம். இது நிற்க.

சில சித்திரங்கள் வரலாற்றின் மையக்கருவான வினாடியை கையகப்படுத்தி, அதை நிரந்தர பதிகமாக பதிந்து விடுகின்றன.
ஆழ்ந்து கவனித்தால், அவை இயல்பாகவே அமைந்தவையாக இருக்கும். காந்திஜி உப்பு அள்ளுவதும், டியான்மென் சதுக்கத்தில் டாங்கி முன் சமாதான புறாவாக நின்ற மனிதனும், வியாட்நாம் போரில் விஷவாயு வெடியால் பற்றிய தீயுடன் ஓடி வந்த பெண்குழந்தையும், நாஜி கொடுமைகளும், போரிலிருந்து திரும்பிய ராணுவவீரன் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு பெண்ணை கட்டி முத்தமிடுவதும், ஜான் கென்னடியின் சவப்பெட்டிக்கு சலாம் அடிக்கும் சிறுவன் ஜான் ஜானின் படமும், சென்னை வெள்ளத்தில் மனிதாபிமானத்துடன் பணி செய்த சில ஆர்வலர்களின் மனிதநேயப்படங்களும், மற்றும் பலவும் எண்ணில் அடங்கா. சிந்தியா காக்ஸ் உபால்டோ இந்த படத்தையும் அந்த வரிசையில் சேர்கிறார்.

இந்தியாவில் இன்றளவும் தீண்டாமை ஒழிக்கப்படாத காலகட்டத்தில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மிகவும் முன்னேறியுள்ளார்கள். ஜனாதிபதியே அந்த பின்னணியை சார்ந்தவர். எனினும், இன்று கூட அந்த இனத்தினரை போலீசார் கடுமையாக தண்டிக்கும் நிகழ்வுகள் லாஸ் ஏஞ்சலஸ், சைண்ட் லூயிஸ், பேடன் ரூஷ் போன்ற இடங்களில் நடந்துள்ளன. அவர்களில் சிலர் சுட்டுத்தள்ளப்பட்டனர். அல்டன் ஸ்டெர்லிங் என்பவர் ஜூலை 9 2016 அன்று அவ்வாறு
சுடப்பட்டு இறந்தார்.  

அதை கண்டிக்கும் வகையில் நேற்று நடந்த கிளர்ச்சியில் பங்கு கொண்ட ஒரு இளம்பெண்ணின் படம் இது. ஏதோ ராக்ஷஸர்கள் போல் பலவிதமான பயங்கரமான தளவாடங்கள் அணிந்த போலீஸ் இருவர் இந்த பெண்ணை கைது செய்ய வருகிறார்கள். மயில் ராவணன் தோற்றான். அத்தனை ஜோடனை. பின்னால் ஒரு அசுர படையே நிற்கிறது.
சுற்றி வர சூறாவளி அடிக்க, சாந்தஸ்வரூபிணியாக அதன் மையத்தில் தனது மெல்லிய ஆடை காற்றில் அசைய, முகத்தில் அகத்தின் அமைதி நிலவ, நிற்கிறாள் இந்த பெண். அவள் பெயர்  இஷியா ஈவான்ஸ். ஜோனாதன் பக்ஹ்மன் எடுத்த இந்த நிழற்படம் உலகம் முழுதும் சுற்றி விட்டது. திருமதி ஈவான்ஸ், ‘எல்லாருக்கும் நன்றி. இது இறைவனின் செயல். நான் இறைவனின் திருவோடு மட்டும் தான்' என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி

படித்தது: உலகாளவிய நாளிதழ்கள்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com